திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் (இயக்குனர் ஏ எல் விஜய்யின் தந்தையான) ஏ எல் அழகப்பனும் பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சாம் பாலும் இணைந்து வழங்க, சத்யராஜ், யூகி சேது, அனு மோள் புது முகம் வருண் ஆகியோர் நடிப்பில் எடிட்டர் ஆண்டனி இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ஒரு நாள் இரவில் .
ஷட்டர் என்ற பெயரில் மலையாளத்தில் வந்து ஹிட் அடித்து அதே பெயரில் மராத்திக்கும் போய் ஹிட் ஆகி, தமிழுக்கு வந்திருக்கும் கதை இது. படத்துக்கு நைட் ஷோ என்று ஆரம்பத்தில் பெயர் வைத்தவர்கள் இப்போது ஒரு நாள் இரவில் என்று மாற்றி இருக்கிறார்கள்.
ஒரு நடுத்தர வயது மனிதரின் சிறு சபலம் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கும் இந்தப் படத்தில் , பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும் காட்சிகளை வைத்து இருக்கிறார்களாம் .
புதுமுகம் வருண் மறைந்த நடிகர் ஐசரி வேலனின் பேரன் . வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ஐசரி கணேஷின் சகோதரி மகன் . இந்தப் படத்தை அடுத்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் வினோதன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இவர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு போலீஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார் .
“மலையாளப் படத்தை விட தமிழ் படம் நாற்பது நிமிடங்கள் குறைவாக வந்துள்ளது . அந்த அளவுக்கு படத்தை நறுக்குத் தெறித்தாற்போல உருவாக்கி இருக்கிறார் ஆண்டனி . அதோடு தமிழுக்கு ஏற்ற அளவு மாற்றங்களையும் செய்துள்ளோம் “ என்கிறார் இயக்குனர் ஏ எல் விஜய் .
இயக்குனர் ஆகி விட்ட எடிட்டர் ஆண்டனி என்ன சொல்கிறார்?
“பெரிய பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் படத்துக்கு எடிட்டராக பணியாற்றி இருந்தாலும் , இயக்குனர் என்று வரும்போது எளிமையான யதார்த்தமான கதைகளை இயக்கவே ஆசைப் பட்டேன். ஷட்டர் படம் அதற்கு பொருத்தமாக இருந்தது . எனவே இதை முதல் படமாக இயக்கினேன் .
அடுத்து இதே போல ஒரு எளிய கதை கிடைத்தால் இயக்குவேன். அது சொந்தக் கதையாகவும் இருக்கலாம்
ஆனால் எடிட்டிங்கை விட டைரக்ஷன் ரொம்ப கஷ்டம் . எடிட்டிங் சும்மா ஒரு ரூம்ல ஏசி ரூம்ல உட்காந்துகிட்டே பாத்துடலாம் . ஆனா டைரக்ஷன்னா எல்லாததையும் நாமதான் உருவாக்கணும் . அது பெரிய விசயமா இருக்கு “ என்று கூற ,
குறுக்கிட்ட இயக்குனர் ஏ எல் விஜய் “ முன்ன எல்லாம் நாம டைரக்ட பண்ண படத்தை இவர் கிட்ட எடிட்டிங்க்கு கொண்டு போனா , என்னப்பா சீன எடுத்து இருக்கீங்க ..” அப்படி இப்படின்னு ரொம்ப கலாய்ப்பார். ஆனா இப்போ அப்படி எல்லாம் சொல்றது இல்லியாம் . ஏன்னா டைரக்ஷன் எவ்ளோ கஷ்டம்னு அவருக்கு புரிஞ்சிடுச்சு “ என்றார் . (இதை புரிய வைக்கத்தான் படம் கொடுத்தீங்களா விஜய் சார்?)
படத்தைப் பற்றி இயக்குனர் விஜய் ரொம்ப தன்னம்பிக்கையோடு அடிக்கடி சொன்ன வாசகம் “படம் போட்டு இருபது நிமிஷத்துக்கு அப்புறம் சீட்டு நுனிக்கு வந்துடுவீங்க . படம் முடியற வரை அசையக் கூட மாட்டீங்க . இன்டர்வெல் ல கூட எல்லாரும் படத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்று பதட்டத்திலேயே இருப்பீங்க “
அப்படியே ஆகுக !