கந்தர்வா கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா, ராஜேஷ், பால் டிப்போ கதிரேசன் ஆகியோர் தயாரிக்க மனோ தீபன் , அஸ்திரா, மீனேஷ் கிருஷ்ணா , அபினிதா ஆகியோர் நடிப்பில், பெ.மோகன் இயக்கி இருக்கும் படம், ஒரு தோழன் ஒரு தோழி .
படம் ரசிகர்களுடன் தோழமையாக இருக்குமா ? பார்க்கலாம் .
கிராமத்து நண்பர்கள் இருவர் (தீபன் , மீனேஷ் கிருஷ்ணா ). அதில் ஒருவன் (தீபன் ) , ஏழை இளம்பெண் ஒருத்தியை (அஸ்திரா) காதலிக்கிறான் . அப்பாவோ சகோதரனோ இல்லாத அந்தப் பெண்ணின் குடும்பம், ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒரு அயோக்கியனிடம்(பகவத்) சில லட்ச ரூபாய்கள் பணம் வாங்கிய நிலையில் அதற்கு கந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறது .
அதை சாக்காக வைத்து அந்தப் பெண்ணை வளைக்கத் துடிக்கிறான் அந்த வட்டிக்காரன் . ஆனால் நெருப்பு மாதிரி வாழும் அவள், இந்த பிரச்னையால்,தன்னை உண்மையாக காதலிக்கும் நாயகனின் அன்பையும் புறக்கணிக்கிறாள் .
நண்பர்களில் இன்னொருவனான இளைஞன் (மீனேஷ் கிருஷ்ணா ) குடிப்பழக்கம் உடையவன் . அவனை உண்மையாக நேசிக்கும் அவனது மாமன் பெண்ணை (அபினிதா ) அவன் உதாசீனப்படுத்துகிறான். அதில் அந்த பெண்ணுக்கு ஊழி வருத்தம்.
முதல் நாயகனின் காதலுக்கு தூது போகிறான், மாமன் பெண்ணின் அன்பை புறக்கணிக்கும் குடிகார நண்பன். ஒரு நிலையில் அந்த ஏழைப்பெண்ணும் நாயகனின் காதலை ஏற்கிறாள் . ஆனால் அவள் மேல் குறி வைக்கும் வட்டிக்காரன், நாயகன் மீது கோபம் கொள்கிறான் . விளைவாக வட்டிக்காரனுடன் பகை உருவாகிறது .
அதே நேரம் அந்த ஏழைப்பெண், தன் காதலனின் உயிர் நண்பன் மீது மிக கண்ணியமான நேர்மையான உளமார்ந்த நட்புக் கொள்கிறாள். அவள் அறிவுரைப்படி குடிப்பழக்கத்தை விடும் நண்பன், தன் மாமன் பெண்ணின் காதலையும் ஏற்கிறான் .
நண்பன் மற்றும் அந்த மாமன் பெண்ணின் காதலானது, முத்தங்கள் மற்றும் அணைப்புகள் வரை முன்னேறுகிறது . ஆனால் ஏழைப் பெண்ணோ தன் காதலனின் கை தெரியாமல் படுவதைக் கூட விரும்புவதில்லை. “ஏழைப் பெண்ணான என்னால் உனக்கு தர முடிந்த ஒரே கல்யாண சீதனம் என் உடல்தான். அதை நான் கல்யாணத்துக்குப் பிறகே தர ஆசைப்படுகிறேன் . . எனவே நான் படித்து முடித்து வேலைக்குப் போய் என் குடும்பம் பட்ட கடனை அடைக்கும் வரை காத்திரு ” என்கிறாள் அவள் .
அதே போல படித்து கல்லூரியில் முதல் மாணவியாக தேறி ஒரு வேலையும் கிடைத்த நிலையில், அரசியல் செல்வாக்கும் ஆள் பலமும் கொண்ட வட்டிகாரனால் இந்தக் காதலுக்கு பிரச்னை வரும் என்று பார்த்தால் ….
அந்த ஏழைப் பெண்ணின் ‘கல்யாண சீதனத்’துக்கு செல் போன் வீடியோ ஒன்றின் மூலம் ஆபத்து வர, அது உயிர் பலி வரை போக, அந்த ஏழைப் பெண்ணின் அறிவிக்கப் படாத ஆசையை நிறைவேற்றியது காதலனா ? இல்லை தோழனா என்பதே இந்தப் படம் .
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் எளிமை . வறுமையும் வறட்சியும் தாண்டவம் ஆட, ஆட்களின் எண்ணிக்கையே அருகி விட்ட , தென் தமிழ் நாட்டு – வெயில் தின்னும் – கிராமத்தை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார்கள் .
எந்த ஒரு காட்சியிலும் அதிக பட்சம் ஐந்து பேர் மட்டுமே இருக்கிறார்கள். கும்பல் நிற்கும் காட்சியில் கூட அதிக பட்சம் இருபது பேருக்கு மேல் இல்லை. தயாரிப்புச் சிக்கனம் என்பதையும் தாண்டி , அது பொருத்தமாகவும் இருப்பது பாராட்ட வைக்கிறது .
ஏழைப் பெண் நாயகி கதாபாத்திரத்துக்கு – கமர்ஷியல் சினிமா விதிகளுக்கு உட்பட்டு கொழுக் மொழுக் குஷ்புப் பெண்களை தேடாமல்- கேரக்டரின் தன்மைக்கு ஏற்ற ஒல்லியான கருப்பான கதாநாயகியை (அஸ்திரா) நடிக்க வைத்து இருப்பது சிறப்பு.
படத்தில் நடித்த யாருக்கும் மேக்கப் இல்லை என்பதால் நாம் பார்ப்பது சினிமா அல்ல ; ஒரு யதார்த்த நிகழ்வு என்ற உணர்வு ஏற்படுகிறது . அதே போல் படத்தில் வரும் துணை மற்றும் சிறு கதாபாத்திரங்களாக மண்ணின் மைந்தர்களையே நடிக்க வைத்திருப்பது அந்த யதார்த்தத் தன்மைக்கு யானை பலம் சேர்க்கிறது.
ஏழைப்பெண் நாயகியின் கதாபாத்திரம் மனோவியல் ரீதியாகவும் அற்புதமாக பின்னப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
இந்த விசயங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் பெ.மோகன் .
மனோ தீபன் , அஸ்திரா, மீனேஷ் கிருஷ்ணா , அபினிதா நால்வரும் இயல்பாக நடித்துள்ளனர் என்பதை விட , புழங்குகிறார்கள் என்பதே சரி.
ஜெய் கிரிஷ் கொடுத்து இருக்கும் இசை , சிவன் குமாரின் ஒளிப்பதிவு இவை ஓஹோ இல்லை என்றாலும் படம் காட்டும் எளிமையான சூழலுக்கு பொருந்துகின்றன.
வசனம் பெரும்பாலும் பக்குவமில்லாமல் இருந்தாலும் “உழைக்கத் தெரியாத சோம்பேறிங்க அந்தக் காலத்துல பணம் னு ஒரு விசயத்தை கண்டு பிடிக்காம, வேலை செஞ்சாதான் சோறுங்கற நிலைமையே தொடர்ந்து இருந்திருந்தா.. நாம எல்லாம் என்ன கதிக்கு ஆளாகி இருப்போம் ‘ என்று வட்டிக்காரன் சொல்வது உள்ளிட்ட சில இடங்களில், சிந்தனை அளவில் சிலாகித்துப் பாராட்டும்படியும் இருக்கிறது.
அதே போல நாயகனின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் தங்கள் காதலை பிரிக்க நண்பன் முயல்வதை உணரும் ஏழைப் பெண் நாயகி , அந்த நண்பனை வெகு இயல்பாக சைக்கிள் பந்தயத்துக்கு அழைப்பது , வெற்றியை விட்டுக் கொடுப்பது போன்ற காட்சிகளும்,…
” காதலை விட நட்பு உயர்ந்தது . (இது படம் எடுத்தவங்க கருத்து . இந்த விசயத்தில் நிர்வாகம் யாதொரு பொறுப்பையும் ஏற்காது ) . அவன் என்னை காதலிச்சுத் தொலைசுட்டான் . பரவால்ல. நீ எனக்கு பெஸ்ட் ஃபிரண்டா இருப்பியா?” என்று நண்பனிடம் நாயகி கேட்கும் காட்சிகளும் படத்தின் உயர்தள(ர)க் காட்சிகள்.
சைக்கிள் பந்தயத்துக்கு அழைப்பது , வெற்றியை விட்டுக் கொடுப்பது போன்ற காட்சிகள் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு தொடர்நிகழ்வாக வருவதும், அதில் கிளைமாக்சில் தலை கீழ் மாற்றம் நிகழ்வதும் , திரைகதையில் ஓல்டு ஸ்டைல் என்றாலும் கோல்டு ஸ்டைல்தான்.
முதல் பாதியில் பல காட்சிகளில் காமெடி என்ற பெயரில் கதறக் கதறக் கழுத்தறுக்கிறார்கள். ஹலோ..ஓ ஓ ஓ ! தாங்க முடியலீங்க . நண்பனின் தம்பியாக வரும் சிறுவன் மட்டும் இரண்டு வசனங்களில் தியேட்டரை கலகலக்க வைக்கிறான்.
செயற்கை சண்டைக் காட்சிகள் தவிர்க்கப்பட்டது சரிதான் . அதற்காக ஒருவரை ஒருவர் அடிப்பது போல நடிக்கவாவது வேண்டாமா ? முகத்தருகே போகும் கைகள் கன்னங்களை உரசாமலே கடப்பதும் ,ரொம்ப மெதுவாக தயங்கி அடிப்பது போல பூச்சு… பூச்சு.. பூச்சாண்டி காட்டுவதும் ரொம்பக் கொடுமை .
இயக்குனர் மோகன் படமாக்கிய விதத்தால் நிகழ்ந்த தப்பா? படத் தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான கிருத்திகா தொகுத்த விதத்தில் நடந்த தப்பா என்று தெரியவில்லை……. பல ஷாட்களில் நடிகர்கள் நடிக்கத் துவங்குவதற்கு முன்னால் செய்யும் யத்தனங்கள் –தொழில் நுட்ப ரீதியாக சொன்னால் ஸ்டே (stay) — பல காட்சிகளில் அப்படியே தெரிகிறது .
நல்ல நோக்கத்துக்காக கண்டுபிடிக்கப்படும் செல்போன் போன்ற தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்த என்றே ஒரு கும்பல் உருவாவதும் ,அதனால் நடக்கும் மன்னிக்க முடியாத குற்றங்கள் ,பரிதாபத்துக்கு உரிய பாதிப்புகள் தொடர்கதையாவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில்….
சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கொடூரமாக தண்டிப்பது தவறே இல்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றுதான். அதில் எ எள்ளளவிலும் சந்தேகம் இல்லை .
ஆனால் அப்படி அநியாயமாக பாதிக்கப்படும் நல்லவர்கள் அப்பாவிகள் ஒழுக்க சீலர்கள் கூட, தங்களை தாங்களே தண்டித்து கொள்வது, மாய்த்துக் கொள்வது தவிர வேறு வழியில்லை என்ற கருத்துக்கும் வலு சேர்ப்பது என்ன நியாயம் ?
‘ஒரு பெண்ணின் நிர்வாண உடல் தவறான நோக்கத்தில் தவறானவர்களால் பார்க்கப்பட்டால் அது அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் அசிங்கம் இல்லை. அப்படிப் பார்க்கும் அயோக்கியர்களுக்குதான் அவமானம். அவர்களைத்தான் நிர்வாணமாக்கி ரோட்டில் ஓட விட வேண்டுமே தவிர, தெரியாமல் நடந்த தவறுக்கு பாதிக்கப்பட்ட பெண் தன்னை தண்டித்துக் கொள்ளத் தேவை இல்லை’
— என்ற கருத்துருவாக்கத்தை நாம் எல்லாம் எப்போது உருவாக்கப் போகிறோம் ? அதுதானே பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டும் கும்பலுக்கு மரண அடியாகவும் இருக்க முடியும் ?
தியாக பூமி , புது வசந்தம் , இது போன்ற எளிய படங்கள் சிறிய படங்கள் இப்படிப்பட்ட புரட்சிகரமான சிந்தனைகள் மூலம்தானே வெற்றிப் படங்கள் ஆயின. (வால்டர் வெற்றி வேல் படத்தில் ரஞ்சிதா நடித்த கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறதா?)
அதை விடுத்து ஒரு பெண்ணே தயாரித்து படத் தொகுப்பும் செய்த ஒரு படத்திலேயே…. அதுவும் 2015 ஆம் ஆண்டில் கூட… இப்படி ஒரு பிற்போக்குத்தனமான கிளைமாக்ஸ் இடம் பெறுவதைப் பார்க்கும்போதுதான் ….
சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பாகவே அக்கினிப் பிரவேசம் சிறுகதையை எழுதிய ஜெயகாந்தன் எவ்வளவு பெரிய பெண்ணிய முற்போக்குப் படைப்பாளியாக இருந்திருக்கிறார் என்பதை இன்னும் ஒரு படி மேலே உணர முடிகிறது .
ஒரு தோழன் ஒரு தோழி …… எதிரி இல்லை .