கெனன்யா பிலிம்ஸ் சார்பில் J.செல்வகுமார் தயாரிக்க,
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெரைட்டியாக வந்து இருக்கும் பாடல்கள் இப்போதே செம ஹிட் .
அவற்றில் நூறாண்டுகளுக்கு முன்பு கோபால கிருஷ்ண பாரதி எழுதிய ‘எப்போ வருவாரோ ..’ என்ற பாடலும் ஒன்று . ‘அடியே அழகே…’ என்ற பாடல் இளைஞர்களை ஈர்க்கிறது
கோகுலின் சிறப்பான ஒளிப்பதிவில் பாடல்களை மிக அட்டகாசமாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன் .
இவை தவிர,
ஆண்கள் – பெண்கள் ,படித்தவர் – படிக்காதவர் , ஏழை – பணக்காரர் சந்தோஷமாக இருப்பவர் — நொந்து போனவர் என்று… சமூகத்தின் பல தட்டு மக்களிடமும்,
அவர்களின் கல்யாண சந்தோஷ — விரக்தி அனுபவங்கள் , கல்யாண வரவு — செலவு , கல்யாணத்துக்கு முந்தைய — பிந்தைய வாழ்க்கை என்று கதம்பமாகக் கேள்விகள் கேட்டு அவர்களின் பதில்களை பெற்று,
ஓர் ஆவணப் படமாகக் காட்டினார்கள் . அவர்களில் ஓர் ஆட்டோ டிரைவர் சும்மா ஆங்கிலத்தில் ஸ்டைலாக பொளந்து கட்டிப் பேசுகிறார் பாருங்கள்…அபாரமோ அபாரம் .
“என்ன நெல்சன் .. செட்டப்பா?” என்று கேட்டால் ” சேச்சே …. முழு ஒரிஜினல் . அவர் ஆங்கிலோ இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ ஓட்டுகிறவர் .
அந்த மாணவர்களிடம் பேசிப் பேசி அப்படி சூப்பர் ஸ்டைலாக இங்க்லீஷ் பேச ஆரம்பித்து விட்டார் . அதுக்கு அப்புறம் அவரை தேடினேன் . கிடைக்கவே இல்லை ” என்கிறார் .
அதுவும் பலரும் தமிழில் தங்கள் சொந்தக் கதை சோக சுகக் கதைகளை பேசிக் கொண்டு இருக்க , எடிட்டர் சாபு ஜோசப் சரியான டைமிங்கில் அவர் ஆங்கிலத்தில் பேசும் ஷாட்களைப் போட,
ஆட்டோ டிரைவர் பேசும்போது எல்லாம் கைதட்டல் குவிகிறது .
தமிழில் இப்படி ஒருசுவையான ஆவணப் படம் வேறு இருக்குமா என்று தெரியவில்லை .
இந்த விளம்பர ஆவணப் படம் ஒரு நாள் கூத்து திரைப் படத்தின் உள்ளீட்டை, குணாம்சத்தை …அவ்வளவு அட்டகாசமாக அந்த படம் விளக்கி விடுகிறது . செம செம …. !
பண்பலை வானொலியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணியில் ஒரு நாள் கூத்து படத்தின் கதைக் களத்தை அமைத்து இருக்கிறார்நெல்சன் வெங்கடேசன் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வசனகர்ததா சங்கர் தாஸ் ( இவர் கல்லூரியில் நெல்சனுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் ) .
” நெல்சன் எனது மாணவன் என்பதில் எனக்கு ஒரு பெருமை உண்டு .
எனது சிறுவயதில் எங்கள் ஊரில் இருந்த ஓர் அழகான கண்ணியமான நல்ல பெண்மணி , ஒரு அநியாயமான அவமானத்தை சந்தித்தார் . அதற்குக் காரணம் அவரது கல்யாணம் .
ஒரு நாள் இதை நான் நெல்சனிடம் கூற , கிட்டத்தட்ட அதே கருத்தியலில் கல்யாணம் பற்றிய ஒரு கதையைச் சொன்னார் நெல்சன் . இருவரும் தொடர்ந்து பேசினோம் . அப்படித்தான் இந்தப் படம் உருவானது .
கண்டிப்பாக இந்தப் படம் சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பும் . அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமையும் ” என்றார் .
ஒளிப்பதிவாளர் கோகுல் பேசும்போது
“மிக சிறப்பான கதை திரைக்கதை வசனம் இந்தப் படத்தில் இருக்கிறது . அப்புறம் இந்தப் படத்துக்கு அமைந்த நடிக நடிகையர் அப்படி சிறப்பாக பொருந்தி அமைந்தார்கள் .
அவர்கள் நின்றாலே ஃபிரேம் அழகாகி விடும். அதுவே பெரிய பலமாக இருந்தது ” என்றார் .
நடிகர் ரமேஷ் திலக் பேசும்போது
” நான் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்த எனக்கு தலைவராக நிகழ்ச்சித தயாரிப்பாளராக இருந்தவர் நெலசன் . அவர் இயக்கும் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது .
இதுவரை எனக்கு அமையாத ஒரு நல்ல கேரக்டரைக் கொடுத்து இருக்கிறார் . ” என்றார்
ரித்விகா பேசும்போது
” இந்தப் படத்தில் எனக்கு ரேடியோ ஜாக்கி வேடம் . அதற்காக பல நாட்கள் ஒரு ரேடியோ நிலையத்துக்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தேன் .
இப்போ எல்லாம் சினிமாவில் பெண்களுக்கு கேரக்டர் ரீதியா முக்கியத்துவம் இருக்கறது இல்ல . ஆனா இந்தப் படத்துல அப்படி இல்லை .
பெண் கேரக்டர்களுக்குதான் முக்கியத்துவம் அதிகம் . எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் இது ” என்றார் .
இன்னொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் மிஸ் துபாய் பட்டம் பெற்றவர் . ஆனால் அடிப்படையில் மதுரைப் பொண்ணு .
எனவே ‘நற்றமிழி’ல் பேசிய நிவேதா பெத்துராஜ்
“படத்தின் காஸ்டியூம் டிசைனர் ஜெயலக்ஷ்மி மூலமாக எனக்கு வந்த வாய்ப்பு இது .தினேஷுடன் நடித்தது சந்தோஷமான அனுபவம்.
படத்தில் நிறைய கேரக்டர்கள் . ஆனால் எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு நல்ல நேர்த்தியும் , கேரக்டகளுக்கும் கனெக்ஷனும் நன்றாக இருந்தது . எல்லா கேரக்டர்களும் காட்சிகளும் சூப்பராக வந்தது .
ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட் கண்டிப்பபா வெற்றி பெறும் ” என்றார் . (பேசுறதப் பார்த்தா, பாப்பா டைரக்டர் சேர்ல உட்காரும் போல தோணுதே )
மியா ஜார்ஜ் தன் பேச்சில்
” இந்தப் படத்தில் நான் நடித்து இருக்கும் லக்ஷ்மி என்ற கேரக்டர் அட்டகாசமான கேரக்டர் . என்னால் எப்பவும் மறக்க முடியாத கேரக்டர் .
இந்தக் கேரக்டரில் என்னை நடிக்க வைத்த டைரக்டர் நெல்சனுக்கும் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கும் நன்றி ” என்றார் .
பால சரவணன் பேசும்போது
” இந்தப் படத்துலதான் முதல் முதல்ல என்னை குளிக்க வச்சாங்க . தலை சீவி பவுடர அடிக்க எல்லாம் விட்டாங்க. இதுவரை பண்ணின படங்கள்ல இதை எல்லாம் பண்ண விட்டதே இல்ல .
படத்துல நகர்ப்புற இளைஞன் கேரக்டர . இதுக்கு என்னை கூப்பிட்டப்போ நானே நம்பல. ஆனா நான்தான் நடிக்கனும்னு தயாரிப்பாளர் செல்வகுமார் உறுதியா சொன்னார் ,
டைரக்டர் நெல்சன் சாரும் அதை அங்கீகரிச்சார். படத்துல பாக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருந்தது. அவ்ளோ நல்லா வந்திருக்கு ” என்றார் .
கருணாகரன் தன் பேச்சில்
” நல்ல கதை . நல்ல சீன்ஸ் . நல்ல வசனம் . எனக்கு நல்ல கேரக்டர் . படம் கண்டிப்பான நல்லா ஓடும் .
அப்புறம் முக்கியமா நடிகர்களை புரடியூசர் தரப்பில் ரொம்ப நல்லவிதமா கவனிச்சாங்க..சில படங்கள்ல நடிக்கும்போது நான் ஒரு பேல் பூரிக்காக எல்லாம் சண்டை போட்டு இருக்கேன் .
கேட்டா சென்னை முழுக்க பெல் பூரியே இல்லன்னு சொல்வாங்க . ஆனா இந்த கம்பெனியில் அப்படி இல்லாமல் நல்ல உபசரிப்பு இருந்தது ” என்றார் .
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது
” இசையில் தன் கதைக்கு என்ன வேணும் என்பதில், டைரக்டர் நெல்சன் தெளிவா இருந்தார் .
அதனால வரைட்டியாக பாடல் பண்ண முடிஞ்சது . இப்பவே எல்லா பாடலும் ஹிட் ஆனதுல ரொம்ப சந்தோசம் . பின்னணி இசையும் நல்லா இருக்கும் .படம் எல்லாருக்கும் பிடிக்கும் ” என்றார் .
தினேஷ் தனது பேச்சில் “இந்தப் படத்தோட உண்மையான ஹீரோன்னா அது இந்த மூன்று ஹீரோயின்கள்தான்
அவங்க கூட நான் இருக்கேன் . ஆனா ஒரு நடிகனா நான் மிஸ் பண்ணக் கூடாத படம் இது. . ” என்றார்
இயல்பாக உண்மையாகப் பேசினார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்
“இந்தப் படத்தின் வசனகர்த்தாவும் எனது தமிழ் ஆசிரியருமான சங்கரதாஸ் சார்தான் ,
எனக்கு கதை படிக்கிற இலக்கியம் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தினார். எனது வாசிப்புப் பழக்கம் அவர் உருவாக்கியது . நிறைய வாசிச்சு இருக்கேன் . இனியும் வாசிப்பேன் .
நான் எப்பவும் அவரோடுதான் கதைகள் பேசுவேன் . கதை பேச எங்கெங்கோ போவோம் . அதில் நிறைய பணத்தையும் இழந்து இருக்கேன் .
அப்படி பேசிப் பேசி உருவாக்கிய எட்டு கதைகளை முழுமையாக வச்சு இருக்கேன் .
நான் யாரிடமும் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தது இல்லை . படப்பிடிப்பில் பயன்படுத்தும் மானிட்டரையே நான் எனது ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் பார்த்தேன்.
அப்படிப்பட்ட நான் தன்னம்பிக்கையோடு படத்தை இயக்கி முடித்திருக்கக் காரணம் , கதை திரைக்கதை வசனம் மீது எனக்கு உள்ள நம்பிக்கைதான் .
எனக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கும் பல வருடப் பழக்கம் . அவரிடம் ஒரு கதை சொன்னேன் . ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு ‘உங்க கதை தியேட்டரில் ஓடுது’ என்றார் .
அதாவது நான் அவரிடம் சொன்ன ஒரு கதையில் பாதி, ஒரு படத்தில் வந்து இருந்தது .
‘மத்த கதைகளும் வருவதற்குள் படம் கொடுங்க’ என்றேன் . ‘வாங்க பேசுவோம்’ என்றார் . செல்வகுமார் எதிலும் ஆப்ஷன் எதிர்பார்ப்பார் .
எனவே அவரிடம் நான் மூன்று கதைகள் சொன்னேன் . அதில் அவர் செலக்ட் செய்ததுதான் இந்த ஒரு நாள் கூத்து படத்தின் கதை . .
எனக்கென்னமோ கல்யாணம் என்ற விசயத்தில் ஒரு வன்முறை இருப்பது போல தோன்றுகிறது . அந்த உணர்வில் உருவான கதை இது .
படத்துக்கு என் நண்பர் பாஸ்கரன்தான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது . ஆனால் வேறு படத்தில் அவர் இருந்ததால் கோகுல் வந்தார் .
மிக அமைதியாக படம் பிடிப்பார் . சிறு சத்தம் கூட இல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் . இந்தப் படம் சிறப்பாக வந்ததில் கோகுலுக்கு பெரும் பங்கு உண்டு .
இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் வந்தார் .அவரை நான் ரொம்ப டார்ச்சர செய்து இருக்கிறேன் அனால் அவர் நல்ல பாடல்களையும் நல்ல இசையையும் கொடுத்து இருக்கிறார் .
அலுவலகத்துக்கு தினேஷ் வந்து போவார் . நான் செல்வகுமாரிடம் ‘இவரையே ஹீரோவாக போடலாம் .
சாதரணமாக வந்து போகும்போது இவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே நடித்தால் போதும்’ என்றேன் . . அவரும் அப்படியே நடித்துக் கொடுத்தார் .
மெட்ராஸ் படம் பார்த்த போதே ரித்விகாவை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டேன் . ரேடியோ ஜாக்கியாக அவ்வளவு சிறப்பாக நடித்தார் .
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நிலையில் நன் அவரை நிஜ ரேடியோ ஜாக்கியாகவே டீல் செய்ய ஆரம்பித்தேன். எதாவது பேசுங்க என்பேன் . அது எல்லாம் தப்பு .
ஆனால் அவர் பொறுத்துக் கொண்டு சிறப்பாக நடித்தார்
நிவேதா நடித்து இருக்கும் கேரக்டருக்கு தமிழ் தெரியாத நடிகையை எல்லாம் போட்டு கஷ்டப்பட நான் விரும்பவில்லை . எனவே அவர் ஸ்டில்லை பார்த்து விட்டு தூக்கிப் போட்டு விட்டேன் .
செல்வகுமார்தான் ‘ஒரு முறை டெஸ்ட் எடுத்துப் பார்ப்போம்’ என்றார் , துபாய்க்கு போன் போட்டு நிவேதவிடம் பேசினால் தமிழ் சூப்பராக பேசினார் ..அவரை ஒப்பந்தம் செய்தோம் .
மியா ஜார்ஜ் படத்தின் கதையைக் கேட்டு ஒகே சொன்னார் . அனால் தேதி எப்போது என்று சொல்லவில்லை . அப்புறம் அவர் தொடர்பு கொள்ளவும் இல்லை .
ஆறுமாதம் கழித்து மீண்டும் கதை சொல்லச் சொன்னார்கள் . ‘மீண்டும் எதற்கு சொல்லணும்/’ என்ற கேள்வியோடு அவரைப் பார்க்கப் போனால்,நான் சொன்ன கதையை அப்படியே திருப்பி சொன்னார் .
இடையில் அவர் மூன்று படங்கள் நடித்து இருந்தார் . அவரது ஈடுபாடு வியக்க வைத்தது . சில விசயங்களை விளக்கமாக கேட்டுத் தெரிந்து கொண்டு நடிக்க வந்தார் .
கருணாகரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் . இந்தப் படத்தில் நடிக்கும்போது அவர் பத்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் .
நான் கூட ‘என்ன படம் என்ன கேரக்டர்னு குழப்பம் இல்லாம இருக்கா சார்?’னு கேட்பேன் . ஆனா சூப்பரா நடிச்சுக் கொடுத்தார்
படம் சிறப்பாக வந்ததில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு . தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு நன்றி ” என்றார் .
நன்றி உரையாற்றிய தயாரிப்பாளர் செல்வகுமார்
“இந்தப் படம் இந்த அளவுக்கு மிக சிறப்பாக வந்ததற்கு முதல் காரணம் படத்தின் கதை திரைக்கதை வசனம்தான் .
நெல்சன் அதை மிக சிறப்பாக உருவாக்கி இருப்பதைப் பார்த்துதான் படத்தையே ஆரம்பித்தேன் .
லக்ஷ்மி கேரக்டருக்கு மியா ஜார்ஜ்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் நெல்சன் , மியாவையும் ரித்விகாவையும் படத்துக்குள் கொண்டு வருவதற்கே ஆறு மாதம் காத்து இருந்தோம் .
இப்படி எல்லாவகையிலும் பர்ஃபக்ஷனில் உறுதியாக இருந்தோம் .
தினேஷ் படத்தில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் . எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர் படம் மிக நன்றாக வந்து இருக்கிறது .
வரும் ஜூன் 10 ஆம்தேதி படம் வெளிவருகிறது ” என்றார் .
ஒரு நாள் கூத்து, குறைந்தது ஒரு மாத திரைக் கூத்தாக வெற்றி பெறட்டும்!