திருஷ்யம் கதையை அப்படியே கொடுப்பதற்குப் பதில், திருநெல்வேலி– பாபநாசம் பகுதியின் பின்னணியில், அந்த நெல்லை வட்டார வழக்குத் தமிழை பயன்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள் . மீண்டும் கதாநாயகியாக (கதை நாயகி ?) கவுதமி நடிக்கிறார். விஸ்வரூபத்தில் ஆரம்பித்து கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறி விட்ட ஜிப்ரான்தான் இந்தப் படத்துக்கும் இசை .
படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டுக் காட்ட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது கமல் உள்ளிட்ட பாபநாசம் குடும்பம் . (பாபநாசம் படக்குழுவை அவர்கள் அப்படிதான் அழைத்துக் கொள்கிறார்கள் )
மகாநதி படத்தில் வந்தது போன்ற தோற்றத்தில் சுயம்பு லிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் கமல். நெல்லைத் தமிழ் பேசுகிறார் . பஸ் பயணம், குடும்ப சிக்கல்கள், பெண் குழந்தைகளுடனான புரிதல் என அசத்துகிறார் .
.கௌதமி உற்சாகமாக நடித்து இருக்கிறார் . கமலுக்கும் தனக்கும் சேர்த்து காஸ்டியூம் டிசைன் செய்து இருக்கிறார் . வில்லியாக தோன்றும் கீதா பிரபாகர் கவனம் கவர்கிறார் .
படத்தின் கதையை சொல்கிறது முன்னோட்டம்.
எல்லோரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் — நடிகை ஸ்ரீ பிரியா
பாபநாசம் படத்தில் நடித்துள்ள எல்லாருக்கும் நெல்லைத் தமிழைச் சொல்லித் தந்த எழுத்தாளர் சுகா பேசும்போது
பொதுவாக இரண்டு எழுத்தாளர்கள் ஒரு கூரையின் கீழ் பணியாற்ற முடியாது என்பார்கள் . ஆனால் இந்தப் படத்தில் கமல்ஹாசன் , ஜெயமோகன் , நான் , மற்றும் கவிபெரியதம்பி உட்பட நான்கு எழுத்தாளர்கள் இணைந்து பணியாற்ற முடிந்தது அது கமல் அவர்களால் மட்டுமே சாத்தியம் ” என்றார் . தூங்கா வனம் படத்துக்கு வசனம் எழுதுபவர் இந்த சுகாதான்
“இந்த சின்ன வயசிலேயே கமல் சாருடன் இவ்வளவு பெரிய படத்தில் இவ்வளவு முக்கியமான கேரக்டர் நடிக்கக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் .
எம் எஸ் பாஸ்கர் தன் பேச்சில், “உத்தம வில்லனில் நடித்து விட்டு டப்பிங் பேசிக் கொண்டு இருந்த போது இந்தப் படத்தின் இயக்குனர் அங்கே வந்தார் .
பேச வந்த நடிகர் அருள்தாஸ் மேடையில் கமல் இருப்பதால் பதற்றத்தில் பேசாமல் உட்கார்ந்தார் .
டெல்லி கணேஷ் பேசும்போது “கமல் சாருடன் எத்தனையோ பல படங்களில் நடித்து இருக்கிறேன் . அதெல்லாம் நான் செய்த புண்ணியம் . இந்தப் படத்துல அவர் நெல்லைத் தமிழை அவ்வளவு முயன்று அற்புதமா பேசி இருக்காரு.
” படத்தில் பின்னணி இசையும் ஒரு முக்கியக் கேரக்டரா இருக்கும் ” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
கவுதமி தனது பேச்சில்
“படக் குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . அதனால் படத்தை 39 நாளில் முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி ” என்றார் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ்
கமல் பேசும்போது ” என்னமோ இந்தப் படம் என்னுடைய சாதனை என்பது போல எல்லோரும் என் பெயரை மட்டுமே இங்கே சொன்னார்கள். அப்படி அல்ல. ஒரு பாத்திரம் மட்டும் சரியாக இருந்தால் சமையல் சிறக்காது. எல்லா பாத்திரங்களும் பொருத்தமாக இருக்க வேண்டும் . இந்தப் படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்தார்கள்.
இங்கே பேசிய ஸ்ரீபிரியாவும் நானும் நடித்த ஆரம்ப காலப் படங்களில் நாங்கள் ரசிகர்களால் பாத்திரங்களின் பெயராகத்தான் நினைவு கூறப்பட்டோம் . அது மீண்டும் இந்த பாபநாசம் படத்தில் நடக்கும் .
இங்கே பேச வந்து விட்டு பயந்து போனது போல பேசாமல் போன அருள்தாஸ் படத்தில் சிறப்பாக நடித்தார் .
பாப நாசத்தில் தனக்கு புண்ணியம் கிடைத்ததாக குறிப்பிட்ட டெல்லிகணேஷ் என்னோடு பல படங்களில் சேர்ந்து நடித்ததுஅவர் செய்த புண்ணியம் என்றார் . அவர் எல்லாப் படங்களையும் அப்படி சொல்லிட்டாரு . ஆனா இந்தப் படம் உண்மையிலேயே அவருக்கு பெருமை சேர்க்கும் .
சுகா சொன்னது போல இரண்டு எழுத்தாளர்கள் ஒரு கூரையின் கீழ் பணியாற்ற முடியாமல் போகலாம் . ஆனால் நாலு பேர் பணியாற்றலாம் . மத்தியஸ்தத்துக்கு ரெண்டு பேர் இருக்கிறார்களே .
உண்மையில் எனக்கு இந்தப் படத்தில் நெல்லைத் தமிழ் சொல்லிக் கொடுக்க ஒருவர் தேவை என்ற நிலையில் சுகாவை எனக்கு சொன்னதே ஜெயமோகன்தான் . ஒரு சரியான எழுத்தாளரை இன்னொரு நல்ல எழுத்தாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
நான் இந்தப் படத்தில் கவுதமியை நடிக்க வைத்து பாதிப் படம் வரை போன போது எனக்கு ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சியே வந்து விட்டது . இவ்வளவு நல்ல நடிகையை இத்தனை நாளாக வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து விட்டோமே என்று . அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார் . நான் இதை அவர் மேல் உள்ள பர்சனல் இன்ட்ரஸ்ட் காரணமாக சொல்லவில்லை . ஒரு ரசிகனாக இருந்தும் சொல்கிறேன் .
இன்னொரு வகையில் அவர் கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்தது கூட நல்லதுதான் . கொஞ்சம் நகர்ந்து நின்றி சினிமாவை பார்த்த காரணத்தால் கௌதமி இப்போது இன்னும் சிறப்பாக நடிக்கிறார் .
மொத்தத்தில் பாசம் நாசமாகக் கூடாது என்பதை சொல்ல வரும் படம் பாபநாசம் ” என்றார் .