வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா ஆகியோர் தயாரிக்க,
கமல்ஹாசன் கௌதமி , கலாபவன் மணி , இளவரசு , அருள்தாஸ் ஆகியோர் நடிக்க ,
ஜீத்து ஜோசப் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் பாபநாசம் . மலையாளத்தில் மோகன்லால் , மீனா நடித்து ஹிட் அடித்த திர்ஷ்யம் படத்தின் ரீமேக் .
ஐந்தாம் வகுப்புக் கூட தாண்டாத சூழலிலும் தனி ஒருவனாக முயன்று உழைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டர் ஆகி , அப்படியே ரியல் எஸ்டேட் வேலையும் பார்த்து அஞ்சு ஏக்கர் நிலம், அதில் அட்டகாசமான வீடு , கடை வீதியில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிடம் இவற்றுக்கு உரிமையாளராக…
சந்தோஷமாக – அதே நேரம் படு சிக்கனமாக வாழ்ந்து வரும்– சும்பு லிங்கம் என்றே கையெழுத்துப் போடத் தெரிந்த சுயம்புலிங்கத்துக்கு (கமல்ஹாசன் ) ….
ராணி என்ற மனைவியும் (கௌதமி), மேல்நிலைப் பள்ளிப் படிப்பு படிக்கும் செல்வி என்ற பெரிய மகளும்( நிவேதா தாமஸ் , ) நடுநிலைப் பள்ளி படிக்கும் மீனா என்ற இளைய மகளும் (எஸ்தர் அனில்)தான் உலகம் .
கேபிள் டிவி அலுவலகத்துக்கு சேர்மதுரை என்ற உதவியாளன் ( பசங்க ஸ்ரீராம்) , நட்பு வட்டத்தில் இருக்கும் டீக்கடைக்கார சுலைமான் பாய் ( எம் எஸ் பாஸ்கர் ) காண்டிராக்டர் ஒருவர் (கவி பெரிய தம்பி ) போலீஸ் ஸ்டேசனில் காவலர் சண்முகம் (இளவரசு ) என்று, சுயம்பு லிங்கம் தினசரி எத்ரிகொள்ளும் நண்பர்களும் கை விரலுக்குள் அடங்குபவர்களே .
அதே ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக இருக்கும் சுரேஷுக்கு (அருள்தாஸ்) சுய்மபுலிங்கம் மீது நல்ல அபிப்ராயம் இருந்தாலும் , அடாவடியாக நடந்து கொள்வதிலும் லஞ்சத்தை அடித்துப் பிடுங்குவதிலும் ‘சிறப்பாக’ செயல்படும் பெருமாளுக்கும் (கலாபவன் மணி ) சுயம்பு லிங்கத்துக்கும் மட்டும் ஆகாது . அவனை சீண்டுவது சுயம்பு லிங்கத்துக்கு பொழுதுபோக்கு
எனவே சுயம்பு லிங்கத்தை சரியான சமயம் பார்த்து கருவறுக்க, காத்திருக்கிறான் பெருமாள் .
கேபிள் டிவி ஆபீசில் சிவாஜி படம் பார்த்து அழுவது, புதுப் படங்கள் ஓடாததற்கு கரெக்டாக காரணம் சொல்வது, மனைவியுடன் ஃபார்ட்டி பிளஸ் ரொமான்ஸ் , பிள்ளைகள் மீது அதீத பாசம் என்று வாழும் சுயம்புலிங்கத்தின் வாழ்வில் ஒரு அருவறுப்புப் புயல் அடிக்கிறது .
சுயம்புவின் மூத்த மகள் செல்வி படிப்பு சம்மந்தமாக கேம்ப் போன இடத்தில் ஒரு அயோக்கிய மாணவன், செல்வி குளிக்கும்போது நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு , ”என் ஆசைக்கு இணங்கினால் இதை அழித்து விடுவேன் , இல்லை என்றால் ஆபாசப் படத்தை இணையதளத்தில் போடுவேன் ” என்று மிரட்டுகிறான்.
செல்வியின் பயத்தை பயன்படுத்திக் கொண்டு சுயம்புலிங்கம் இல்லாத சமயத்தில் வீட்டுக்கே வரும் அந்த அயோக்கியன் , செல்வியிடம் மட்டுமல்லாது ராணியிடமும் தவறாக நடக்க முயல , செல்வி இரும்புக் கம்பியால் அடித்த அடியில் அவன் செத்துப் போகிறான் . வீட்டுக்கு வரும் சுயம்பு லிங்கம் விஷயம் அறிந்து அவனை தங்கள் தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார் .
தான் பார்த்த சினிமாப் படங்களில் வந்த இன்வெஸ்டிகேஷன் காட்சிகளின் அடிப்படையில் திட்டமிட்டு… இறந்தவன் வந்த கார் , செல் போன் என்று எல்லாவற்றையும் மறைக்கும் சுயம்புலிங்கம், சம்மந்தப்பட்ட அந்த தேதியில் தானும் தன் குடும்பமும் ஊரிலேயே இல்லை என்பது போல தடயங்களை உருவாக்குகிறார் .
இறந்து போனவனின் அம்மா ஓர் ஐ பி எஸ் அதிகாரி, அப்பா ஒரு நீதிபதி என்ற நிலையில் காணமல் போன மகனை தேட காவல் துறையின் முழு சக்தியும் பயன்படுத்தப்படுகிறது.
அந்த அயோக்கிய மாணவன் இறந்து போனதையும் அதில் சுயம்பு லிங்கத்தின் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதையும் அறியும் ஐ பி எஸ் அதிகாரியும் , சுயம்பு லிங்கம் மீது கொண்ட பகை காரணமாக அதில் தீவிர ஈடுபாடு காட்டும் பெருமாளும் சுயம்புலிங்கத்தின் குடும்பத்தை நெருங்கி கொலை வெறியோடு மடக்கி தங்கள் கொடூரக் கரங்களை நீட்ட முயல …
மான அவமானத்துக்குக் கட்டுப்படுகிற சுயம்புலிங்கத்தின் குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதே, இந்த பாபநாசம் படம்
படத்தில் கமல்ஹாசன் தவிர இன்னொரு ஹீரோவும் உண்டு . அதுதான் திரைக்கதை. சுயம்பு லிங்கத்தின் சினிமா அறிவு, ரசனை, மனைவியுடனான பாசமும் மோகமுமான தாம்பத்யம் , பிள்ளைகள் மீதான பாசம், வெளிவட்டார நட்பு , பெருமாளுடனான கலகலப்பான பகை , மாமனார் (டெல்லிகணேஷ்) மீதான சுயம்பு லிங்கத்தின் மரியாதை செறிந்த பாசம் என்று சுவாரஸ்யமாக போகும் முதல் பாதி ஒரு பக்கம் ….
அப்புறம் சஸ்பென்ஸ், பரபரப்பு , படபடப்பு , செண்டிமெண்ட் , தத்துவம் என நெகிழ வைத்து அசர வைக்கும் இரண்டாம் பாதி மறுபக்கம் இரண்டுமே மிக சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. படம் ஓடும் கால அளவு 3 மணி நேரம் 23 நொடிகள் . ஆனால் ஏதோ இரண்டு மணி நேரத்தில் மொத்த படமும் முடிந்தது போல ஒரு உணர்வு வருகிறது. நேரம் போவதே தெரியவில்லை என்பதுதான் படத்தின் முதல் பலம் .
மலையாளப் படத்தின் ரீமேக் என்பதால் அதற்கு பாபநாசம் லொக்கேஷன் கொடுத்து நெல்லை வட்டார வழக்குக் கொடுத்ததோடு நிறுத்தி விடாமல் பாநாசம் என்ற ஊரின் சிறப்பு , அந்த சொல்லின் பொருள் என்று எல்லாவற்றையும் திரைக்கதையில் பொருத்தி படத்தை முடித்த விதம் அருமை .
இன்னொரு பக்கம் கமல் நடித்த மகாநதி படத்தை ஞாபகமூட்டும் கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் படம் இது .
ஒரு நல்லவன் வெள்ளந்தியாக கள்ளம் கபடம் தெரியாமல் கடைசிவரை இருந்து விட்டால் பிரச்னைகள் சூழும் போது அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்று சொன்ன படம் மகாநதி .
அதே போன்ற ஒரு கிராமத்து மனிதன் நல்லவனாக இருக்கும் அதே நேரம் கொஞ்சம் விவரமானவனாகவும் இருந்து தனக்கு ஒரு பிரச்னை வரும்போது அவன் மனம் நொந்து விடாமல் மூளையையும் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை சொல்லும் படம் பாபநாசம் .
ஒரு நிலை வரை ஒரு மாதிரி பயணிக்கும் கதை ஒரு சூழலுக்கு அப்புறம் எதிரெதிர் திசைகளில் பயணித்து மகாநதியாகவும் பாபநாசமாகவும் மாறுகிறது .
சுயம்பு லிங்கத்தை அச்சு அசல் நிஜ மனிதனாக நடமாட விடுகிறது கமல்ஹாசனின் பண்பட்ட நடிப்பு. சில ஆரம்பக் காட்சிகளில் ஓட்டாமல் இருந்தாலும் போகப் போக நம்மை முழுசாக ஆக்கிரமிக்கும் அளவுக்கு கதா பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார் கௌதமி . மகள்களாக வரும் நிவேதா தாமஸ் , எஸ்தர் அனில் இருவரின் நடிப்பும்…. குறும்பு, பதற்றம் , நெகிழ்ச்சி என்று எல்லா வகையிலும் பாராட்டும்படி உள்ளது .
பக்கத்தில் கமல் இருக்கும்போது நடிப்பு வராமல் போய் விடுமா என்ன ? அதனால்தானோ என்னவோ படத்தில் நடித்த எல்லா நடிகர்களுமே சிறப்பாக செய்து உள்ளனர் . குறிப்பாக ஐ பி எஸ் அதிகாரியாக நடித்து அறிமுகம் ஆகி நிறுக்கும் ஆஷா சரத் பயம், பதட்டம் , கோபம் , கடைசியில் நெகிழ்ச்சி என்று எல்லாம் உணர்வுகளுக்கும் நம்மை ஆட்படுத்துகிறார். ஜட்ஜாக வரும் ஆனந்த் மகாதேவன் கேரக்டரை உணர்ந்து செய்து இருப்பதும் சிறப்பு .
ஜிப்ரானின் பாடல் இசையை விட பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. அழகான பாபநாசத்தை அப்படியே திரைக்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளது சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு. ஷாட்களிலும் படமாக்கிய முறையிலும் அசத்துகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப் .
ஜெயமோகனின் வசனத் திறமை நெல்லை வழக்கு மொழியை தருவதில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அயூப்கானின் படத் தொகுப்பு , லக்ஷ்மி நாராயணின் ஆடியோ கிராபி, டோனி டாமின் வி எஃப் எக்ஸ் , சேதுவின் சவுன்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தும் முழுமையான பங்களிப்பை தந்துள்ளன.
என்றாலும் படத்தில் எல்லோரையும் விஞ்சி நிற்பது திரைக்கதையே . முக்கியமாக ஆன்ட்டி கிளைமாக்ஸ், கிளைமாக்ஸ் , போஸ்ட் கிளைமாக்ஸ் என்று ஒவ்வொன்றும் யார் உசத்தி என்று ஒன்றை ஒன்று பார்த்து முண்டா தட்டி சவால் விடும் அழகே அழகு . அதுவும் அதில் கமலின் நடிப்பு , முகபாவங்கள் , குரல் பாவங்கள் சேரும்போது ஏற்படும் உணர்வே அலாதியோ அலாதி .
பாபநாசம் … வெற்றி வாசம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
கமல்ஹாசன் , ஜீத்து ஜோசப் , கௌதமி, ஜிப்ரான் , எஸ்தர் அனில், ஆஷா சரத் , சுஜித் வாசுதேவ், லக்ஷ்மி நாராயணன்,