அப்போதுதான் அந்த நாடகம் அட்சர சுத்தமாக அரங்கேறியது .
பாபநாசம் படத்தின் கதை நிகழும் மூன்று முக்கிய இடங்கள் என்றால் அது சுயம்புலிங்கத்தின் வீடு , சுலைமான் செட் டீக்கடை மற்றும் போலீஸ் ஸ்டேஷன் .
அந்த மூன்று இடங்களும் மேடையில் அரங்கமாக அமைக்கப்பட்டு இருக்க , டீக்கடை செட்டில் சுலைமானாக நடித்த எம் எஸ் பாஸ்கர் , சேர்ம துரையாக நடித்த ஸ்ரீராம் , காண்டிராக்டராக நடித்த கவி பெரிய தம்பி ஆகியோரும் ,
சுயம்பு லிங்கம் வீட்டு வாசலில் சுயம்பு லிங்கத்தின் மனைவி ராணியாக நடித்த கவுதமி, மகள்கள் செல்வி மற்றும் மீனாவாக நடித்த நிவேதா மற்றும் எஸ்தர், மாமனாராக நடித்த டெல்லிகணேஷ் , மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்ஸ் மற்றும் மைத்துனராக நடித்தவர் உள்ளிட்ட அனைவரும் ….
போலீஸ் ஸ்டேஷனில் சப இன்ஸ்பெக்டர் அருள் தாஸ் , வில்லத்தனமான காவலர் பெருமாளாக நடித்த கலாபவன் மணி ஆகியோர் …
– இப்படி எல்லோருமே…. படத்தில் நடித்த அதே உடை மற்றும் கெட்டப்பில் இருக்க,
சுயம்புலிங்கம் கெட்டப்பில் ராணி இல்லத்தில் இருந்து வெளியே வந்த கமல்ஹாசன் எல்லா கேரக்டர்களிடமும் போய் சில வார்த்தைகள் நெல்லைத் தமிழில் பேச….
இப்படியாக பாபநாசம் சில நிமிடங்களுக்கு மேடை நாடகமாக மாறியது மறக்க முடியாத அனுபவம் .
நிகழ்ச்சியில் பேசிய ஆஷா சரத் , நிவேதா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கமலின் ரசிகையாக இருந்து அவரை குருவாகக் கொண்டு இருக்கிறோம் என்று மனதார பேசினார்கள்.
ஆஷா சரத் “மலையாளப் பெண்ணான என்னை தமிழச்சியாக் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி ” என்றார்
வையாபுரி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கமலைக் கலைக் கடவுளாக கொண்டாடினார்கள்.
”ஆளவந்தான் , விஸ்வரூபம் , தசாவதாரம் கமல்தானா இது என்று வியக்கும் அளவுக்கு, கமல் இந்த படத்துக்காக சற்றே உடல் தளர்ந்து போன எளிய மனிதனாக மாறியது பெரிய ஆச்சர்யம்” என்றார் டெல்லிகணேஷ் .
இயக்குனர் சித்து ஜோசப் பேசும்போது
“த்ரிஷ்யம் மோகன்லால் , பாபநாசம் கமல் யார் பெஸ்ட் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள், இருவரும் வேறு வேறு மாதிரியான நடிகர்கள் . இருவரையும் ஒப்பிடவே முடியாது . யாராவது ஒருவரை சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால்… படத்தில் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்பது எப்படி சுயம்பு லிங்கத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ, அது போல இருவரில் யார் பெஸ்ட் என்ற ரகசியமும் என்னோடு புதைந்து போகட்டும் ” என்றார் .
கமல்ஹாசன் தன் பேச்சில்
” யார் பெஸ்ட் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்தப் படத்தில் மோகன்லால் நடித்தபோது ‘ தமிழில் இது ரீமேக் ஆனால் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரே சொன்னதாக அறிந்தேன் . அதுவே ஒரு பாராட்டுதான் . கலைக்கு மொழி இல்லை . என்னை நான் பாதி மலையாளியாகவே பார்க்கிறேன் . கேரளாவில் போய் இதை சொன்னால் அவர்கள் ‘இல்லை இல்லை கமல்ஹாசன் முழு மலையாளி’ என்பார்கள்.
எப்படி என்னையும் மோகன்லாலையும் ஒப்பிட்டு யார் பெஸ்ட் என்ற கேள்வி இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு போனதோ, அதே போல மலையாளம் மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்த மீனா , தமிழில் நடித்த கௌதமி.. இந்த இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி எனக்கும் வருகிறது . அது எனக்குள் மட்டுமே புதைந்த ரகசியமாக இருக்கட்டும் .
ஏன்னா கவுதமி நான் தினமும் பார்க்கிற ஆளு . எப்ப வேண்ணா சமாதானப்படுத்திக்கலாம். ஆனா மீனாவை அப்படி சமாதானப்படுத்த முடியாதே. நாளைக்கு மீனா கூட நடிக்கிற ஒரு வாய்ப்பு எனக்கு வந்து, மீனா முகம் திருப்பிட்டு கோபமாகப் போகப்படாது பாருங்க ” என்றார் .
சுயம்பு லிங்கக் குறும்பு