வேந்தர் மூவீஸ் சார்பில் மதன் தயாரிக்க, விஷால், காஜல் அகர்வால் , சூரி நடிப்பில் இமானின் இசை , வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும் புலி . எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இந்தப் படத்தை வெளியிடுகிறார் .
பாண்டியநாடு படத்துக்குப் பிறகு விஷாலும் சுசீந்திரனும் இணையும் படம் இது .
இந்தப் படத்தில் இடம்பெறும் ”சிலுக்கு மரமே .. சில்லுன்னு பூக்க வா ” ஒற்றைப் பாடல் முன்பே வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து படத்தின் முழுப் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது .
நிகழ்ச்சியில் இந்தியாவின் நிரந்தரக் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அய்யாவின் உருவப்படம், எஸ் ஆர் எம் கல்விக் குழுமங்களின் தலைவர் பாரி வேந்தரால் திறக்கப்பட்டு.அஞ்சலி செலுத்தப்பட்டது . ஒரு வார இதழில் அப்துல் கலாமுக்கு தான் எழுத்தின் இருந்த அஞ்சலிக் கவிதையை வாசித்தார் வைரமுத்து.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூங்கொத்துக்குப் பதிலாக அப்துல்,கலாமின் அக்கினிச் சிறகுகள் நூல் வழங்கப்பட்டது .
கலைக் கல்லூரி படிக்கும் இரண்டு மாணவிகளுக்கான ஓராண்டு கல்விக் கட்டணம் விஷாலின் விருப்பப்படி தயாரிப்பு நிறுவனத்தால் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
அடி மாடுகளாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உயிர்வதை அடையும் மாடுகளைக் காப்பாற்றி அவற்றைப் பராமரிக்க , ஒரு தனி அமைப்பு நடத்தி வருபவரான கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவா, பாயும்புலி படத்தின் பாடல்களைப் பெற்றுக் கொள்ள , பாரி வேந்தர் பாடல்களை வெளியிட்டார்.
படத்தின் பாடல்களும் டிரைலர்களும் திரையிடப்பட்டன .
என்கவுண்டர் போலீஸ் அதிகாரி, அழகான காதலி, அரசியல்வாதியாக ஆர்.கே. அற்புதமான விஷுவல்கள் , சிறப்பான இசை என்று இருந்தது முன்னோட்டம் .
இசை , வரிகள், ஒளிப்பதிவு, விஷால் மற்றும் காஜலின் நடனம் , லொகேஷன் என்று எல்லா வகையிலும் ‘சிலுக்கு மரமே’ பாடல், பட்டையைக் கிளப்பியது . இன்னொரு ஐட்டம் சாங் கவர்ச்சி நடனத்தாலும் , வேல்ராஜின் ஒளிப்பதிவாலும் ஜொலித்தது. .
நிகழ்ச்சியில் பேசிய வேந்தர் மூவீஸ் செயல் அதிகாரியான அம்மா கிரியேஷன்ஸ் சிவா
“நண்பர்கள் தினத்தின் காலை வேளையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உண்மையில் இது நண்பர்கள் பலரும் நட்போடு பலரும் சேர்ந்து உருவாகும் படம். இந்தப் படத்தை வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு வேகமாக இவ்வளவு தரத்தோடு எடுக்க முடியாது . ஆனால் வேல்ராஜ் முடித்துக் கொடுத்தார் .
சுசீந்திரன் தயாரிப்பாளர்களின் நன்மைக்காக வேலை செய்யும் இயக்குனர் .அந்த வகையில் பி.வாசு , கே எஸ் ரவிகுமார் இவர்கள் வரிசையில் வருகிறார். எனவே அவரைப் பாராட்டும் வகையில் அவருக்கு ‘தயாரிப்பாளர்களின் சிறந்த இயக்குனர் 2015 ‘ என்ற விருது வழங்கப் படுகிறது ” என்று அறிவிக்க,
தயாரிப்பாளர் மதன் முன்னிலையில்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கல்யாண் அந்த விருதை வழங்கினார்.
இமான் பேசும்போது ” இன்று ஆடியோ வெளியீடு நடைபெறும் பாயும்புலி ஆகட்டும் , புலி ஆகட்டும் , பாடல் என்றால் அங்கு ஒரே ராஜா வைரமுத்துதான் ” என்றார் .
வைரமுத்து தன் பேச்சில் ” ஒரு படத்தின் திரைக்கதை என்பது ஏதாவது ஒரு இடத்தில் சற்று உட்காரும். அந்த இடத்தில் ஒரு புது கேரக்டரை நுழைப்பது நல்ல இயக்குனருக்கான வெற்றி . அந்த சூத்திரம் அறிந்து வெற்றி பெறுபவர் சுசீந்திரன். இந்த சுசீந்திரனின் திறமையை விஜய், அஜித் , சூர்யா ஆகியோர் படம் கொடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார் .
விஷால் தன் பேச்சில் ” நான் உதவிகள் செய்வது அரசியலுக்குப் போவதற்காக அல்ல. ஆத்ம திருப்திக்காக ! அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் இந்த நேரத்தில் ஒன்று சொல்கிறேன். இனி ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்காக தொடர்ந்து உதவிகள் செய்வேன் ” என்றார் .
சிறப்புரை ஆற்றிய பாரிவேந்தர் ” எங்கள் வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதன் ஒரு பாரடாக்ஸ். அதாவது தோற்றத்துக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாதவர்களை ஆங்கிலத்தில் அப்படிச் சொல்வார்கள் . பார்க்கத்தான் ரொம்ப பெரிய உருவமாக இருப்பார்,. ஆனால் குணத்தில் அன்பானவர் . பண்பானவர் .
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் குண்டடி பட்டு செத்துக் கிடந்த கோரக் காட்சியை பார்த்த நொடியில் நான் ‘ ‘உன் புலிப் பார்வை வருங்கால வரலாறு ‘ என்று ஒரு கவிதை எழுதினேன். அந்த வரிக்காக புலிப் பார்வை படத்தை எடுத்து அதில் பிரபாகரனாக நடித்தார் மதன் .
இந்த பாயும் புலி வெற்றிப் புலியாக மாற எனது வாழ்த்துகள் ” என்றார் .