ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரிக்க, வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா நடிப்பில், தயாரித்து எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம். பகலையே அறியாதவன் என்று பொருள். அதாவது இரவுப் பறவை.
ஜெயிலில் இருந்து வந்து திருந்தி வாழும் ஒருவனைக் (வெற்றி) காதலிக்கிறாள் ஓர் இளம்பெண் (அக்சயா கந்தமுதன்) . ஆனால் அவளது தந்தை அவனது பழைய வாழ்க்கையை சொல்லி அவனை நிராகரிக்க, அவன் அவளை ஒரு விபச்சார விடுதியில் காசுக்கு விற்க முடிவு செய்து , வேறு ஊருக்குப் போய் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வோம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறான்.
அடியாள் பலம் உள்ள ஒரு பேச்சு மாற்றுத்திறனாளி நபர் ( முருகன்) , தன் தந்தையின் இரண்டாம் தாரத்தை வெறுக்க, அந்த இரண்டாம் தாரத்து மகள் (வினு பிரியா) எந்த ஆதரவும் இல்லாமல் தவறான ஒருவனை காதலன் என்று நம்பி அவனோடு போக, காதலிப்பதாக நடித்து பெண்களை ஏமாற்றி , பணக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு விருந்தாக்கும் அவன் மூலம் சிலருக்கு விற்கப்படுகிறாள் . மாற்றுத்திறனாளி நபரின் வேறு எதிரிகள் , ” உன் தங்கை என்னிடம்தான் இருக்கிறாள்” என்று அலைக்கழித்து அடிக்கிறார்கள்
முன்னாள் ஜெயில் கைதி நபர் ஒரு நிலையில் மாற்றுத்திறனாளி நபரின் தந்தைக்கு உதவி இருக்க, அதன் பிறகு இரு தரப்பும் சந்திக்கும் தருணம் என்னவாக இருக்கிறது என்பதே படம்.
பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள், அழுத்தமாக நகரும் படம்.
அபிலாஷின் ஒளிப்பதிவும் விவேக் சரோவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
கொஞ்சம் முகத்தில் எக்ஸ்பிரஷன் கொடுத்தால் கூட மூக்கு கழண்டு விழுந்து விடும் என்று யாரோ வெற்றிக்கு சொல்லலி இருக்க வேண்டும் . எனவே அச்சடித்த அசையாத முகத்தோடு நடித்து இருக்கிறார் வெற்றி
அழகு நடிப்பு என்று இரண்டிலும் ஈர்க்கிறார் அக்ஷயா கந்தமுதன் . ( இவர் பெயரை கொஞ்ச நாள் வரை அக்ஷயா கண்டமுத்தன் என்று அறியவைத்த ஆட்களை என்ன சொல்லித் திட்ட?)
வில்லன் நடிக சாய் தீனா காமெடி போலீசாக வர, (சக போலீசோடு ஓரினச் சேர்க்கை உறவு உள்ளவர் என்பது போல பூடகமாக சொல்லப்படுகிறது ) காமெடி நடிகர் சாப்ளின் பாலு , மாற்றுத்திறனாளி தாதாவின் ஆலோசகராக சீரியஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் . காமெடி போலீஸ் காட்சிகள் தேவை இல்லாத அளவுக்கு நீளம்) . வினு பிரியா ரம்மியமாக நடிப்பு .
எனினும் முதல் பாதியை ஜஸ்ட் லைக் தட் பாசிங் ஷாட்கள் போட்டு நிரப்பி விட்டு, பல விசயங்களை ரொம்ப லேட்டாக , இரண்டாம் பகுதியில் நம் மீது திணிப்பதும், தேவைக்கு அதிகமாக திருப்பங்களும் சோர்வை ஏற்படுத்துகின்றன. ( விட்டால், படம் முடிந்த பின்னரும் எதாவது திருப்பங்களை டுவிஸ்டுகளை சொல்லிக் கொண்டு வீடு வரைக்கும் படக் குழு பின்னாடியே வருமோ என்று தோன்றியது)
இந்த பாணி படமாக்கலுக்கு இன்னும் நல்ல திரைக்கதை, வசனம் , நடிப்பு , தொழில் நுட்ப நேர்த்தி இருந்திருந்தால் இரவெங்கும் நிறைந்திருப்பான் இந்த பகலறியான்.