
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ரணவீரன் , ஷ்ரவ்யா , ரவி மரியா, ஆகியோர் நடிக்க,
கதை திரைக்கதை வசனம் எழுதி இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கும் படம் பகிரி . வாட்ஸ் அப் கருவிக்கான தமிழ்ச் சொல்லே பகிரி . படம் என்ன பக(கி)ர்கிறது என்று பார்ப்போம்
விவசாயத்தின் அருமையை உணர்ந்து சிரமங்களுக்கு இடையிலும் தொடர்ந்து விவசாயம் செய்யும் ஒருவரின் மகன் (பிரபு ரண வீரன் ), அரசு வேலைக்கு ஆசைப் படுகிறான் .
அரசு மதுக் கடையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே அவனுக்கு சாத்தியமானதாக தெரிகிறது .
வேலை தர அரசியல்வாதி அஞ்சு லட்ச ரூபாய் பணம் கேட்கிறார் . அப்பாவிடம் நிலத்தை விற்று காசு தர சொல்ல, அப்பா திட்டி அனுப்பி விடுகிறார்.
இளைஞன் அரசு மதுபானக் கடை பார் ஒன்றில் சர்வராக வேலைக்கு சேர்ந்து பணம் சம்பாதித்து அதை அரசியல்வாதியிடம் கொடுத்து வேலை பெறத் திட்டமிடுகிறான் .
இடையில் இட்லி மாவு கடை வைத்து இருக்கும் ஒரு பெண்ணின் மகளுக்கும் (ஷ்ரவ்யா) அவனுக்கும் காதல் வருகிறது .
அந்தப் பெண்ணின் நகைகள் , பார் ஓனரின் உதவி இவற்றோடு பணம் சேர்த்து அரசியல்வாதிக்கு கொடுத்து வேலைக்கு ஆர்டர் வாங்கினால் ..
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வாட்ஸ் அப் செய்திகள் மூலம் தீவிரமாகிறது .
அவன் வேலைக்கு போகும் கடைகளை எல்லாம் மக்கள் அடித்து உடைக்க , அவனால் வேலை செய்ய முடியவில்லை . சம்பாதிக்க முடியவில்லை.
ஒரு நிலையில் மக்கள் திரண்டு எழ, மது விலக்கு அமலுக்கு வர , இளைஞனின் பணம் அரசு வேலை லட்சியம் இரண்டும் கானல் நீராகிறது.
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் பகிரி .
விவசாயத்தின் அருமை சொல்லும் வசனங்கள் அருமை . சிறப்பு
நாயகி ஷ்ரவ்யா முட்டைக் கண்கள் வெட்டும் இடுப்பு என்று துடிப்பும் துள்ளலுமாக கவர்கிறார் .
மாமியார் மருமகள் போல சண்டை போடா வைத்தே காதலை சொல்லும் அந்த ஏரியா கலகல . ஆனால் இன்னும் சிறப்பாக படமாக்கலில் கொண்டு வந்து இருக்கலாம் .
நாயகியின் அம்மாவுக்கு ரூட் போடும் கவுன்சிலர் .. உவ்வே ! இது போன்ற நல்ல கருத்துகளை சொல்லும் படங்களில் கூடவா கமர்ஷியல் என்ற பெயரில் இந்த கருமம் எல்லாம்?
ஒரு நல்ல கதையை சிறப்பாக சொல்வது கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுப்பது இதெல்லாம்தான் கமர்ஷியல் .
அதே போல மதுவிலக்குக்காக போராடுபவர்கள் எல்லோரையுமே ஏதோ கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று சொல்வது போன்ற தொனி அநியாயமானது .
அப்படி சொல்வது நோக்கம் இல்லை என்றால் பிரித்துக் காட்ட வேண்டாமா ?
அதே போல வாட்ஸ் அப் செய்திகளால் நாட்டு மக்களே திருந்தி அதனாலேயே மதுவிலக்கு வந்து விட்டது என்று கதை சொல்வதெல்லாம் … ம்ஹும் ! கதை விடுவதெல்லாம் ரொம்ப ஓவர் .
முக்கிய சமூக பிரச்னைகளை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைக்கும்போது , நிகழ்வுகளும் நம்பும்படி இருந்தால்தான் ரசிகன் அதோடு இணைந்து பயணிப்பான் .
பகிரி …வலுவற்ற செய்தி எனினும் சொல்ல வரும் கருத்துக்களால் பகிரலாம் !