விவசாயத் தேவைக்காக நிலத்தை அடகு வைத்து வைத்து இஸ்லாமியர் ஒருவரிடம் பணம் வாங்கப் போகிறான் விவசாயி ரத்தினம் (விக்ராந்த்) . அந்த இஸ்லாமியர் வீட்டுக்கு பக்ரீத்துக்கு,
குர்பானி கொடுக்க வந்த ஓர் ஒட்டகத்துடன் குட்டி ஒட்டகம் ஒன்றும் வந்திருக்கிறது . அதை , வளர்ப்பதற்காக தன் வீட்டுக்கு கொண்டு வருகிறான் ரத்தினம் . மனைவி ( வசுந்தரா ) மகள் (ஸ்ருத்திகா ) இருவருக்கும் சந்தோசம் .
ஆனால் ரத்தினம் கொடுக்கும் உணவு ஒட்டகத்துக்கு ஒத்துக் கொள்ளாமல் போக, ஒட்டகத்தை ராஜஸ்தான் கொண்டு போய் ஒட்டகங்களோடு ஒட்டகமாக விட்டு விட்டு வர கிளம்புகிறான் .
வழியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்… ஒட்டகத்தை பிரிந்து வாடும் மகள் ஸ்ருத்திகா … கடைசியில் என்ன ஆனது என்பதே இந்த பக்ரீத் .
வித்தியாசமான கதை .. வித்தியாசமான களம் .
சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ராந்த் . கடும் உழைப்பும் கூட . பாராட்டுகள் .
ஒட்டகத்தை வைத்து ஒரு படம் எடுப்பதற்கு மிகுந்த மெனக்கெடல் தேவைப்படும் . மெனக்கெட்டு இருக்கிறது படக் குழு . சிறப்பு .
குழந்தையின் மழலை முகமும் பேச்சும் அழகு .
வசுந்தரா வித்தியாசமான கிராமத்துப் பெண்.
லேஸ் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுக்கு எதிரான காட்சிகள், நாட்டுப் பசு மாட்டுக்கு கலப்பின மாட்டு உயிரணு ஊசி போடக் கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இயக்குனர் ஜெகதீசன் சுபுவின் கருத்தாண்மையை காட்டுகின்றன. வாழ்த்துகள்
இரண்டாம் பாதியில் ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சூழல் மற்றும் நபர்கள் மூலம் வருவது சலிப்பு .
வித்தியாசமான கதை செய்தவர்கள் அதை யதார்த்தப் படுத்துவதில் சறுக்கி இருக்கிறார்கள் .
ரத்தினத்துக்கு இருக்கும் சூழலில் அவன் ஒட்டகத்தை எல்லாம் கொண்டு வந்து வளர்ப்பானா ?
சரி வளர்க்க முடிவு பண்ணியாச்சு … அதற்கு நாம் போடும் உணவு செட் ஆக வில்லை என்றால் அது என்ன என்று அறிந்து, கொண்டு வந்து போட்டு வளர்க்க முடியாதா ? திரும்ப ராஜஸ்தானுக்கு கொண்டு போய்தான் விட வேண்டுமா ? எனில் தென்னிந்திய மிருக காட்சி சாலைகள் மற்றும் சர்க்கஸ்களில் ஒட்டகங்கள் எப்படி வளர்கின்றன ?
சரி .. ராஜஸ்தானுக்கு அனுப்பத்தான் முடிவு பண்ணியாச்சு … ராஜஸ்தான் போகும் லாரியில் நம்பிகையானவர்களிடம் ஏற்றி அனுப்பி விட்டு வேலையை பார்ப்பதுதானே யதார்த்தம்? நெல் வயலை காயப் போட்டுவிட்டு ராஜஸ்தான் வரைக்கும் ஒருத்தன் விட்டு விட்டு வருவதற்கு போவானா ?
சரி ராஜஸ்தான் வரை கொண்டு போயாச்சு . இப்போது படத்தில் இருப்பதுதான் சரியான கிளைமாக்ஸ் எனில் இப்போ ஒட்டகத்தை வளர்ப்பது எப்படி ?
இப்போது வளர்க்கலாம் எனில் அப்புறம் எதுக்கு ராஜஸ்தானுக்கு விடுவதற்கு கிளம்பிப் போகணும் ?
ஏதோ ராணுவ வீரர்களை ஒட்டகம் காப்பாற்றுகிறது என்கிறார்கள் . அதுதான் திரைக்கதையில் ஒட்டகத்துக்கு பெரிய பிளஸ் ஆக வருகிறது . என்ன காப்பாற்றியது? எப்படி காப்பாற்றியது ? டைரக்டருக்காவது தெரியுமா ?
இப்படி கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள் ..
ரத்தினம் ஒட்டகத்தை பாதியிலேயே விட்டு விட்டு வந்தாச்சு .
” நீ விட்டுட்டு வந்துட்ட .. அது இப்போ எங்க இருக்கோ ? உயிரோடதான் இருக்கோ இல்லியோ.. இருந்தாலும் அடுத்த வருசம் பக்ரீத்துக்கு எங்க பிரியாணியா ஆகப் போகுதோ .. ” என்று பலர் சொல்ல… ரத்தினத்துக்கு குற்ற உணர்ச்சியும் வருத்தமும் !
இந்த நிலையில் , அடுத்த வருடம் பக்ரீத்… அதே பாய் வீடு . லாரி வருகிறது .. திறந்தால் அதே ஒட்டகம் … பாசத்தோடு ரத்தினம் வீட்டை நோக்கி ஓடி வருகிறது என்று கிளைமாக்ஸ் வைத்து இருந்தாலாவது ஒரு சுமாரான சினிமாவாவது கிடைத்து இருக்கும் . அதுவும் இப்போது இல்லை.
பக்ரீத் … பிரியாணி தட்டில் வெறும் குஸ்கா