
மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது .
எப்பேர்ப்பட்ட பாடலாசிரியர் (பொன்னெழில் பூத்தது புது வானில் ), எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , )
எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர் (எத்தனை படங்கள் ), எப்பேர்ப்பட்ட அன்பான மனிதர் (தம்பி .. நல்லா இருக்கீங்களா ?)
மனம் கனக்கிறது
நானும் அவரும் ஐ பி ஆர் எஸ் உறுப்பினர்கள் . பல வருடங்களுக்கு முன்பு ஓர் ஐ பி ஆர் எஸ் சந்திப்பு இரவில் அவருடன் மனம் விட்டுப் பேச வாய்ப்புக் கிடைத்தது
” பொன்னெழில் பூத்தது புது வானில் ; வெண் பனித் தூவும் நிலவே நில் பாட்டில், ‘நிலவே நில்’ என்பதற்கு பதில் ‘இள வேனில்’ னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்குமே? ” என்றேன்
ஒரு நொடி சந்தோஷமாகப் பார்த்து “அப்படிதான் எழுதினேன் . ஆனா எம் எஸ் விதான், இளவேனில் என்ற சொல்லில் வரும் இளவே என்ற வார்த்தையை யாரவது ‘இழவே’னு பாடுவான்
உனக்கு இது முதல் பாட்டு . மாத்திக் கொடுன்னு சொன்னார் . நானும் நிலவே நில் என்று மாற்றிக் கொடுத்தேன் ” என்றார் சிரிப்பு நிறைக்க !.
எங்கேயோ கேட்ட குரலில் சிறப்புகள் பற்றி மனம் விட்டுப் பேசி அதன் வசனம் பற்றி வியந்து சொன்னேன் . கண்ணில் கண்ணீர் வர , கட்டிப் பிடித்துக் கொண்டார் . அவ்வளவு சிலிர்ப்பு அவருக்கு .
“இதை எல்லாம் எல்லாரும் இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்களா ?” என்றார் நெகிழ்வோடு .
“உங்க கிட்ட பேசாம இருக்கலாம் . ஆனா திரைக்கதை வசனம்னு வந்தா உங்களை பற்றி பேசாம இருக்க முடியுமா ?” என்றேன் .
ரொம்ப சந்தோஷப்பட்டார் .
உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம் .
பல சினிமா சம்பவங்களை ஆர்வமாக சொன்னார் . எனக்கு பெரும் வியப்பு . தன்னை அழைத்துப் போக வந்திருந்த தன மகனும் (இப்போது) நடிகருமான பஞ்சு சுப்புவை காத்திருக்கச் சொல்லி விட்டு பேசினார் .
” இதை எல்லாம் நீங்க எழுதணும் சார். நீங்க இளையராஜாவை அறிமுகம் செய்தது தவிர எதுவுமே வெளியே தெரியலையே” என்றேன்.
அதெல்லாம் எதுக்கு என்பது போல சலிப்புக் காட்டி சிரித்தார் .
ஆனால் அண்மையில் அவர் தனது அனுபவங்களை ‘திரைத் தொண்டர் என்ற பெயரில் விகடனில் எழுத ஆரம்பித்த போது ரொம்ப சந்தோஷப் பட்டேன் .
அது வரைக்கும் விகடனில் வெற்றி மாறனின் மைல்ஸ் டு கோ தொடரை முதலில் படிக்கும் பழக்கம் உள்ள நான் , திரைத் தொண்டர் தொடரை முதலில் படிக்க ஆரம்பித்தேன் .
எவ்வளவு சம்பவங்கள் . எனக்கு தெரியாத எத்தனை விஷயங்கள்
பலூன் படப் பிடிப்பில் அவரது மகன் சுப்புவை பார்த்த போது கூட , அது பற்றிப் பேசி மகிழ்ந்தேன் . இந்த வாரம் இயக்குனர் ருத்ரைய்யா பற்றி எழுதி இருந்தது கூட பிரமிக்க வைத்தது .
மைல்ஸ் டு கோ தொடர் முடிந்த நிலையில் இனி எல்லோரும் திரைத் தொண்டர் இன்னும் அதிக வாசகர்களை பெரும் என்று மகிழ்ந்தேன்
ஆனால் பாதியில் பறந்து விட்டார் அந்த மாபெரும் திரைக் கலைஞர் .
உங்கள் வாழ்க்கைக்கு முடிவே இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் பஞ்சு சார் .
கண்களில் நீர் மறைக்கிறது . தொடர்ந்து எழுத முடியவில்லை .
மனம் நெகிழும் கண்ணீர் அஞ்சலி !