தீபம் சினிமா சார்பில் எஸ் கணேஷ், எம் எஸ் வினோத்குமார் ஆகியோர் தயாரிக்க,
மா க ப ஆனந்த் , சென்றாயன், வெற்றி வேல் மற்றும் கிடாரி படங்களில் நாயகியாக நடித்த நிகிலா விமல் ஆகியோர் நடிக்க , டி இமான் இசையில்
இயக்குனர் அமீரிடம் பருத்தி வீரன் மற்றும் யோகி படங்களில் பணி புரிந்தவரும் , தபேலா வாசித்த் கழுதைகள் , கலரு என்ற இரண்டு விருது பெற்ற குறும்படங்கள் மூலம் லடசக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவரும் ,
நாளைய இயக்குனர் போட்டியில் பதினோரு விருதுகளை வென்றவரும் இயக்குனர் ஷங்கரால் பாரட்டப்பட்டவருமான எஸ் பி மோகன் இயக்கி இருக்கும் படம் பஞ்சு மிட்டாய் .
இந்தக் குறும்படங்களில் எழுத்தாளர் ஜே பி சாணக்யா தீராநதி இதழில் எழுதிய மஞ்சள் வெள்ளை பச்சை என்ற சிறுகதையே கலரு. அதுபோல எழில்வரதன் எழுதிய ஒரு சிறுகதையே தபேலா வாசித்த கழுதைகள் .
இந்த இரண்டு படங்களின் இணைப்பு மற்றும் விரிவாக்கமே இந்த பஞ்சு மிட்டாய் .
படத்தில் மேற்சொன்ன எழுத்தாளர்கள் தவிர, கோபாலக் கிருஷ்ணன், செந்தில குமார் ஆகிய எழுத்தாளர்களும் பணியாற்றி உள்ளனர் .
நம்ப முடியாத நிகழ்ச்சிகளை நம்பக் கூடிய , யதார்த்தமான , நடைமுறை சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதை மாய யதார்த்தம் என்கிறோம் .
உதாரணமாக நீங்கள் இன்று சினிமாவுக்குப் போவது யதார்த்தத்தில் நடக்கிற அல்லது நடக்க வாய்ப்புள்ள சம்பவம் . ஆனால் அப்படி போகும் படத்துக்கு,
சில வருடங்களுக்கு முன்பு செத்துப் போன நண்பனும் இப்போது உடன் வருவதாக நினைத்து அதை நம்பவும் செய்தால் அது மேஜிக்கல் ரியலிசம் எனப்படும் மாய யதார்த்தம் .
அலுவலக நண்பனுடன் கைகுலுக்கும் காதலி நாம் இல்லாத போது அவனோடு தனிமையில் என்ன செய்வாளோ என்று நினைப்பது சந்தேக புத்தி .
தன்னோடு செய்வதை எல்லாம் அந்த நண்பனோடும் செய்வாள் என்று ஒருவன் அணு அணுவாக கற்பனை செய்து பார்த்து அது உண்மையாகவும் நடபதாக நம்பினால் அதுவும் மாய யதார்த்தம்தான்
அந்த வகையில் தமிழின் முதல் மாய யதார்த்தப் படமாக வருகிறது இந்த பஞ்சு மிட்டாய் படம் .
‘ கதாநாயகன் தான் பார்க்கும் உண்மை நிகழ்ச்சிகளை கற்பனயில் மிகைப்படுத்திப் பார்க்கிறான் .இதனால் என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம் ” என்கிறார் இயக்குனர் எஸ் பி மோகன்
தமிழக அரசின் வரிவிலக்கைப் பெற்று இருக்கும் இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில்,
அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா , இயக்குனர்கள் பா.ரஞ்சித், நலன் குமார சாமி, ராஜு முருகன் , இன்று நேற்று நாளை இயக்குனர் ரவி குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்
முன்னதாக திரையிடப்பட்ட முன்னோட்டத்தின் மூலம் ஒரு மனைவி மேல் கணவனுக்கு வரும் சந்தேகம் , அதனால் வரும் உளவியல் சிக்கல்கள் என்று படம் போகும் என்பது புரிந்தது .
”என் வொயிஃப் ரொம்ப பியூட்டிபுல்” என்ற பாடலை, பொது மக்களில் கணவர் தனது மனைவியை பாராட்டுவது போல எடுத்து இருக்கும் விதம் அருமை .
இன்னொரு பாடல் வித்தியாசமான பின்னணி , வித்தியாசமான் சூழல் , வித்தியாசமான உணர்வுகள் இவற்றின் கலவையாய்,
வெண்மை ஆளுமை செய்யும் வண்ணப் பின்னணியில் இதுவரை தமிழ் சினிமாவில் பாராத் முறையில் இருந்து கவனம் கவர்ந்தது .
நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான படம் என்பது புரிந்தது .
நிகழ்ச்சியில் பேசிய சென்றாயன்
” பொதுவா என் முகத்துக்கு எல்லா படத்துலயும் வித்தியாசமான கேரக்டர்தான் கிடைக்கும் . ஆனா இது மொத்த படமுமீ வித்தியாசமாக இருக்கும்”” என்றார் .
கதாநாயகி நிகிலா விமல் பேசும்போது ” இந்தப் படத்தில் நடிக்க வந்தப்பவே டைரக்டர் என் கிட்ட நீங்கதான் டப்பிங் பேசணும்னு சொல்லிட்டார் . அதனால நான் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன் .
இது வித்தியாசமான் படம் . இந்தப் படத்துக்காக எல்லாரும் கஷ்டப் பட்டாங்க . ஆனா இயக்குனர் ஒழுங்கா சாப்பிடாம தூங்காம கூட கஷ்டப்பட்டார் .” என்றார் .
நாயகன் மா க ப ஆனந்த் தன் பேச்சில் ” ரொம்ப வித்தியாசமான கதை இது. சுவாரஸ்யமான் கதாபாத்திரங்கள் . ஒவ்வொரு காட்சியையும் ரசிச்சு நடிக்க முடிஞ்சது .
தன்னுக்கு வேண்டியது வரும் வரையில் டைரக்டர் விடவே இல்ல . என்ன ஒரு வருத்தம்னா கதாநாயகி நிகிலா என்னை அண்ணான்னுதான் கூப்பிடுது ” என்றார் .
இசையமைப்பாளர் இமான் தனது பேச்சில் ” இயக்குனர் மோகனோட குறும்படம் பார்த்தேன் . நல்லா இருந்தது . பாடலுக்கான சூழலும் நல்லா அமைஞ்சது .
மோகன் நல்லா படமாக்கி இருக்கார் . படம் கண்டிப்பாக வெற்றி பெறும் ” என்றார் .
இயக்குனர் நலன் குமாரசாமி பேசுகையில் ” இந்தப் படத்தை நான் பார்த்துட்டேன் . இது வழக்கமான படம் இல்ல. ரொம்ப புது அனுபவமா இருக்கும் .
இது போன்ற படங்கள் நல்ல ஓடும்போதுதான் சினிமா மாறும் ” என்றார் .
இயக்குனர் ராஜு முருகன் தனது பேச்சில் ” கலை, புரட்சி ரெண்டுமே கொஞ்சம் பைத்தியக்காரத்தமானதுதான் . அந்த பைத்தியக்காரத்தனத்தில் அழகு இருந்தால் அது கலை . நியாயம் இருந்தால் அது புரட்சி .
அந்த வகையில் பாரதி முதற்கொண்டு சேகுவரா வரை எல்லோரும் பைத்தியக்காரர்கள்தான். இந்தப் படம் ஓர் அழகான பைத்தியக்காரத்தனம் . இது எல்லோருக்கும் புடிக்கணும் ” என்றார்
இயக்குனர் பா. ரஞ்சித் ” மோகன் மிகச் சிறந்த படைப்பாளி . கதைகள் நாவல்கள் படமாவது என்பது ரொம்ப நல்ல விஷயம் . அந்த வகையில் இந்த படத்தில் உள்ள கதைகளை நான் படித்து இருக்கிறேன் .
குறும்படங்களையும் பார்த்தேன் . இந்தப் படமும் பார்த்தேன் .
ரொம்ப சிறப்பா படம் வந்து இருக்கு” என்றார் .
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது ” தொடர்ந்து பேய்ப் படங்களா வந்துட்டு இருக்கற இந்த காலத்துல இந்தப் படம் ஒரு புதிய பாணியில்,
இதுவரை தமிழில் வராத குணாதிசயமான மேஜிக் ரியலிசம் படமாக வந்துள்ளது . இந்தப் படத்துக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கணும் .
இந்தப் படத்தின் வெளியீடு விசயத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்” என்றார்
நிறைவுரை ஆற்றிய இயக்குனர் மோகன் ” என்னை இயக்குனர் ஆக்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி .
நிறைய கதைகள் படமா வரணும் என்பதுதான் என் ஆசை . இந்தப் படத்தின் கதை கொடுத்த எழுத்தாளர்கள் இந்த விழாவுக்கு வரணும்னு நான் ரொம்ப விரும்பினேன் .
நூறு எழுத்தாளர்கள் மேடையில் இருக்க இந்த விழா நடக்கணும்னு ஆசைப்பட்டேன் . ஆனா கதை கொடுத்த எழுத்தாளர்களே நான் கூப்பிட்டும் வரல . அது வருத்தமாக இருக்கு .
இந்தப் படம் ஒரு நிலையில் பணப் பிரச்னையில் சிக்கியபோது எனக்காக பல லட்சங்கள் கொடுக்க முன்வந்தார் இயக்குனர் ரஞ்சித் சார் . இத்தனைக்கும் எனக்கு அவர் நெருங்கிய நண்பரும் இல்ல .
பணம் கொடுக்க எந்த நிபந்தனையும் கூட போடல .நல்ல படங்கள் மேலான அவரது பாசம் அப்போது தெரிஞ்சது . அவர் இந்த உயரத்துக்கு போனதுக்கான காரணமும் புரிஞ்சது .
இது போன்ற நல்லவர்கள் ஆதரவு தரும் இந்தப் படம் மக்களுக்கும் புடிக்கும்னு நம்பறேன் ” என்றார் .
வாழ்த்துகள் !