ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் , ரேணுகா கருணாகரன், கவுரி கிஷன், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்த் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி ZEE 5 தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் தொடர் பேப்பர் ராக்கெட்..
மென்பொருள் நிறுவனப் பணியில் தீவிரமாக இருந்த காரணத்தால் அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றாமலேயே அவரை இழந்து விட்ட மகன் (காளிதாஸ் ) , பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவனும் இறந்து விட உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு கேன்சரோடு போராடும் நடுத்தர வயது செட்டிநாட்டு ஆச்சி ( ரேணுகா) , நீச்சலில் பெரிய சாதனைகளை செய்யும் பயணத்தின் போது அடிபட்டு முதுகு எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் முடங்கிய சிற்றிளம்பெண் ( கவுரி கிஷன்),

மூளையில் கட்டி காரணமாக மரணத்தை நெருங்கும் இளைஞன் ( நிர்மல் பலழி) , தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுக் கொண்டு அம்மாவால் அதீத கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டு எதிர்மறைச் சிந்தனைகள் மேலோங்கி தற்கொலை செய்து கொள்ள முயலும் ஒரு நபர் (கருணாகரன்) , சிறுமியாக இருந்தபோது தாய்மாமனால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அதை அம்மாவும் கண்டிக்காத நிலையில் குடும்பத்தை வெறுத்து அதீத கோபக்காரப் பெண்ணாக மாறிய ஓர் இளம்பெண் (தான்யா ரவிச்ச்சந்திரன்) …
இவர்கள் ஒரு முதியோர் இல்ல மனநல ஆலோசக மருத்துவர் மூலம் நண்பர்களாகி, ஆலோசகரின் ஆலோசனை பலன்தராத நிலையில் தங்களது சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பல இடங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள் .
அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களும் மன மாற்றங்களும் நிம்மதியும் திருப்தியும் நம்பிக்கையும் உற்சாகமும் பலமும் பக்குவமும் தீர்வுகளுமே இந்தப் படம்

வானமே எல்லை, புத்தம் புதுக் காலை, ரோஜா வனம் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே தமிழில் வந்திருக்கும் கதை . நிதானமான திரைக்கதை அமைத்து மெச்சூரிட்டியோடு இயக்கி இருக்கிறார் கிருத்திகா.
ஒவ்வொருவரின் கதையும் அழகாக விரிகிறது .
கடல் புறம், செட்டிநாடு அரண்மனை, போடி மெட்டு , போன்ற விதம் விதமான லொக்கேஷன்களும் அவற்றை பயன்படுத்திய விதமும் அழகு.
நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் கம்பீரமாக எடுக்கும் முடிவு அற்புதம் . மூளைக்கட்டி இளைஞனின் முதல் காதலி ஆசை அபாரம்.
ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு, சைமன் கே கிங், வேத் சங்கர், தரன் குமார் ஆகியோரின் இசையும் சிறப்பு
சக்தி வெங்கட் ராஜின் கலை இயக்கம் அருமை.
வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . காட்சிகள் இன்னும் தெறிப்பாக வைத்திருக்கலாம் .
புகைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் படியான காட்சியை தவிர்த்து இருக்கலாம்
மனதுக்கு நெகிழ்வும் நம்பிக்கையும் தரும் நல்ல படம் .