கவி கிரியேசன்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிக்க, அமிதாஷ், சரத்குமார், காஷ்மிரா பரதேசி, சார்லஸ் வினோத், பாலாஜி சக்திவேல் , ஸ்வாதிகா, வின்சென்ட் அசோகன் நடிப்பில் சி அரவிந்த ராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்
குடல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு , பசி எடுக்காமல், எடுத்தாலும் சாப்பிட முடியாமல், சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகமால் நலம் கெட்டு உயிராபத்தில் இருக்கும் தங்கையை ( ஸ்வாதிகா) காப்பாற்ற,
ஐம்பது லட்ச ரூபாய் தேவைப் படும் நிலையில் உள்ள ஓர் இளைஞன் (அமிதாஷ்) அதற்கு உதவ முடியாத மனப் புழுக்கத்தில் இருக்கிறான்.
அவன் பணியாற்றும் கலைப் பொருட்கள் விற்பனையாக முதலாளி, சிலைக் கடத்தலில் ஈடுபட்டு சின்னா பின்னமான நிலையில் , அந்த முதலாளியோடு சம்மந்தப்பட்ட சில சிலைக் கடத்தல்காரர்கள் இவனைத் தொடர்பு கொள்ள, அதை வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் ( சரத்குமார்) இவனை சந்தேகப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது .
நீ நல்லவன் என்றால் சிலைக் கடத்தல் கும்பலைக் காட்டிக் கொடு என்று அவர் சொல்ல, சிலை வாங்குவது போல இருவரும் ஒரு கடத்தல் கும்பலை அணுக , போலீஸ் என்று தெரிந்து சிலையை விட்டு விட்டு கும்பல் எஸ்கேப்.
சிலையை ரகசியமாக விற்று பணத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று நிஜ முகம் காட்டுகிறார் போலீஸ் அதிகாரி .
அதற்காக ஒரு இன்டர்நேஷனல் கும்பலோடு பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் , சிலையை இழந்தவர்கள் வந்து மோத, அந்த சண்டையில் ஒரு புல்டோசர் சக்கரத்தில் சிக்கி நொறுங்குகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய அந்த சிலை .
போலி சிலை தயாரித்து ஏமாற்றி விற்க முடிவு செய்கிறார் போலீஸ் அதிகாரி.
போலீஸ் அதிகாரயின் மனைவி விவாகரத்துக் கோரும் நிலையில் ,மனைவியின் – சிலை தயாரிப்பு விஷயங்கள் தெரிந்த – தங்கையிடம் (காஷ்மிரா பரதேசி) ,” சிலை தயாரித்துக் கொடுத்தால் உங்கொக்காளுக்கு விவாகரத்து தருகிறேன்’ என்று கூறி சிலை தயாரிக்கச் செய்கிறார் .
விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நிலையில் சிலை தயாராக , சிலை வாங்கும் கும்பல் சார்பாக சிலையின் பழமை மற்றும் தரப் பரிசோதனை செய்யும் நபர் (பாலாஜி சக்திவேல்) , முன்பு இதே போலீஸ் அதிகாரியின் அராஜகத்தால் தனது சொத்து வழக்குப் பிரச்னையில் பல கோடிகளை இழந்தவர் .
அடுத்து என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தி மாத்தி யோசி பாணியில் ஒரு தலைகீழ் கதையை சொல்லி படத்தை முடிக்கிறார் இயக்குனர்.
படத்தில் முதலில் கவனம் கவர்வது மர்மமும் பூடகமும் , நெகிழ்வும் தீவிரமும் கலந்த –சிறப்பான இருள் ஒளிப் பயன்பாட்டில் அமைந்துள்ள- பாண்டி குமாரின் ஒளிப்பதிவு . அருமை
அடுத்து அசத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா . அவரது பின்னணி இசை படத்தின் யானை .. இல்லை இல்லை யானைப் படைபோன்ற பலம் . பிரம்மாதம்.
சிலை கடத்தல் கதை , அதில் நாயகனின் வேறு வழி இல்லாத தேவை, போலீஸ் அதிகாரியின் சுயநலம் , அவரால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர், போலீஸ் அதிகாரியின் விவாகரத்து விவகாரம் , அதற்காக அநியாயத்துக்கு துணை போகும் இளம்பெண் , அவளுக்கும் நாய்கனுக்குமான முந்தைய சந்திப்பு என்று…
சிறு சிறு கிளை நதிகள் ஒரு ஒழுங்கோடு ஆங்காங்கே ஒரு பெரிய நதியில் கலக்குமே அப்படி பல ககிளைக்தைகள் பிரச்னைகள் மெயின் திரைக்கதையில்இணையச் செய்த விஷயம் பாராட்டுக்குரியதுதான் .
இண்டர்நஷனல் கடத்தல்காரர்களை நாயகனும் போலீஸ் அதிகாரியும் அடையாளம் காணும் காட்சி அமைக்கப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் ஜீனியஸ்தனமானது. சபாஷ் அரவிந்தராஜ் .
பொதுவாகவே படமாக்கலும் காட்சிகளை இயக்குனர் படப்பிடிப்புக்காக டீல் செய்திருக்கும் விதமும் அழகு
ராஜேந்திர சோழன் பற்றிய குறிப்பு அருமை. ஆனால் கூடவே அதையே கிண்டல் செய்யும் வசனங்கள் நான்சென்ஸ்
தினேஷ் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் சிறப்பு . கலை இயக்குனர் குமார் கங்கப்பன், இன்னும கொஞ்சம் வேலை கொடுத்து இருக்கலாம்
மிக அழுத்தமான கனமான பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் அமிதாஷ் .
வில்லங்கமான சுயநலம் பிடித்த போலீஸ் அதிகாரியாக கம்பீர சரத்குமார் . காமெடியும் சில இடங்களில் கலகலக்கிறது . ஓட முடியாமல் ஓடுகிற மாதிரியான ஷாட்களை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
அழகின் சுதேசியாக இருக்கிறார் காஷ்மிரா பரதேசி. சின்னச் சின்ன அசைவுகளில் கெத்து காட்டுவது அருமை .
தங்கையாக நடித்து இருக்கும் ஸ்வாதிகா கேரக்டருக்கு ஏற்ற தோற்றம் நடிப்பு என்று இரண்டு விதங்களிலும் நெகிழ வைக்கிறார்.
தலையை குனிந்து மேல் நோக்கிப் பார்க்கும் பார்வை, போகிற போக்கில் முக்கிய விசயங்களை பேசும் விதம என்று பாலாஜி சக்திவேல் அழகு .
வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட அந்த சிலை வாங்கும் கேங் நடிகர்களும் சிறப்பு
திடீர் என்று வரும் — பணத்தை இறைத்த படி நாயகனும் சரத் குமாரும் ஆடும் பாட்டு வழக்கமான டெம்ப்ளேட். ஒருவேளை நீரிழிவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பாராட்டுவார்கள்.
இன்னொரு பாட்டு பொருத்தமாக இருந்தால் கூட வேகம் குறைக்கிறது . அதில் வரும் அவசியமான மாண்டேஜ் காட்சிகளை நல்ல பின்னணி இசையில் மட்டும் காட்டி விட்டுப் போயிருக்கலாம் .
இரண்டு காட்சிகளில் தாண்டிக் குதிக்க வேண்டிய வேண்டிய விஷயத்தை எல்லாம் ஏழெட்டு காட்சிகளாக அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள் .
சிலை கடத்தல் கதையை வைத்து வேறொரு கதை சொல்வது நல்ல உத்திதான் . ஆனால் அதை எப்படி சொல்வது என்பது முக்கியம் அல்லவா?
அந்த வேறொரு கதையின் துளிகளை ஆரம்பத்தில் ஆங்காங்கே வசனத்தில் சொன்னது கூட ஒகே . ஆனால் கடைசியில் கிளைமாக்ஸ் சமயத்தில் அழுத்தமாக சொல்லாமல் கொத்து பரோட்டா போட்ட கணக்காகச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
விளைவு? படத்தின் உயிர்நாடியான அந்த விஷயம் எமோஷனாக இல்லாமல் ஸ்டேட்மென்ட் ஆக கடந்து போகிறது . படம் முடியும்போது ‘சரி அவ்வளவுதானே ரைட்டு விடு’ என்ற உணர்வு எழுகிறது
யூகிக்க முடியாத வண்ணம் முன்கதையாக அழுத்தமாக சொல்லி அப்புறம் சிலைக் கடத்தல் விசயத்தை இன்னும் ஷார்ப்பாக சொல்லி அந்தக் கடைசிக் கதையை நிறுத்தி நிதானமாக அழுத்தமாக போர் அடிக்காமல் சொல்லி அதற்குப் பிறகு ஒரு கதைப் போக்கு போய் ஆக்ஷனில் முடிய வேண்டிய திரைக்கதை இது ( உலகம் சுற்றும் வாலிபன், ஜென்டில்மேன் படங்கள் ஞாபகம் வருகிறதா? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து உட்கார்ந்து ஒரு கதையை அழுத்தமாக சொல்லி கடைசியாக ஒரு டாப் கியர் போட்டு தூக்குவார்கள். )
அது இல்லாத காரணத்தால் பரம்பொருள் கொஞ்சம் சக்தி இழக்கிறது
எனினும் ஆரம்பம் முதல் அடுத்து அடுத்து தொடரும் சில டுவிஸ்டுகள் படமாக்கப்பட்ட விதம் தொழில் நுட்ப நேர்த்தி ஆகியவற்றால் தீபாராதனை பெறுகிறது பரம்பொருள்