8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க ,
நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நறேல் கெங் ஆகியோர் கதாநாயகியாக நடிக்க
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் பறந்து செல்ல வா. பறக்குமா ? இல்லை பரபரக்குமா ? பார்க்கலாம் .
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்கிற — காதல் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்,
ஹலோ சொல்கிற பெண்களுக்கு எல்லாம் ஐ லவ் யூ சொல்ல முனைகிற — இளைஞன் ஒருவன் (லுத்புதீன்)
சிங்கப்பூரில் தான் தங்குகிற நண்பனின் (சதீஷ்) அறையில் உடன் தங்கி இருக்கிற பெண்கள் இருவருக்கும் கூட அவன் ஐ லவ் யூ சொல்ல ,
அதை அவர்கள் கிண்டலாக சபையில் சொல்ல, எல்லோரும அவனை கேலி செய்கிறார்கள் .
நொந்து போகும் அவன் தனது அலுவலக நண்பன் (ஆர் ஜே பாலாஜி ) உதவியுடன் , ஒரு விளம்பரத்தில் இருந்த சீனப் பெண்ணின் (நரேல் கெங்) போட்டோவை வைத்து, முகநூலில் ஒரு பொய் கணக்கு தயார் செய்து ,
அப்படி ஒரு அழகான பெண் தன்னை காதலிப்பதாக நம்ப வைக்கிறான் .
அவனது பெற்றோர்கள் சிங்கப்பூரிலேயே வேலை பார்க்கும் ஒரு பெண்ணை (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவனுக்குப் பார்க்க , அவளோடு பழகி கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் ,
பொய்யான முக நூல் கணக்கில் பயன்படுத்தப்பட்ட போட்டோவில் இருந்த சீனப் பெண் நேரில் வந்து அவனிடம் நிஜ ஐ லவ் யூ சொல்ல …
அப்புறம் என்ன நடந்தது என்பதே இறந்து செல்ல … சாரி , பறந்து செல்ல வா .
லுத்புதீன் உற்சாகமாக நடிக்கிறார். சீனப் பெண் சிறப்பாக நடிக்கிறார் . (அபாரமான உடல் மொழிகள் அவருக்கு. ) . ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம் போல .
படம் முழுக்க சிங்கப்பூரில் எடுத்து இருக்கிறார்கள் . ஒளிப்பதிவும் ஷாட்களும் அருமை . எல்லாம் சரிதான்.
ஆனால் சிங்கப்பூருக்கு பதில் சின்னாளப் பட்டியை வைத்து கதை சொன்னாலும் , சீனப் பெண்ணுக்கு பதில் சிந்தாதரிப் பேட்டை சித்ராவை வைத்து கதை சொன்னலும் ,
அந்த கதை திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் .
அப்புறம் அது சிங்கப்பூரில் சீனப் பெண் நடிக்க எடுக்கப்பட வேண்டும் . அப்போதுதான் பலன் இருக்கும் . விசயம் இல்லாமல் இதெல்லாம் எதுக்கு ?
தயிர்வடை தேசிகனால் நெப்போலியன் குதிரையை வைத்து என்ன செய்ய முடியும் . கொள்ளு கூட கொடுக்க முடியாது .
ஒரு சில இடங்களில் ஆர் ஜே பாலாஜியும் , சதீஷும் சிரிக்க வைக்க்கிரர்கள் . பதிலுக்கு பல இடங்களில் அர்த்தமில்லாமல் பேசியே கொள்கிறார்கள் .
சதீஷை பார்த்து சும்மா இருடா என்று வசனம் பேசுவதே படத்தில் சக கேரக்டர்களின் முக்கிய வேலை
காமெடி என்ற பெயரில் சீரியஸ் காட்சிகளில் கூட வரும் சம்மந்தமில்லாத வசனங்கள் , தனி ஆல்பம் கேட்பது போன்ற பாடல்கள்,
அடுத்து என்ன என்று யூகிக்க முடிகிற – வழக்கமான் கதைப் போக்கு , சீனப் பெண்ணுக்கான போங்கு பில்டப்புகள் ..என்று போகப் போக நிலவரம் கலவரம் ஆகிறது
ஆங்கிலப் படமான ட்ரூ மேன் ஷோ பாதிப்பில் உலகம் முழுக்க படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள் . இதில் பல குறைப் பிரசவங்கள் , குழப்பப் பிரசவங்கள் உண்டு
அது தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் எடுத்துக்காட்டு .
சினிமாவை நேசிக்கும் நல்ல தயாரிப்பாளரான அருமை சந்திரன் கதை திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும்.
பறந்து செல்ல வா…. கோழிப் பறப்பு .