பரிட்சைக்கு நேரமாச்சு @ நாடக விமர்சனம்

paritsaikku neramaachu drama
பரிட்சைக்கு நேரமாச்சு டிராமா
மூன்றாவது நரசிம்மாச்சாரி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , அவரது மனைவியாக சுஜாதா , மகனாக ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய  திரைப் படம் பரிட்சைக்கு நேரமாச்சு .

உண்மையில் படமாவதற்கு முன்பாக மேடை நாடகமாக இந்தியாவிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் இருநூறு தடவைக்கும் மேல் மேடை கண்டு,  சக்கைப் போடு போட்ட நாடகம் இது .

1978 ஆம் ஆண்டில் முதன் முதலாக மேடை ஏறிய இந்த நாடகத்தை எழுதியவரே ஒய் ஜி மகேந்திரன்தான். படத்தில் சிவாஜி நடித்த நரசிம்மாச்சாரி வேடத்தில் ஆரம்பத்தில்  நடித்தவர் மாபெரும் நாடகக் கலைஞரான ஒய் ஜி பார்த்தசாரதி . சினிமாவிலும் நாடகத்திலும் மகன் வரதுக்குட்டி கேரக்டரில் நடித்தது அவரது பிள்ளையான  ஒய் ஜி மகேந்திரன்.

அப்படி டிராமாவிலும் சினிமாவிலும் அசத்திய பரிட்சைக்கு நேரமாச்சு,  இப்போது மீண்டும் நாடகமாக மேடை ஏறியது. நாடகத்தில் தனது தந்தை ஒய் ஜி பார்த்தசாரதியும் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஏற்று இருந்த நடாதூர் நரசிம்மாச்சாரி வேடத்தை ஒய் ஜி மகேந்திரன் ஏற்று நடிக்க, சுஜாதா வேடத்தில் ஆனந்தி என்ற அனுபவம் மிக்க நாடக நடிகையும் வரதுக்குட்டியாக ஆனந்தியின் மகனான ராகவ் பாலாஜியும் நடித்து இருந்தார்கள் . பீமாராவ் வேடத்தில் ‘ஆள்’டர்நேட்டே இல்லாத அதே சுப்புணி .

கதை தெரியாதவர்களுக்கு சில வரிகள்…

தீவிர வைஷ்ணவரும் தனியார் ஆபீஸ் குமாஸ்தாவுமான நடாதூர் நரசிம்மாச்சாரி- வேதா தம்பதியின் மகனான வரதுக்குட்டி ரொம்ப அப்பாவி. படிப்பு ஏறவே இல்லை . அவனை எப்படியாவது தனது அலுவலகத்தில் சேர்க்க , கேரள மேனேஜருக்கு விதம் விதமாக வீட்டு சாப்பாடு எல்லாம் போட்டு காக்கா பிடிக்கிறார் நரசிம்மாச்சாரி. ஆனால் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை உன் மகன் எழுதினால்தான் வேலை என்று மேனேஜர் கூற,

கொஸ்டின் பேப்பரை பிளக்கில் வாங்கி கொடுக்கும் வரை போகிறார் நரசிம்மாச்சாரி. அதில் மாட்டிக் கொள்கிறார்.   கொஸ்டின் பேப்பரும்  மாறிய நிலையில் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு பையனை பரீட்சைக்கு தயார் செய்கிறார் . பரிட்சை எழுத போகும்போது,  போலீசுக்கு பயந்து கண் மண் தெரியாமல் ஓட்டப்பட்ட ஒரு ஜீப் வரதுக் குட்டி மீது மோதி தூக்கி வீச, மரணம் அடைகிறான் . நரசிம்மாச்சாரியின் மனைவி வேதா சித்தப் பிரம்மைக்கு ஆளாகிறாள்.

இந்நிலையில் ஒரு நாள் நரசிம்மாச்சாரி வீட்டுக்குள் நுழையும் ஆனந்த் என்ற ஒரு பிக் பாக்கெட்காரன் வரதுக்குட்டியாகவே (இரட்டை வேடம்) இருக்கிறான். அவனை தனது  மகன் என்று நம்பும் வேதா  குணம் அடைகிறாள் . எனவே அவனையே மகனாக வீட்டில் தங்கி விடும்படி சொல்கிறார் நரசிம்மாச்சாரி. அதே நேரம் கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டி வரதுக்குட்டியின் மரணத்துக்கு காரணமானவனை  கண்டு பிடித்து தன கையால் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியும் அவருக்கு இருக்கிறது . அவனை கண்டு பிடித்து தருவதாக ஆனந்தும் சத்தியம் செய்கிறான்.

ஆனந்தின் நண்பன் சாமுவேல் சொல்லும்போதுதான் வரதுக்குட்டியை  கொன்றதே ஆனந்த்தான் என்று  தெரிகிறது. இந்த விஷயம் நரசிம்மாச்சாரிக்கும் வேதாவுக்கும் தெரிய வரும்போது என்ன நடந்தது என்பதே கிளைமாக்ஸ்!

paritsaikku neramaassu
பரிட்சைக்கு நேரமாச்சு திரைப்படம்

இரண்டு நடாதூர் நரசிம்மாச்சாரிகளை (சிவாஜிகணேசன் , ஒய்.ஜி.பி ) பார்த்த ஒய் .ஜி. மகேந்திரன் இப்போது நடாதூர் நரசிம்மாச்சாரியை காலத்துக்கு ஏற்ப சற்று மாற்றி வழக்கம் போல அசத்தலாக நடித்து இருக்கிறார். வரதுகுட்டியை கொன்றது ஆனந்துதான் என்று தெரிய வரும்போது ஆரம்பத்தில் அதை நம்பாமல்,  ‘சும்மா ஜோக் அடிக்கிறார்கள்’ என்று சிரிக்கும் நரசிம்மாச்சாரியாக,  படத்தில் சிவாஜி கொடுத்த் ஒரு எக்ஸ்பிரஷனை அப்படியே செய்து கைதட்டல் பெறுகிறார் .

தப்பான கணக்கை சரியாகக் போடும் காட்சியில் அரங்கை அதிர வைக்கிறார் பீமாராவாக வரும் சுப்புணி .வேதாவாக நடித்த ஆனந்தி ஒகே .ராகவ் பாலாஜி ஆனந்த் கதாபாத்திரத்தை விட வரதுக்குட்டி கேரக்டரில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

ரகோத்தம ராவாக நடிக்கும் பாலாஜி  அப்படியே ராவாக அடிக்குரலிலும் மாடுலேஷனிலும் வெண்ணிற ஆடை மூர்த்தியை பின்பற்றி கலகலக்க வைக்கிறார் . சுபத்ராவாக வரும் பிருந்தா அனாயாசமாக அசத்துகிறார் .

வரதுக்குட்டியை கொன்றது  நீதான் என்று சொல்லும் காட்சியில் சாமுவேலாக வரும் பத்திரிக்கையாளர் ஹுசைனின் குரல் நடிப்பு அபாரம்.  ஆபிஸ் மேனேஜராக வரும் ஜெயக்குமார், அனந்தராமனாக  வரும் முரளி இவர்கள்தான் நாடகத்தில் திருஷ்டிப் பரிகாரங்கள்

வசனங்களில் கொஞ்சம் பிராமணச் செருக்கும் பி ஜே பி செருக்கும் இருக்கிறது . ஆனால் நாடகத்தின் நவீன முடிவு ஜாதி ஏற்றத்தாழ்வுகளை கடந்த மனித நேயத்தை வலியுறுத்துகிறது.

உண்மையான பிராமணன் என்ற நிலை பிறப்பால் ஜாதியால் வருவது இல்லை . அது பண்பால் வருகிறது என்பதை ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கும் இடம் நாடகத்தின் சிகரம் .

வரதுக்குட்டி மக்குப் பிள்ளையாக இருக்கலாம் . ஆனால் இந்த நாடகம் புத்திசாலிப்பிள்ளைதான் .

எல்லாம் சரிதான் நரசிம்மாச்சாரி மாமா … ஆரம்பத்தில் வரதுக்குட்டிக்கு தன மகளை கட்டிக் கொடுக்க விரும்பறதா சொன்ன சுபத்ரா மாமி ஆனந்த் வந்த பிறகு அதை பத்தி கடைசி  வரை பேசவே இல்லியே …? ஏ………ன்?

பின் குறிப்பு : பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை தயாரித்து இயக்கிய முக்தா சீனிவாசன் நாடகம் பார்க்க வந்திருந்தார் . நாடகம் முடிந்ததும் ஒய் ஜி மகேந்திரனை கட்டிப் பிடித்து “இப்போ சிவாஜி உயிரோட இருந்திருந்தா அழைச்சுட்டு வந்து இந்த நாடகத்தை பாக்க வச்சிருப்பேன்” என்றவர் , ”இதை மறுபடியும் சினிமாவா எடுக்கலாமா?” என்று கேட்டார் . ஒய் ஜி எம் சம்மதம் சொன்னார் . எனவே மறுபடியும் சினிமாவாகிறது பரிட்சைக்கு நேரமாச்சு .

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →