பொறி.செந்தில் கதை வசனம் எழுதி தயாரிக்க, சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், சினேகா நடிப்பில் எஸ் மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
கல்லூரித் தோழிகள் இருவர் (சுவாதி, ராஜேஸ்வரி) சந்திக்கிறார்கள் . அதில் ஒருத்தி திருமணம் ஆகியும் வாழாமல் கணவனுடன் கடமைக்கு வாழ்கிறாள். இன்னொருத்தி பிரிந்த காதலனை எண்ணி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டு வாழ்கிறாள்.
திருமணம் செய்யாமல் வாழும் தோழி பள்ளி வயதில் காதலித்து, (மோஹித், சினேகா) சாதி காரணமாக அந்தப் பெண்ணின் தாயால் திருட்டுப் பட்டம சுமத்தப்பட்டு ஊரை விட்டு வெளியேறி டாக்டர் ஆகிய நபர்தான் தனது கணவன் (சுர்ஜித்,) என்று , ஒரு நிலையில் மனைவிக்குத் தெரிகிறது .கணவன் நம்மோடு சந்தோஷமாக வாழாமல் இருப்பதற்கும் , தோழி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் இருப்பதுதான் என்பது புரிந்த நிலையில் மனைவி என்ன செய்கிறாள் என்பதே கதை .
பழமையான வழக்கமான எந்த பாதிப்பும் சுவாரஸ்யமும் இல்லாமல் துவங்கி தொடர்ந்து ஓடி முடியும் படம் .
கிராமியச் சூழல் சிறப்பாக வெளிப்படுகிறது
மனைவியாக நடித்துள்ள சுவாதி மிகச் சிறப்பாக நடித்துள்ளார் . மற்றவர்கள் எல்லாம் சொன்னதை பேசி விட்டுப் போகிறார்கள்.
பள்ளி வாழ்வில் ஒருத்தி தன் காதலனை இழக்கிறாள் . சரி . கல்லூரிக்குப் போகிறாள். அங்கே ஒருத்தி நெருங்கிய தோழி ஆகிறாள். அந்த நெர்ர்ர்ர்ருங்கிய தோழியிடம் காதலனின் பெயர் போட்டோ என்று எதுவும் சொல்லி இருக்க மாட்டாளா ?
சொல்லல.
காதலில் தோல்வியுற்ற பையன் வேறு ஊருக்குப் போய் படித்து டாக்டர் ஆகிறான் . அவனுக்கும் அவனது காதலின் தோழிக்கும் திருமணம் ஆகிறது . அந்தத் திருமணம் பற்றி, மாப்பிள்ளை பற்றி அந்த நெர்ர்ர்ர்ருங்கிய தோழி சொல்லவே இல்லையா?
படித்து டாக்டர் ஆனவன் தன் காதலியைப் பார்க்க என்ன முயற்சி எடுத்தான்? ஏன் முயலவில்லை . அப்புறம் என்ன புண்ணாக்குக் காதல்?
படித்து முன்னேறி பெரிய ஹாஸ்பிட்டல் , வீடு எல்லாம் கட்ட முடியும். ஆனால் மனைவியுடன் வாழ முடியாமல் வாழ்க்கையையே வெறுத்தது போல பிடிப்பு இல்லாமல் இருப்பானாம் . எனில் என்ன மாதிரி ஆள் அவன் ?. உண்மையில் அவன் எதாவது மலைக் கிராமத்தில் இலவச வைத்தியம் செய்ய அல்லவா போயிருக்கணும்?
இப்படி கேள்விகள் கேள்விளாக வந்த கொண்டு இருக்க பதில் பரிவர்த்தனைகள் இல்லாத காரணத்தால் படம் ஈர்க்கவில்லை