நெஞ்சில் நிறைந்து உயரும் ‘பரியேறும் பெருமாள்’.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்  தயாரித்திருக்கும் முதல் படம்  ‘பரியேறும்  பெருமாள்’ .

 கதிர், நடிகை கயல் ஆனந்தி,  யோகிபாபு, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி, 

இயக்கி இருப்பவர் இயக்குனர் ராமின் உதவியாளரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ் 

படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,  ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்,  எடிட்டர்   செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு,     சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம்  

சிறப்பு விருந்தினராக ராம் கலந்து கொண்ட – படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன . 

திருநெல்வேலி சட்டக் கல்லூரி , படிக்கும் மாணவர்களிடையே சாதிச் சண்டை , தாழ்த்தப்பட்ட மக்களை நாயெனப் பேசும் சாதி வெறி ,

அந்த மக்கள் வளர்த்த நாயையே கொல்லும் மிருக வெறி , காதல் , எளிய மக்களின் வாழ்வியல், வாயில்லா ஜீவன்கள் மீதும் அவர்கள் காட்டும் அன்பு, – என்று அற்புத உணர்வுகளின் கலவையாக இருந்த முன்னோட்டமும் பாடல்களும் நெகிழவும் பிரம்மிக்கவும் வைத்தன 

கறுப்பி என்ற பாடலும்  நான் யார் என்ற பாடலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக்குரலாகவே ஒலித்தன. 

நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்…. 

“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே   பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார்

அவருடைய கனவு என்பது மனித சமூகத்தின் மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே    இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள்தான் எப்போதும் நினைவில் இருக்கும்

 அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார்….’நான் கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன்…. 

தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள்’ என்று !

நிச்சயமாக அந்தத் தேரை நான்முன்னோக்கி  இழுத்துச் செல்வேன். அதற்கான   ஆரம்பம்தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை உடைக்கிற வேலையை செய்வேன்.

இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை  செய்ய வேண்டியிருக்கிறது. 

இங்கு தாழ்த்தப்பட்ட மக்களில் கூட சில பேர் தமக்கு கீழ் ஜாதி இருப்பதாக சொல்லப் படுகிற அமைப்பை ஏற்று ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள்.

அவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்களே !

இந்தப் படம் உருவாவதற்கு  நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில்  முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். 

எனக்கு  அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும்.  இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். 

காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும்  நெகிழ்ச்சியானது.  என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு  வயது முதலே எனக்குண்டு. 

அந்த எண்ணம்தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம்,  பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும்,

நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம்,  

என் மனைவி அனிதாதான் எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று  நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை.

 நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார்.அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். 

கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். 

ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியைகொடுத்திருக்கிறது.யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து  பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத்தான் நான் விரும்புகிறேன். 

அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.

அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித்  தந்திருக்கிறார். 

 சந்தோஷ் நாரயணன் இசைபடத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, 

நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்றார் 

இயக்குநர் ராம் பேசுகையில்,”எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருகிறது. 

ஒரு தனித்த பனிச்சாலை.  

ஆளற்ற அந்தச் சாலையில் நீளஅங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது.

அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கி போட்ட மனிதர்தான் பா.இரஞ்சித். 

அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்துதான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறான்.  எனது பூர்வீகமான  திருநெல்வேலியை  எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ். 

என் பாட்டன் அப்பன்  வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். 

தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் தப்பிய கூழாங்கல் அவன்.

இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின்  இயக்குநர் ராம் என்றுஅடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். 

கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம்  கிடைக்கும்.

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல்.  கதிரைப் பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது.இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,“இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ,  முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ, 

எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை.காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும்  எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். 

முதலில் நான் சினிமாவிற்குள்அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என்  வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. 

ஜாலியானஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான்  பரியேறும் பெருமாள். 

ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது  நான் சந்தித்த, 

கடந்து போன பல மனிதர்களும்,சம்பவங்களும் இந்தப் படம் வேறு தளத்திற்கு போகக் காரணம்.

இந்தக் கதையை கேட்டதும், உடனேஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித்  அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்கமுடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக, 

எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.

முதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.  அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம்பேசினோம்.   

அவரும் கொடுத்து இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம்.

 முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம்… ஆனால் சந்தோஷ் சாரே  முன்வந்து  இன்னொரு  பாடலையும் போட்டுக்கொடுத்தார்.

கேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக  உழைத்திருக்கிறார்கள்.

 கதிர், கயல் ஆனந்திஇருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு  நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்புமிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி  என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும். 

நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம்தான். இன்று  இங்கு என் குடும்பத்தார்கள் யாரும் இல்லை.

ஆனால்மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாக பேசினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள் என்பது துவக்கத்திலேயே தெரியும் . இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. 

இந்த படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. 

அதை எப்படி உடைப்பது என்பது பற்றி மாரிசெல்வராஜ் என்னிடம் பேசியது எனக்குப் பிடித்தது. 

உலக சினிமா, பொதுமக்கள் பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்றுவிதமாக இருந்தது.  அதை அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்தது.அவர் தன்சொந்த வாழ்க்கையில் நடந்ததைச்  சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர்  மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். 

எல்லாத் தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடலை  வெளிநாட்டில்  இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள். 

மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டுபோவார் என்று எனக்கு ஒரு  கனவு இருக்கிறது . அது கண்டிப்பாக நடக்கும்.  

பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.  ரஞ்சித் போன்றஇயக்குநர்கள் படம் தயாரிக்கும் போதுதான், 

 இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள்  அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஒருவேளை , பரி ஏறும் பெருமாள் என்று  பெயர் வைத்து இருந்தால்… இன்னும் வலுவாக கம்பீரமாக இருந்திருக்குமோ ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *