சந்தானம், அனைகா சோதி நடிப்பில் ஏ 1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கி இருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்… அதாவது பாரிஸ் கார்னர் ஜெயராஜ்.
வட சென்னையின் கானா பாடல்களைப் பாடும் இளைஞன் ஒருவனுக்கு (சந்தானம்) ஓர் இளம்பெண் ( அனைகா சோதி) மீது காதல்.
பையனின் அப்பாவோ திருமணம் ஆகி விவாகரத்துக்கு வரும் ஜோடிகளை மட்டுமின்றி காதல் ஜோடிகளையும் பெற்றோர் ஆசைப்படி பிரித்து வைப்பதில் எக்ஸ்பர்ட் ஆன வக்கீல் . (தெலுங்கு நடிகர் மாருதி)
இதனால் அவரைக் கொலை செய்ய அலைகிறார் , பாதிக்கப்பட்ட பையன் ஒருவனின் தந்தை( மொட்டை ராஜேந்திரன்)
இந்த நேரத்தில்தான் நாயகியின் அம்மா… நாயகனின் அப்பாவின் இன்னொரு….. என்று தெரிய வர ..
அப்புறம் என்ன என்பதுதான் இந்த பாரிஸ் ஜெயராஜ்.
ஆனந்தக்கும்மி படத்தின் கதையை எடுத்துக் கொண்டு ( இடை வேளை திருப்பம் வரை அப்படியே ) அதில் ஊட்டி வரை உறவு படத்தின் நகைச்சுவைத் தன்மையை குழப்பி அடித்து படத்தைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஜான்சன் .
ஆரம்பத்தில் கொஞ்சம் ‘ அட’ போட வைத்தது வசனம் . ஆனால் அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு அடுத்த பீரியடில் காலைக் காட்சிக்குக் கட் அடிக்கும் மாணவன் போல, அதோடு எஸ்கேப்.
சந்தோஷ் நாராயணின் இசையில், ஒரு சில டிராக்குகள் ரிக்கார்ட் பண்ணும்போது அழிந்து விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு — யதார்த்தமான இரண்டாம் நிலைக் கச்சேரிகளை நினைவு படுத்தும் பாடல்கள் அருமை.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அருமை . கிளாட் சன்!
ஜான்சனின் சமூக அரசியல் குறும்புகள் அபாரம்.
சந்தானம் வழக்கம் போல கல கல. ஆனால் கொஞ்சம் யதார்த்த உலகத்துக்கு வரலாம்.
அனைகா சோதி….க்கிறார்.
கதாநாயகியை விட நாயகன் நாயகியின் அம்மாக்களே அழகாக இருக்கிறார்கள்
தெலுங்கு நடிகர் மாருதி ராவுக்கு முன்பே காட்சிகளை விளக்கினீர்களா நியாயமாரே? எல்லா காட்சிகளிலும் தோராயமாவே நடித்து இருக்கிறார்.
காமெடி அல்லது காமெடிக்கு முயற்சி அல்லது காமெடி என்ற பெயர் …. இந்த வகையில் பயணப்படும் படத்தில் கடைசியில் ‘சம்பவம்’ நிஜம்
அல்லது நிஜமில்லை எனில் சுப முடிவு என்று விட்டிருக்கலாம் .
ஆனால் திருப்பத்துக்கு மேல் திருப்பம் என்ற பெயரில் முட்டு சந்தில் விட்டு கும்முகிறார்கள் .
எனினும் ரிலாக்ஸ் ஆக சிரித்து விட்டு வரலாம்.
எப்படியாவது… எப்படியோ கண்டிப்பாக சிரிப்பீர்கள் .