ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யா பிரகாஷ் தயாரிக்க, ஆதி, யோகிபாபு, ஹன்சிகா மோத்வானி , பலக் பால்வானி நடிப்பில் மனோஜ் தாமோதரன் இயக்கி இருக்கும் படம்.
வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத நிலையில், கடன் கொடுத்தவன் , ”உன் தங்கையைத் திருமணம் செய்து கொடு ” என்று கேட்க, அதை விரும்பாமல் சென்னைக்கு சம்பாதிக்க வரும் நபர் ( ஆதி), தனது ஊர்க்கார நண்பன் (யோகி பாபு) ஒருவனிடம் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தை சொல்ல,
அவன் ஹேக்கிங் உட்பட எல்லா அயோக்கியத்தனங்களையும் ஆபீஸ் போட்டு செய்யும் ஓரிடத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறான் .
இடையில் ஒரு பெண்ணோடு (பலக் லால்வானி) காதல்
டி என் ஏ ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானியின் ( பாண்டிய ராஜன்) ஆராய்ச்சிக் குறிப்புகளை திருடித் தரச் சொல்லி ஒருவன் ( ஜான் விஜய்) கொடுக்கும் வேலைக்காக , அந்த விஞ்ஞானி வீட்டுக்குள் நாயகனும் நண்பனும் நுழைய , தவறுதலாக ஒரு கெமிக்கல் ஊசி குத்தி நண்பன் பெண்ணாக (ஹன்சிகா மோத்வானி) மாறி விடுகிறான் .
நண்பனுக்கு ஊரில் ஒரு காதலி இருக்கும் சூழலில் , அவனை மீண்டும் ஆணாக மாற்றும் கட்டாயம் … குறிப்பட்ட காலத்துக்குள் ஊருக்கு பணத்தோடு போக வேண்டிய கட்டாயம் என்ற சூழலில் நாயகன் சொன்னது என்ன? நடந்தது என்ன என்பதே படம் .
எண்பதுகளில் வந்த இரண்டாம் தரப் படங்களைப் போல, பேசுகிறார்கள் .. பேசுகிறர்கள்… பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . அது எல்லாம் காமெடி என்று அவர்கள் நம்புகிறார்கள் . பார்ப்பவர் மனசுதான் வெம்புகிறது . யோகி பாபு ஹன்சிகா மாறுவது சுவாரஸ்யமான விஷயம்தான் . ஆனால் அதை வைத்து அடுத்து என்ன செய்வது என்பதில் எடுத்தவர்களுக்கு தெளிவு இல்லை . எனவே பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் இல்லை.
ஹன்சிகா , யோகிபாபு மாதிரி உடல் மொழிகள் கொடுத்து உற்சாகமாக நடித்துள்ளார். பலக் லால்வானி பால்வாடி பாப்பா போல இருக்கிறார் . ரெண்டு பேரும் சற்றே படத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஆதி இன்னும் இளமை குன்றாமல் இருக்கிறார் .
காமெடி என்பது எதையாவது பேசிக் கொண்டே இருப்பது இல்லை என்பதை இவர்கள் எல்லாம் எப்போது உணரப் போகிறார்கள் ?