பசங்க 2 @ விமர்சனம்

pasanga 1

இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , முக்கியக் கதாபாத்திரங்களில் சூர்யாவும் அமலா பாலும் நடிக்க, முழு நீள கதாபாத்திரங்களில் கார்த்திக் குமார், பிந்து மாதவி , முனீஸ் காந்த் , திவ்யா மற்றும் சில குட்டீஸ் நடிக்க ,

பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் பசங்க -2

இந்தப் பசங்க  வால் பசங்களா? இல்லை வாள் பசங்களா? பார்ப்போம் .

கல்யாணம் ஆன உடன் குழ்நதை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி,  ஸ்கேனில் குழந்தை பார்த்து சிலிர்த்த உடன் சாதித்து விட்டதாக முடிவு செய்யும் பல தம்பதிகள்,  அதன் பின்னர் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள்?

கர்ப்பத்தில் குழந்தை இருக்கும்போது ஸ்டீரியோ சவுண்டில் பேய்ப் படங்கள் பார்ப்பது , வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது , கணவன் மனைவி சண்டை போடுவதால் கர்ப்பிணிப் பெண் அழுவது , நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக குறைமாதக் குழந்தையாக ஆப்பரேஷன் செய்து எடுப்பது …

இப்படிப் பட்ட முட்டாள்தனங்களால்  பிறக்கும் குழநதைகள் எப்படி முழு ஆரோக்கியமாக உருவாகும் ? ஸ்பாஸ்டிக் போன்ற மன வளர்ச்சி உடல் வளர்ச்சி இல்லாத நோய்கள்,   டிஸ்லெக்சியா போன்ற கற்றல் திறன் குறைபாடு,   ஏ டி ஹெச் டி எனப்படும் அதீத செயல்பாடுகள் உள்ள பிள்ளைகளாக அவை பிறக்கின்றன .

முந்தைய கல்வி முறையில் கிடைத்த  சூழல் மற்றும் கற்பிக்கப்படும் அக்கறை காரணமாகவே சிற்சில சாதாரண கற்றல் குறைபாடுகள் தாமாக காலப்போக்கில் சரியாகின. .

pasanga 2

ஆனால் புற்றீசல் போல பெருகி புற்று நோய் போல வீங்கி  நிற்கும் தனியார் பள்ளிகள் யாவும்,  இப்போது மாணவனுக்குக் கற்றுக் கொடுத்து அறிவாளியாக்குவதை விட….

அவர்களை  மனப்பாடம் செய்து மார்க் எடுக்கும் எந்திரங்களாக , முதல் ரேங்க் என்ற பொதியை சுமப்பதற்காக   வதைக்கப்படும் வண்டி  மாடுகளாக உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன .

இப்படி பள்ளிகள் ஒரு பக்கம் மாணவனை வதைப்பது போதாது என்று….

இந்த நவீன புழுங்கடிப்புக்  கல்விதான் பெரிது என்று என்னும் பெற்றோரும் தங்கள் பங்குக்கு குழந்தைகளை கொடுமை செய்கின்றனர் என்பதை,

மேலே சொல்லி இருக்கும் விசயங்களை எல்லாம் காட்சிகளாக  வைத்து பொளேர் என்று பொட்டில் அடித்து  சொல்கிற படம்தான் இந்த பசங்க .

பத்துப் பதினைந்து வருடம் முன்பு ‘’ பள்ளிப் புத்தகங்களே! என் குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்” என்று எழுதிய கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட யாருக்குமே அப்போது தெரியாது…இன்னும் சில வருடங்களில் புத்தகங்கள் மட்டுமல்ல , ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்தே  குழந்தைகளைக் கிழிக்கப் போகிறார்கள் என்பது . .

அப்படி…. இப்போது எப்படி ‘கிழித்து’க் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதயத்தில் தைக்கும்படி சொல்லும் படம் இது .

pasanga 5

கர்ப்பகாலத்தில் இருந்தே தவறாக வாழ்க்கை முறைகளை மேற்கொள்ளும் ஒரு தம்பதிக்கு (கார்த்திக் குமார் – பிந்து மாதவி) ஒரு மகளும்  அதே போன்ற இன்னொரு தம்பதிக்கு (முனீஸ் காந்த் – திவ்யா ) ஒரு மகனும் பிறக்கின்றனர்.  கற்றல் குறைபாடு, உடல் ரீதியாக நிகழும் அதீத உற்சாகம் காரணமான ஒழுங்கின்மை போன்ற பிரச்னைகள்  அந்தக் குழந்தைகளுக்கு இருக்கின்றன.

அதே நேரம் இயல்பான அறிவு , படைப்பாற்றல் , எதையும் தனித் தன்மையுடன் செய்யும் மனோபாவம் , ரசனை , உற்சாகம்  என்று அவர்களுக்கு பல சிறப்பான திறமைகளும் உள்ளன.

ஆனால் இயந்திரத்தமான  இங்க்லீஷ் ‘டிசிப்ளி’னை மட்டுமே ‘அகடமிக்’ ஒழுங்காக நினைத்துக் கொண்டு, பிராய்லர் கோழிப் பண்ணை போல நடததப்படும் கேவலமான தனியார் பள்ளிகளின் அடி முட்டாள் ஆசிரிய மண்டுகளுக்கு,  அந்தக் குழநதைகளின்  திறமை எதுவும் தெரியவில்லை. மாறாக அந்தக் குழந்தைகள் பள்ளிக்கு வந்து படிக்கவே லாயக்கற்ற பிள்ளைகளாகத்  தெரிகின்றனர்.

தங்கள் பிள்ளைகளின் சிறப்புகளை உணராமல் ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே நம்பும் பெற்றோர்களும் பிள்ளையின் ‘பிரச்னை’யைத்  தீர்க்க பல்வேறு டாக்டர்களைப் பார்த்தும்,  டாக்டர்கள் பணம் பிடுங்கியதுதான் நடந்ததே தவிர ‘பலன்’ இல்லை .

Pasanga 2 Stills-Photos-Suriya-Amala Paul

எல்லாப் பள்ளிகளும் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு  டி சி கொடுத்து அனுப்பிக் கொண்டே இருக்க , வருஷம் ஒரு ஸ்கூலுக்கு அலைந்து இடம் வாங்கி , அதற்கேற்றவாறு வீடு மாற்றி , கோபத்தின் உச்சிக்குப் போகும் பெற்றோர் இரண்டு பேரையும் சிறுவர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு வருகின்றனர். பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் அந்தக் குழந்தைகள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கின்றனர் .

இந்த இரண்டு தம்பதியும் வசிக்கும் குடியிருப்பில் வசிக்கும் ஒரு டாக்டர் (சூர்யா) குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த ஆலோசனைகள் சொல்பவர் . அவர் மனைவி (அமலாபால்),  நவீன கல்வி முறையின் நச்சுக் கிருமிகள் ஏதும் இல்லாத  ஒரு சிறந்த முன்மாதிரிப் பள்ளியில் முன்மாதிரி ஆசிரியையாகப் பணியாற்றுபவர் .

கர்ப்பத்தில் இருந்த காலம் தொட்டே சிறப்பாக வளர்க்கப்படும் டாக்டர்–  ஆசிரியை தம்பதியின் மகனும் மகளும் மட்டும் எல்லா விசயங்களிலும் சிறந்து விளங்குகிறார்கள் .

பாதிக்கப்பட்ட குழநதைகள்  இருவருக்கும் உதவ டாக்டர் முன்வந்தும்,  சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் அவரை நம்பாமல் தவறான வழியிலேயே நடந்து தங்கள் குழந்தைகளை கஷ்டப்படுத்துகின்றனர் .

ஒரு நிலையில் அந்தக் குழந்தைகள் இருவரும் சிறுவர் ஹாஸ்டலில் இருந்தும் ஓடி வந்து விட , அவர்களை பெற்றோர் அடிக்க , அவர்கள் காணாமல் போக, விஷயம் டாக்டருக்கு தெரிய வர, அப்புறம் என்ன நடந்தது என்பதே பசங்க – 2

pasanga 7

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு நாம் சரியான குழந்தைப் பருவதத்தை தருவதில்லை என்பது மட்டுமல்ல , அவர்கள் கர்ப்பப் பையில் சிறப்பாக உருவாகவும் , முழுமையாகப் பிறக்கவும் கூட இன்றைய பெற்றோரும் வாழ்க்கை முறையும் பொழுதுபோக்கு அம்சங்களும் மருத்தவ முறைகளும் ஏன் ஒட்டு மொத்த சமுதாயமும் அனுமதிப்பதில்லை என்று…..

 பிரச்னையின் ஆணிவேரை தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுக்கும் விதத்தில் விஸ்வரூபம் எடுக்கிறார் திரைக்கதையாளர் பாண்டிராஜ் .

பிள்ளைகளை பிள்ளைகளாக மந்திக்காத மோசமான பள்ளிக்கு லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துச்  சேர்க்க , அப்ளிகேஷன் வாங்க முதல் நாள் முதலே லாரியில் போகும் அடிமாடு கணக்காக கியூவில் நிற்பதில் துவங்கி…

இயல்பாக விட்டாலே நன்றாக வளர வாய்ப்புள்ள குழந்தைகளை நாம் திட்டமிட்டு இன்றைய பள்ளிக் கல்வி என்ற பெயரில் சுமார் பதினைந்து வருடங்களில் மழுக்கி…

 சுய சிந்தனையற்ற ஜடமாய் வெளியே கொண்டு வருவதை திரைக்கதையில் பாண்டிராஜ் விவரிக்கும் விதம் ஒவ்வொரு பெற்றோரையும் சுய பரிசோதனைக்கு ஆளாக்கும் .

அரசுப்பள்ளி ஆசிரியர் தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க கியூவில் நிற்கும் கொடுமை முதற்கொண்டு நமது கல்வி முறைச் சீர்கேட்டின் பல அதிரவான பக்கங்களை காட்டுகின்றன பல காட்சிகள் 

அதே நேரம் படத்தில் வரும் சகல கேரக்டர்கள் மூலமும் அவ்வப்போது வெடிச்சிரிப்பு நகைச்சுவைகளை கொண்டு வருவதிலும் ஜெயிக்கிறார் பாண்டிராஜ்.

pasanga 6

“பையன் கெட்ட வார்த்தை பேசறான் டாக்டர் “

அது அவன் கேட்ட வார்த்தைன்னு சொல்லுங்க . அவன் என்ன அந்த வார்த்தையை கண்டு பிடிச்சுக்கிட்டா வந்தான்? நாம பேசுறத கேட்டு பேசறான். ‘’

வசனகர்த்தா பாண்டிராஜின் வார்த்தை வீச்சுக்கு இந்த ஒரு வசனம் போதுமே . ஆனால் படம் முழுக்க இப்படி கொட்டிக் கிடக்கிறது பக்குவமான வசனங்கள்.

‘’முன்னல்லாம் கவர்மென்ட் பள்ளிக்கூடம் நடத்தும் . தனியார் மதுக்கடை நடத்துவாங்க . இப்போ கவர்மென்ட் சாராயக்கடை நடத்திக்கிட்டு பள்ளிக்கூடங்களை தனியாரிடம் கொடுத்து விட்டது “ என்ற பழகிய வசனமும் கூட,  பதமான இடத்தில் வருகிறது .

ஒரு நிலையில் சற்று நேரம் கல்வி மருத்துவ டாக்குமெண்டரி போல போகும் படத்தை சட்டென்று சுதாரித்து இழுத்துப் பிடித்து நெகிழ்ச்சியூட்டும் கிளைமாக்ஸ் கொடுத்து படத்தை முடித்த விதத்தில் இயக்குனர் பாண்டிராஜ் வெற்றிப் புண்னகை புரிகிறார் .

எடுத்துக் கொண்ட கருத்தில் இருந்து இம்மியும் பிசகாதபடி அமைக்கப்பட்டு இருக்கும் அந்த கடைசிக் காட்சி , இந்தப் படத்தின் மகுடம் .

pasanga 8

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்!

இந்த மனுஷன் மட்டும் எந்த கம்பெனியில் கேமரா வாங்குகிறார் என்று துப்பறிந்து கண்டுபிடித்து அந்த ரகசியத்தை நாட்டுடமையாக்க வேண்டும். (சும்மா ஜோக் !) அப்படி ஒரு அழகு ,  வண்ணக் குழைப்பு..

 கண்களின் காதலுக்கு ஆளாகும் இவரது அழகிய ஒளிப்பதிவு இந்தப் படத்தின் சூட்சும பலம் .

காஸ்டியூமும் கலை இயக்கமும் அதற்கேற்ப இணைந்து குழைந்து கிடக்கிறது .

சாமி சத்தியமாக திவ்யா ஒரு சாதாரண ரோஸ் கலர் புடவைதான் கட்டி இருக்கிறார் . ஆனால் அது பாலசுப்பிரமணியெம் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு வரும்போது … விவரிக்க வார்த்தைகளே இல்லை . சூப்பர் பாலசுப்பிரமணியெம்.

pasanga 3

பாதிக்கப்பட்டகுழந்தைகளாக வரும் குட்டீஸ் இருவரும்,  நடிப்பில் பழம் தின்று கோட்டை போட்ட பெருசுகளுக்கு சவால் விடுகிறார்கள் .

முகத்தில் பொறித்து வைத்துக் கொண்ட ஒரு புன்னகையோடு டாக்டர் கேரக்டரை அவ்வளவு அழகாக செய்து இருக்கிறார் சூர்யா . அமலா மட்டும் என்ன? தண்ணி கலக்காத பசும்பால் நடிப்பு .

pasanga 4

தம்பதிகளின் நடிப்பும் சிறப்பே .

முனீஸ்காந்தின் திருட்டுப் பழக்க நோயை வெடிச்சிரிப்புக் காமேடியோடு திறந்த வெளியாகக் காட்டி , ‘அவர் மகளுக்கு  உள்ள பிரச்னைக்கு ஒரு விதத்தில் அவரது மரபணுவும் காரணம் . அப்படி இருக்க குழந்தையை அடிப்பது என்ன நியாயம்/’  என்று  மானசீகமாகக் கேட்கும் காட்சியில் ….

பாண்டிராஜின் திரைக்கதை பிணைந்த டைரக்டோரியல் டச் அபாரம் .

டாக்டரின் மகன் ஒரு ஓவியத்தை வரைந்து அதைத் திருப்பி வைக்க அது அன்னை தெரசாவின் அழகிய ஓவியமாக வியக்க வைக்கும் .

அது போல பாமரருக்கு புரியாத பல  ஆங்கில அதுவும் மருத்துவ வார்த்தைகள் கொண்டு பயணிக்கும் படம் , ஒரு திருப்பத்தில் எமொஷனலும் செண்டிமெண்டும் கொண்டு திருப்பி வைக்கப்படும்போது அன்னை தெரசாவின் சேவையைப் போல நெகிழ வைக்கிறது .

அமலா பால் பணிபுரியும் பள்ளியை தாய்த்தமிழ் பள்ளி என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .

குழந்தைகளுக்கு காட்ட வேண்டிய படம் . பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் . ஆக , இதை குழந்தைகள் படம் என்று  சொல்வதை விட பெற்றோர்கள் படம் என்று சொல்வது மிகவும் பொருத்தம் .

மொத்தத்தில்

பசங்க -2 …… நல்லாசிரியன் !

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————————

பாண்டிராஜ், பால சுப்பிரமணியெம். குட்டீஸ்கள், சூர்யா ,அமலா பால்

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →