பட்ற @ விமர்சனம்

patra 6

GK சினிமாஸ் சார்பில் வி.காந்தி குமார் தயாரிக்க, புதுமுகங்கள் மிதுன் தேவ்,  ஆதேஷ், வைதேகி,புலிபாண்டி, சாம் பால் ஆகியோர் நடிப்பில் ஜெயந்தன் இயக்கி இருக்கும் படம் பட்ற. பட்டறை என்பதன் பேச்சு வழக்கு சொல் இது. இந்தப் பட்ற தயாரித்திருக்கும் விஷய ஆயுதம்  என்ன? பார்க்கலாம் .

அன்பான அம்மா,  அப்பா,  தங்கை ஆகியோருடன் சந்தோஷமாக வாழும் கல்லூரி மாணவன் கண்ணன் (மிதுன் தேவ்),  கரிகாலன் என்ற அரசியல்வாதியின் (புலிப்பாண்டி) தம்பியான ஒரு சக மாணவன் கல்லூரியில் செய்யும் அடாவடித்தனத்தை கண்ணன் கண்டிக்கிறான் .

சக மாணவியிடம் தவறாக நடந்து கொள்ளும் அந்த அயோக்கிய மாணவனை வேறு இரண்டு மாணவர்கள் தாக்க, கண்ணன் மீது சந்தேகப்படும் கரிகாலன் , போலீசில் இருக்கும் தனது சொந்தக்காரனும் அடாவடி இன்ஸ்பெக்டருமான நடராஜனை (ஆதேஷ்) வைத்து கண்ணனை கைது செய்து ஸ்டேஷனில் வைத்து நையப்புடைக்க, அந்தக் குடும்பம் பதறிப் போகிறது .

கரிகாலன் சார்ந்த கட்சியின் தலைவருக்கு (ரேணிகுண்டா கணேஷ்) வேண்டியவனான ஒரு தாதா தனா (சாம் பால்).  இரண்டுங்கெட்டான் வயதும் நல்லது கெட்டது அறியாத மனசும் கொண்ட சிற்றிளைஞர்களை போலி பாசம் காட்டி  ரவுடியாக்கி தனக்கு சாதகமாக பல சமூக விரோத செயல்களை செய்ய வைத்து, ஒரு நிலையில் அவர்களையும் தயவுதாட்சண்யம் பார்ப்பாமல் அழிப்பவன் இந்த தனா. 

patra 2

ஆனால் கரிகாலனுக்கும் தனாவுக்கும் கட்சித் தலைவரிடம் முக்கியத்துவம் பெறும் போட்டியில் பெரும்பகை வந்து,  அது பலமுறை இருவருக்குள்ளும் அடிதடி,  கொலை முயற்சிகள் வரை போயிருக்கிறது .

இந்த நிலையில் கண்ணன் வாழும் பகுதியில் வாழ்கிற — தனாவுக்கு வேண்டிய ஒரு விலைமாது (உமா) , கண்ணன் குடும்பத்திடம் பழகி கண்ணனின் தங்கையையும் தனாவுக்கு விருந்தாக்க  திட்டமிடுகிறாள்.

அதற்கு வசதியாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட கண்ணனை தனா மூலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டுத் தருகிறாள். அதனால் கண்ணன் தனாவின் ஆள் என்று கரிகாலனும்  இன்ஸ்பெக்டர் நடராஜனும் முடிவு கட்டுகின்றனர் .

அடுத்து ஒரு சண்டையில் கரிகாலனின் மகனை தனாவின் ஆட்கள் தாக்க , கரிகாலனின் எண்ணப்படி கண்ணனையும் வஞ்சம் வைத்துக் கைது செய்கிறார் அயோக்கிய இன்ஸ்பெக்டர்  நடராஜன். இப்படியாக கரிகாலன் — தனா  குழுக்கள்  அடித்துக் கொள்ளும்போது எல்லாம்,  அதனால் அநியாயமாகப் பாதிக்கப்படுகிறது கண்ணன் குடும்பம்.

ஒரு நிலையில் அந்த விலைமாது கண்ணனின் தங்கையை தனாவுக்கு விருந்தாக்கும் நடவடிக்கைகளில் இறங்க , கரிகாலன் தனா இருவரைப் பற்றியும் அறியும் கண்ணன்  பொங்கி எழுகிறான் .

கண்ணனின் தங்கைக்கு நடந்தது என்ன? கரிகாலனும் தனாவும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து விட்ட நிலையில்,  எளிய மனிதனான கண்ணனால் அவர்களை என்ன செய்ய முடிந்தது ?

— என்பதே இந்தப் படம்.

patra 4

தன்னிலை உணர்தலும் ஆதரவும் இல்லாத இளைஞர்கள்,  பண பலம் கொண்ட அயோக்கியத்தனமான –  சமூக விரோதிகளை நம்பி , காரியம் ஆவதற்காக அவர்கள் காட்டும் போலிப் பாசத்துக்காக அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து  குற்றவாளியாகி , ஒரு நிலையில் வாழ்க்கையை இழந்து , இனி பயனில்லை என்ற நிலையில் , அந்த தாதாக்களாலேயே அழிக்கப்படும் அவலத்தை படத்தில்  மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்,  எழுதி இயக்கி இருக்கும் ஜெயந்தன் .

நாயகன் நாயகி சந்திக்கும் முதல் காட்சியை மிக வித்தியாசமாக யோசித்து எடுத்திருக்கிறார் இயக்குனர் . சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு கூட பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து அசத்துகிறார்

patra 3

தனாவுக்காக கத்தி எடுத்து எதிரிகளால் படுகாயம் அடைந்த அடியாள் ஒருவன்,    பண உதவி செய்ய தனா வருவான் என்று நம்பி மருத்துவமனயில் உயிருக்குப் போராடியபடி ஏக்கத்தோடு காத்திருப்பதும் அந்த அடியாளின் அம்மா மகனைக் காப்பாற்ற பிச்சை எடுப்பதும் , கடைசியில் பணம் இல்லாத காரணத்தால் மருத்துவம் செய்ய முடியாத அந்த அடியாள்,தனாவை  சபித்துக் கொண்டே விரக்தியில் சாவதும் , படம் பார்க்கும் யாருடைய மனசையும் அசைத்துப் பார்க்கும் . படத்தின் அடி நாதமே இந்த ஏரியாதான்.  சபாஷ் ஜெயந்தன் !

யாரோ யாரையோ கொலை செய்ய முயல்வது போல படத்தை ஆரம்பித்து,  பின்னர் அதை கிரிக்கெட் விளையாட்டு என்று காட்டி,  அடுத்த காட்சியின் துவக்கத்திலேயே ஆரம்ப பில்டப்புக்கு நியாயம் செய்வது உட்பட,  பல இடங்களில்  ஜெயந்தனின் டைரக்ஷன் உத்திகள் ரசிக்க வைக்கின்றன.

கரிகாலனை கொலை செய்ய தனாவின் ஆட்கள் துரத்தும் காட்சியில் , காட்சியின் முடிவை முதலில் காட்டி விட்டு அப்புறம் காட்சியை விளக்கும் உத்தியில் ஜொலிக்கிறார் எடிட்டர் மணி . மிரட்டல் செல்வாவின் சண்டைப் பயிற்சியில், ஆவேச  துரத்தல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

ஸ்ரீகிருஷ்ணாவின் இசையும் சுனோஜ் வேலாயுதனின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு துணையாக நின்று காட்சிகளுக்கு பலம் சேர்க்கின்றன.

patra 5

ஆரம்ப அப்பாவித்தனம் , பின்னர் மாற்றம்  இவற்றை நடிப்பில் கொண்டு வருவது, கடைசியில் சிக்ஸ் பேக் உடம்பு என்று…. படத்துக்காக உழைத்து இருக்கிறார் நாயகன் மிதுன் தேவ்.

வைதேகி பரவாயில்லை ரகம். ஆனால் அந்த முகத்தில் ஒரு அன்னியோன்யம் தெரிகிறது . இந்தப் படத்தில் வேலை குறைவு என்பதால் அவரது அடுத்த படங்களில் என்ன செய்கிறார் பார்ப்போம் .

உயரம்,  உடம்பு , முக்கியமாக குரல் இவற்றால் மிரட்டுகிறார் வில்லன் சாம் பால். புலிப்பாண்டி பொருத்தமான நடிப்பு. படம் என்பதையே மறந்து வசவு விடும்படி சிறப்பாக நடித்துள்ளார் அயோக்கிய இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் .

முடிந்த வரை வெகு யதார்த்தமாக போகிறது படம். கிளைமாக்சை நோக்கிய பயணத்தில் கொஞ்சம் சினிமாத்தனமாகிறது.

எனினும் , நேர்மை , கயமை , பலம், பலவீனம் , பயம் தைரியம் இவற்றை வாழ்க்கையோடு நெருக்கிச் சொல்லும்  திரைக்கதை பாராட்டுக்குரியது .

பட்ற….  முத்திரை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →