பயணிகள் கவனிக்கவும் @ விமர்சனம்

ஆல் இன்  பிக்சர்ஸ் சார்பில் டி. விஜய ராகவேந்திரா தயாரிக்க விதார்த் , கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திர மவுலி, மாசும் ஷங்கர், பிரேம் குமார் மற்றும் பலர் நடிப்பில் எஸ் பி சக்திவேல் இயக்கி ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும்  படம் . 

கொச்சியில் மெட்ரோ ரயிலில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மலையாளத்தில் எம்ஸி ஜோசப் இயக்கி மூன்று வருடம் முன்பு வந்த விக்ருதி என்ற படத்தின் மறு உருவாக்கம் . விக்ருதி என்றால் குறும்பு என்று பொருள் . 

கல்லூரி ஒன்றில் லைப்ரேரியனாக பணி புரியும் எழிலனும் ( விதார்த்) அவனது மனைவியும் (லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி) பேச்சு மாற்றுத் திறனாளிகள். எழிலனாவது உடைந்த வார்த்தைகளைப் பேச முடியும். அவர்களுக்கு  கால்பந்து வீரனாக வர பயிற்சி எடுக்கும் மகன், பள்ளி படிக்கும் மகள் என்று இரண்டு பிள்ளைகள். இருவரும் நன்றாகப் பேசுவார்கள். 

அப்பா இறந்து விட்ட நிலையில் அயல்நாட்டில் உழைத்து அம்மா , தங்கை, அக்கா , அக்காவின் கணவர் , பிள்ளைகள் என்று எல்லோருக்கும் ஊற்றாக இருக்கும் ஆண்டனி (கருணாகரன்) ஒரு சோஷியல் மீடியா பைத்தியம் .  எதைப் பார்த்தலும் புகைப்படமோ காணொளியோ எடுத்து முக நூலில் பதியும் குறைபாடு உள்ளவன் . 

ஊருக்கு வந்த நிலையில் அவனுக்குத் திருமணம்  செய்து வைக்க அம்மா முடிவு செய்ய, அவன் சிறுவயது முதல் விரும்பிய  ஜெஸ்சி (மசூம் சங்கர்) என்ற பெண்ணையே நிச்சயம் செய்கிறார்கள் .

எழிலன் மகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர இரண்டு முழு நாட்கள் தூக்கமே இல்லாமல் மருத்துவமனையில் இருந்த எழிலன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு மின்சார ரயிலில் வரும்போது அசந்து தூங்கி விடுகிறான் . 

அதே ரயிலில் பயணிக்கும் ஆண்டனி , எழிலன் குடித்து விட்டு மின்சார ரயிலில் படுத்து இருப்பதாக எண்ணி அதைப் படம் எடுத்து கிண்டல் செய்து கண்டித்து  முக நூலில் பதிகிறான். 
மிக அதிகப் பார்வைகள் பெறும் அந்தப் பதிவால் எழிலன் பெருத்த அவமானத்துக்கு ஆளாகிறான். 

நன்றாகப் பேசுபவனின் நியாயங்களையே காது கொடுத்துக் கேட்காத இந்த உலகம் அவன் சொல்வதையா கேட்கும்? அவனது வேலை பறிபோகிறது .அவனது மகனின் கால்பந்தாட்ட வீரன் கனவு பாதிக்கப்படுகிறது. 

ஆண்டனி,  தான் செய்தது தவறு என்று உணர்ந்தும் தப்பித்து ஓடவே முயல்கிறான் . 
எழிலன் காவல்துறையில் புகார் கொடுக்க, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பயணிகள் கவனிக்கவும். பாலகுமாரன் எழுதிய புகழ் பெற்ற நாவல் ஒன்றின் தலைப்பு . 

மிக எளிமையான இயல்பான யதார்த்தமான மேக்கிங். அதுவே இந்தப் படத்தின் பலம். 
முழுதாகப் பேச முடியாத-  மூக்கால் பேசுவது போன்ற குரல் எழுப்பும், பேச்சு மாற்றுத் திறனாளி பாத்திரத்தில் அற்புதம் செய்திருக்கிறார் விதார்த் என்ற நடிப்பு அசுரன்.

அந்தப் பேச்சு, அதற்கேற்ற உடல் மொழிகள் ,  பணிவும் கொஞ்சம் தன்னம்பிக்கைக் குறைபாடும் கொண்ட பாவனைகள் , சின்னச் சின்ன உணர்வு வெளிப்பாடுகள்  அதற்கு நிதானமாக எடுத்துக் கொள்ளும் நேரம் என்று பண்பட்ட நடிப்பு. (விதார்த்  நன்றாக நடிப்பது புதிய விஷயம் இல்லை. நன்றாக நடிக்கவில்லை என்றால்தான் அது ஆச்சர்யம். என்றாலும்) இந்தப் படத்தில் இன்னும் பல படிகள் ஏறி இருக்கிறார் . வாழ்த்துகள்.  

இரண்டாவது பாராட்டு லக்ஷ்மி பிரியா சந்திர மவுலி . எளிய குடும்பத்து நடுத்தர வயது பேச்சு மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவியை திரைக்குள் இருந்து வெளியே வந்து எதிரில் நின்று, உட்கார்ந்து  காட்டுகிறார் . விதார்த்தும் இவரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் இதயம் எழுதும் கவிதைகள் .

இப்படி நடிப்பதற்கு எதுவும் சவால் இல்லை என்றாலும் தன் மீது ஆதரவோ இல்லை அதீத வெறுப்போ வராமல் (இந்தத் திரைக்கதைப் படி) நடிக்க வேண்டிய கதாபாத்திரம் கருணாகரனுக்கு . அதுவே ஒரு சவால்தான். அந்த சவாலில் அழகாக வெல்கிறார் கருணாகரன். 

மற்ற கதாபாத்திரங்களில் வருபவர்களும் கவனம் கவர்கிறார்கள். 

ஒவ்வொரு மவுனத்துக்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு என்ற ஆரம்ப வார்த்தைகளின் மூலமே கவனிக்க வைக்கிறார் இயக்குனர்.  அக்கா கணவன், மாப்பிள்ளை காட்சிகள் அருமை ( இந்தப் பாராட்டுகள் விக்ருதி இயக்குனர், இந்தப் பட இயக்குனர் இருவரில் யாருக்கு உரியதோ அவருக்குப் போய்ச் சேரட்டும். எனினும் ) படமாக்கலில் கவர்கிறார் சக்திவேல் . ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் அநியாயமாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்காகக் கொடுத்திருக்கும் பூடகக் குரலுக்கு பாராட்டுகள். நன்றிகள் .

பாண்டிக் குமாரின் ஒளிப்பதிவு ரம்மியம். சமந்த நாக்கின் இசை காட்சியின் உணர்வுகளை உள்வாங்க உதவுகிறது. 

ஒரு மாற்று மொழிப் படத்தை மறு உருவாக்கம் செய்யும்போது அப்படியே தருவதோ, அல்லது நமது மண்ணின் தன்மைக்கு மாற்றுவதோ மட்டும் போதாது . அதையும் மீறி யோசிக்க வேண்டும். திரைக்கதையையே பல படிகள் உயர்த்த வேண்டும் . அது இந்தப் படத்தில் இல்லை என்பதுதான் ஒரு குறை. 

“ஆண்டனியும் நல்லவன்தான் . ஆனா … ” என்ற தொனியில் அமைந்த திரைக்கதை சொல்ல வந்த விசயத்தை நீர்த்துப் போகச் செய்து உப்பு சப்பில்லாமல் ஆக்கி விட்டது.  சும்மா இறங்கி அடித்திருக்க வேண்டும் அப்போதுதான் ,  நம் இஷ்டத்துக்கு அடுத்தவரைப் பற்றி முக்கியமாக எளிய மனிதர்களைப் பற்றி  முக நூலில் பதிவது எப்படிப் பட்ட தவறு என்பது பெரிதாக உரைத்திருக்கும். இப்போது அது பின்னால் போய் எழிலன் எவ்வளவு நல்லவன் என்ற ரீதியில் படம் முடிகிறது. முனை மழுங்கல் !

அதே போல .. என்னதான் எழிலன் களைப்பாக இருந்தாலும் அவனுக்கு ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் கூட,  பலருக்கும் பொதுவான மெட்ரோ ரயிலில்  பல இருக்கைகளை ஆக்கிரமித்தபடி படுத்து தூங்குவது குற்றம்தான்.  அதைப் பற்றி படத்தில் ஓரிடத்தில் கூட பேசவில்லை. கடைசி காட்சியில் அது பற்றி எழிலனாவது சொல்வான் என்றால் அவனும் சொல்லவில்லை. 

எழிலன் மின்சார ரயிலில் உட்கார்ந்து தூங்கி இருந்தால் கூட அதில் கிண்டல் செய்ய வழி உண்டே ஒழிய குறை சொல்ல வாய்ப்பில்லை. எனவே ஆண்டனி  போன்ற ஒருவன் அதைப் படம்  எடுத்து முக நூலில் ஏற்றி இருக்க மாட்டான் அல்லவா?. இதை யோசித்து இருந்தால் ,  திரைக்கதையை எப்படி சரியாக கொண்டு போயிருக்க முடியும் என்பது புரிந்திருக்கும்   

உண்மையில் இந்த மெட்ரோ ரயில்  தூக்கம் விசயத்தையே எடுத்து விட்டு இதை விட சரியான  பொருத்தமான ஒரு விசயத்தை சொல்லி இருக்கலாம் . இன்னும் வீரியமாக படம் அமைந்திருக்கும். 

மலையாளப் படத்துக்கு மேல்  எதுவும் இல்லை என்று யோசிக்கத் தேவை இல்லை. 

எனினும் படம் சொல்லும் விஷயம் அவசியமானது . 

விதார்த் , லக்ஷ்மி பிரியா,  கருணாகரன் மூவரும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *