வேந்தர் மூவீஸ் எஸ் மதன் வழங்க, விஷால் – காஜல் அகர்வால் இணை நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும்புலி .
உறுமல் எப்படி? பார்க்கலாம் .
மதுரையில் உள்ள தொழில் அதிபர்களுக்கு எல்லாம் போன் செய்யும் ஒரு ரவுடி கும்பல், ரெண்டு கோடி ரூபாய் பணம் கேட்கிறது. கொடுத்தால் அதன் பிறகு எந்த பிரச்னையும் இல்லை . கொடுக்காவிட்டால் குத்திக் கொன்று சாலைப் பாலங்களுக்குக் கீழ் ஓலைப்பாயில் கட்டிக் கடாசி விட்டுப் போகிறது .
அந்த ஊருக்கு அசிஸ்டன்ட் கமிஷனராக இன்னும் பதினைந்து நாளில் பதவி ஏற்கப்போகும் ஜெயசீலன் (விஷால்), தன் நண்பனும் கான்ஸ்டபிளுமான முருகேசனின் ( சூரி) உதவியுடன் ரவுடிகளை சந்தித்து , தான் பதவி ஏற்றால் தனக்கு வரவேண்டிய மாமூல் அலையஸ் பத்து பர்சன்ட் கமிஷன் பற்றி டீல் பேசுகிறார் .
இதற்கிடையில் அவருக்கு சவும்யா (காஜல் அகர்வால்) என்ற பெண் மீது காதல் வருகிறது .
ஜெயசீலனின் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருந்து சுதந்திர இந்தியாவில் நேர்மையான அமைச்சராக பதவி வகித்தவர். பின்னாளில் அரசியல் போகிற அலங்கோல வழி பார்த்து தன் மகனிடம் (வேல ராமமூர்த்தி) ‘அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார் . அப்பாவின் கட்டளைப்படி மகனும் அரசியலில் ஈடு படாமல் இருக்கிறார் .
ஆனால் அவரது சாதியைச் சேர்ந்த அரசியல் ஆர்வம் உள்ள சின்னராசு (ஆர்.கே) என்பவன் , அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் அவரை விட்டுவிட்டு, அவரது மூத்த மகன் செல்வத்துக்கு (சமுத்திக்கனி ) அரசியல் பதவி ஆசை காட்டுகிறான்.
ஒரு நிலையில் செல்வத்தின் தாத்தாவான சுதந்திரப் போராட்ட தியாகியின் பெயரை செல்வத்தின் மூலம் பயன்படுத்தி வென்று அமைச்சர் ஆகும் சின்னராசு , சொன்னபடி கவுன்சிலர் பதவி தராமல் செல்வத்தை ஏமாற்றுகிறான்..
அடுத்த தேர்தலில் தாத்தாவின் பெயரைச் சொல்லி செல்வம் தனியாக களம் இறங்க , பண பலத்தால் செல்வத்தை வீழ்த்துகிறான் சின்னராசு . அரசியலில் பணத்தின் அவசியம் செல்வத்துக்குப் புரிகிறது.
செல்வத்தின் தம்பிதான் ஜெயசீலன் (விஷால்)
ஆரம்பத்தில் ரவுடிகளிடம் மாமூல் டீல் பேசுவது போல ஜெயசீலன் நடந்து கொண்டாலும், அவன் அப்படி அவர்களை சந்திப்பதே என்கவுண்டரில் போட்டுத்தள்ளத்தான் என்பது உணர்த்தப்படுகிறது .
மதுரையைக் கலக்கும் ஒட்டுமொத்த ரவுடிகளையும் கருவறுக்க ஜெயல்சீலன் களம் இறங்குகிறான் . இடையில் சவும்யாவின் தந்தையும் (ஜெயப்பிரகாஷ்) பண டீல் விவகாரத்தால் ரவுடி கும்பலால் கொல்லப்பட, கமிஷனர் புலி பாயும் புலியாகிறது .
கடைசியில் மொத்த பிரச்னையும் ஒற்றை வீட்டுக்குள் வந்து நிற்க , அடுத்தது என்ன என்பதே பாயும்புலி .
எடுத்த எடுப்பிலேயே வானத்தில் இருந்து கேமரா இறங்கு வருகிறதோ என்று மலைக்க வைக்கும் அளவுக்கு, ஹெலி ஷாட்டில் இருந்து சாலை , சாலைப் பாலம் என்று கேமரா இறங்கி வரும் காட்சியிலேயே கவனம் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் . ( அப்படியே அந்த ஷாட்டை பாலத்துக்குள் போய் டெட் பாடியின் குளோசப் வரை போயிருந்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் வேல்ராஜ் . ஒய் மிஸ்ஸிங்?)
அந்த காட்சி முதல் படம் முழுக்க வேல்ராஜின் ஆதிக்கம் இருக்கிறது . குறிப்பாக கார் சேசிங் காட்சிகளில் ‘வேலி’ன் கூர்மை .
நிச்சயமாக விஷால் ஒன்றும் மாமூல் வாங்கும் போலீசாக நடிக்க மாட்டார்தான் என்றாலும் ஆரம்ப டீலிங் காட்டி அப்புறம் துப்பாக்கி எடுப்பதில் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருப்பதை மறுப்பதற்கில்லை . ஆசம்!
விஷால் வழக்கம் போல நடிக்கிறார். நன்றாக அடிக்கிறார் . கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . காஜல் சிலுசிலுப்புக்கு மட்டும் . அவரும் நன்றாக தூறி விட்டுப் போகிறார் .
அடுத்த உயரத்துக்கு ஏறுகிறார் சமுத்திரக்கனி . பழத்தோட்டம் படு வாசம் .
பொதுவாக நமது தமிழ்ப் படங்களில் அறிமுகக் காட்சியில் மட்டும் கதாநாயகிக்கு ஒரு குணாதிசயம் காட்டுவார்கள் . அப்புறம் அம்போ என்று விட்டு விடுவார்கள் . இந்தப் படத்திலும் அதே விபத்து .
ஆரம்பக் காட்சியில் ரோடு கிராஸ் பண்ண பயப்படும் சவும்யாவின் குணாதிசயத்தை அப்புறமும் எங்காவது காட்ட வேண்டாமா ? ஆனாலும் காஜலின் அந்த அறிமுகக் காட்சியும் நடுரோட்டில் நிகழும் அந்த வெள்ளை முயல் குட்டி பாடலும் அழகு .
சூரியின் ‘ஃபிளாஷ் கட்’ காமெடிகள் சிரிப்பை வரவழைகின்றன, குறிப்பாக அந்த ஹெல்மெட் காமெடி . இன்னும் கொஞ்சம் அப்படி பல காட்சிகளுக்கு முயன்று இருக்கலாம்.
இமானின் இசையில் ‘சிலுக்கு மரமே’ பாட்டு சும்மா சிலுப்பிக் கொண்டு குதிக்கிறது. வழுக்கிக் கொண்டு பறக்கிறது . இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் சாங் அதுவே .
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் அந்த விவரணையான குடும்ப அறிமுகம் , அது தொடர்பான சில காட்சிகள் கதையின் போக்கை சொல்லி விட்டாலும், வெகு ஜன ரசிகனுக்கு வில்லன் யார் என்பது ஒரு திடீர் திருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கடைசி காட்சியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள் . எனினும் அதே சூழலுக்குள் இன்னும் ஏதாவது வித்தியாசமாக முயன்று இருக்கலாம் .