பாண்டிய நாடு படத்தை அடுத்து மீண்டும் விஷாலும் சுசீந்திரனும் இணைய , காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க, வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்து இருக்கும் படம் பாயும்புலி .
டி.இமானின் இசையில் வைரமுத்து வரிகளில் ஐந்து பாடல்களை கொண்ட இந்தப் படத்தில் உள்ள , ”சிலுக்கு மரமே சில்லுன்னு பூக்கவா” என்ற ஒற்றைப் பாடல் வெளியீட்டு விழா நடந்தது . ஒளிப்பதிவு செய்து இருப்பவர் இயக்குனராகவும் ஜெயித்து இருக்கும் வேலுராஜ்.
நிகழ்ச்சியில் படம் சம்மந்தப்பட்ட மதன் , டி.சிவா, சுசீந்திரன் , சூரி , இமான், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் , எடிட்டர் ஆண்டனி, கலை இயக்குனர் ராஜீவன் , பாடல்களை வெளியிடும் ஆடியோ நிறுவனமான வி மியூசிக் அலுவலர் ஐஸ்வர்யா ஆகியோரும் விஷாலை வைத்து அடுத்து படங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் லிங்குசாமி, பாண்டிராஜ் , திரு ஆகியோரும் வந்திருந்தனர் .
‘பாயும்புலி ஒரு போலீஸ் கதை . அண்டர் கவர் ஆப்பரேஷன் திரைக்கதை . இரண்டாம் பகுதியில் நல்ல செண்டிமெண்ட் காட்சிகளும் உண்டு . கிளைமாக்ஸ் படத்தின் பெரிய பலம் . கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிக நல்ல பெயர் பெறுவார்’ போன்ற தகவல்கள் பலரின் பேச்சிலும் இருந்து கிடைத்தன .
வெளியிடப்பட்ட சிலுக்கு மரமே பாடல் கேட்ட உடன் முணுமுணுக்க வைத்தது. வழக்கம் போல சில வித்தியாச ஒலிகளை பயன்படுத்தி கவனம் கவர்ந்து இருந்தார் இமான் .
“என்றாலும் இந்தப் படத்தில் இடம்பெறும் இன்னொரு பாட்டான ‘சின்ன முயல்குட்டி’ பாடல் ரொம்ப நன்றாக இருக்கும் ” என்று ஐஸ்வர்யா சொல்ல “என்னுடைய ஃபேவரைட் பாடல் சின்ன முயல்குட்டிதான்” என்று விஷாலும் சொன்னார் .
“பி.வாசு, கே எஸ் ரவிகுமார் இருவருக்கும் பிறகு தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை சுசீந்திரன் எடுத்து வருகிறார் . தயாரிப்பாளர் எஸ். மதன் பூஜைக்கு வந்ததோடு சரி. எந்த குறையும் இல்லாமல் எல்லா வசதிகளையும் செய்தார் . அதன் பிறகு இன்று படம் பார்த்து மிக சந்தோசம் ஆகி விட்டார் . விஷால் மிக அற்புதமான நடிகர் ” என்றார் டி.சிவா
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசும்போது ” 130 நாள் ஷூட்டிங் என்று சொல்லி என்னை ஒப்பந்தம் செய்து 72 நாளில் படத்தை முடித்து ஏமாற்றி விட்டார் சுசீந்திரன் . இந்த சிலுக்கு மரமே பாடலுக்கு கம்போடியா போய் படம் எடுக்கலாம் என்றார்கள் . பாஸ்போர்ட் எல்லாம் ரெடி பண்ணி நானும் காத்து இருந்தேன் .
அப்புறம் இந்தியா முழுக்க ஐயாயிரம் கிலோ மீட்டர் லொக்கேஷன் பார்க்கணும் என்ற பெயரில் அலைய வைத்தார்கள் . சுசீந்திரன் அங்கு வரவில்லை. கடைசியில் மரக்காணம் பகுதியில் செட் போட்டு எடுத்தார்கள்” என்று கலகலப்பாக பேசினார்
“படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது ” என்றார் மதன் . “நானும் படம் பார்த்தேன் . பாண்டியநாட்டை விட சிறப்பாக வந்திருக்கிறது” என்றார் இயக்குனர் திரு .
“விஷாலும் நானும் நடித்த சண்டைக்கோழி பெரும் வெற்றி பெற்றது . இரண்டாம் பாகம் செப்டம்பர் முதல் ஷூட்டிங் போகிறோம் ” என்றார் லிங்குசாமி .
“எப்படி லிங்குசாமியும் சுசீந்திரனும் விஷாலை வைத்து அடுத்தடுத்து படம் பண்றாங்க என்று முன்பெல்லாம் யோசித்தேன் “என்று ஆரம்பித்த இயக்குனர் பாண்டிராஜ் “நான் இயக்க விஷால் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பத்து நாள்தான் போயிருக்கிறது. இப்போது சொல்கிறேன் . விஷால் நடிக்க அடுத்தடுத்து தொடர்ந்து பத்து படங்கள் கூட இயக்கலாம . அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தரும் நடிகர் அவர் ” என்றார் பாண்டிராஜ்.
“கூடிய சீக்கிரம் நானும் திருவும் ஒரு நல்ல சேதி சொல்லப் போறோம் ” என்ற விஷால், சட்டென்று சுதாரித்து “நல்ல சேதின்னதும் கல்யாணம்னு நினைச்சுடாதீங்க. படம் பண்றதுதான் . நாங்க இன்னும் பேச்சிலர்தான்தான் ” என்றார் .
இதைக் கேட்டு நாங்க எல்லாம் பேச்சிலர் .. அதாவது பேச்சு இலர் !