ஸ்ரீ சாய் சர்வேஷ்எண்டர்டெயின்மென்ட் சார்பில் ராகவன் தயாரிக்க, அறிமுக நாயகன் ஜீவரத்தினம் – ஈஷான்யா ஜோடியாக நடிக்க,
இயக்குனர் சரண் இயக்கத்தில் வந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே ஜே ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி, ஓடிப் போலாமா உட்பட ஓரிரண்டு படங்களை தமிழிலும் நா உப்பிரி, கால் செண்டர் சீனோடு, சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற பீருவா ஆகிய படங்களைத் தெலுங்கிலும் இயக்கிய கண்மணி ….
மீண்டும் தமிழில் இயக்கும் படம் ‘பேய்கள் ஜாக்கிரதை.’
”ஏராளமான பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் என்ன ஸ்பெஷல்?’ என்று இயக்குனரிடம் கேட்டபோது ” கதை சொல்லப் போன போது தயாரிப்பாளர் ராகவனும் இப்படிதான் கேட்டார் . நான் கதை சொல்லி முடித்த உடன் ‘இந்தப் படத்தைதான் கண்டிப்பாக பண்ணனும்’னு சொன்னார் ” என்கிறார் இயக்குனர் கண்மணி . (ஹீரோ ஜீவரத்தினம் தயாரிப்பாளர் ராகவனின் தம்பி என்பது இந்த இடத்தில் குறிப்பிடத் தக்கது. )
அப்படி என்ன கதை ?
“தன்னை ஒரு பேய் முப்பது வருடமாக கொலை செய்ய முயல்வதாகவும் அந்தப் பேயிடம் இருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் தனக்கு ஆபத்து வரலாம் என்றும் நம்பும் கேரக்டரில் தம்பி ராமய்யா. பேயே இல்லை என்ற கருத்து உடைய இளைஞன்தான் ஹீரோ. இரண்டு பேரும் சந்தித்து கருத்து மோதல் நடத்திக் கொள்ளும் சூழ் நிலையில் ஒரு சம்பவம் நடக்கிறது .
அந்த சம்பவம் காரணமாக பேய் என்று எதுவும் இல்லை என்ற முடிவுக்கு தம்பி ராமையாவும் பேய் நிஜமாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு ஹீரோவும் வருகிறார்கள் . இதில் நான் கடவுள் ராஜேந்திரனின் அட்ராசிட்டி வேறு. அப்புறம் என்ன நடக்கிறது என்பதை காமெடி நிரம்பிய, பொழுது போக்குப் படமாக சொல்லி இருக்கிறோம் ” என்கிறார் இயக்குனர் .
கல்லூரிப் பெண்ணாக ஹீரோயின் ஈஷான்யா நடிக்கிறார் .
இதுவரை பல குறும்படங்களுக்கு இசை அமைத்த மரிய ஜெரால்டு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தில் வரும் மூன்று பாடல்களில் ஒரு பாடலை தம்பி ராமைய்யாவும் மொட்டை ராஜேந்திரனும் பாடி இருக்கிறார்கள்
ஒபாமாவை ஒதுங்கச் சொல்லு
அப்பாயின்ட்மென்ட் இல்ல
அப்பாலிக்கா வரச் சொல்லு .
பில்கேட்சை பின்னால நிக்கச் சொல்லு .
பிசியா இருக்கோம்
அப்பாலிக்கா பாக்கச் சொல்லு “
– என்று விவேகா எழுதி இருக்கும் பாடலில்தான் இந்த அதகளம் .
“பாடணும் என்று சொல்லும்போது பயந்து கொண்டே தான் வந்தார் ராஜேந்திரன் . ஆனால் அவர் குரலுக்கும் கேரக்டருக்கும் பொருத்தமான பாடல் அது . ரொம்ப நல்லா வந்திருக்கு ” என்கிறார் இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு .
“கதை நல்லா இருந்தது. படம் நல்லா வந்திருக்கு . தம்பி ராமையாவும் ராஜேந்திரனும் பாடி இருக்கும் அந்தப் பாட்டு படத்துக்கு பெரிய பலமா இருக்கு ” என்கிறார் தயாரிப்பாளர் ராகவன் .
பேய்களே…ஜாக்கிரதை !