
ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜி.ராகவன் தயாரிக்க, ஜீவரத்னம் , ஈஷான்யா, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கண்மணி இயக்கி இருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை .
மிகப் பெரிய தாதா (தம்பி ராமையா) ஒருவருக்கு பேய் என்றால் மட்டும் ரொம்ப பயம் . இதனால் அவரது மனைவியும் குழந்தையுமே அவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறார்கள் .
மற்ற அடிதடி விசயங்களுக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் பேய் பயத்தில் இருந்து தன்னை மீட்க ஒரு நபரை தாதா தேடுகிறார். பலமுறை தற்கொலைக்கு முயன்றவனும் உயிர் பயம் இல்லாதவனுமான இளைஞன் (ஜீவரத்னம்) அவரைப் பார்த்துக்கொள்ள வருகிறான் .
தாதாவால் பாதிக்கப்படும் ஒருவரின் (மனோபாலா) மகளுக்கு (ஈஷான்யா) உதவி செய்த வகையில் அவளது காதலையும் பெறுகிறான் .
ரொம்ப முயன்று தாதாவின் பேய் பயத்தை அவன் நீக்குகிறான் . தாதாவின் மனைவியும் மகனும் வீடு வருகின்றனர்.
அதே நேரம் காதலியின் தந்தை கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளாததால், நாயகன் தற்கொலைக்கு முயல, அவனை சில பேய்கள் காப்பாற்றுகின்றன . அதோடு அவனுக்குள் புகுந்தும் கொள்கின்றன . (அதற்கான காரணம் நாம் முன்பே மற்ற படங்களின் மூலம் அறிந்த ஒன்றுதான் ).
அடுத்து நடக்கும் குளறுபடிகளால் தாதாவின் மனைவி மீண்டும் பிரிகிறார் .
தந்தையை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்த காதலியும் மனம் உடைகிறாள் .
அந்தப் பேய்கள் யார் ? என்ன? எதற்கு இவன் உடம்பில் புகுந்தன ? என்பதே இந்த பேய்கள் ஜாக்கிரதை .
படத்தின் ஆரம்பக் காட்சிகளை தனது காமெடியால் சற்றே கலகலப்பாக்கி இருக்கிறார் தம்பி ராமையா . பெரும்பகுதி படத்தை ஒற்றை ஆளாக இழுக்கிறார் . வசனங்கள் அதற்கு உதவுகின்றன.
நாலு பேய்களும் உடம்புக்குள் புகுந்த நிலையில் நான்கு பேர் போல நடிக்க முயலும் முயற்சியில் ஜீவரத்னம் கவனிக்க வைக்கிறார் . ஈஷன்யா ஒகே யா!
சவுண்ட் எபெக்ட் காரணமாக பேய்கள் மிரட்டவும் செய்கின்றன
ஆனாலும் சில பல காட்சிகள் வறட்சியாகவும் நாடகத்தனமாகவுமே கடக்கின்றன.
”செத்தவங்கள நாம மறந்துடறோம் . ஆனா செத்தவங்க நம்மளை மறப்பதே இல்லை” என்ற வசனமும் அந்த சிந்தனையும் மனம் கனக்க வைக்கிறது .சூப்பர்
சந்தேகப்படும் கணவன் ஒருவன் தன் மனைவியிடம் “எவனையாவது வச்சிருக்கியா டி ?” என்ற கேட்க, ”ஆமாம்” என்று அந்த மனைவி சொல்ல , அதற்கான அர்த்தம் புரிய வரும்போது நெகிழ்வில் சிலிர்த்துப் போகிறோம். படத்தின் கிளாஸ் ஏரியா இது . சபாஷ் கண்மணி !
பேய்கள் யார் என்பதை உணரும் நாயகன் அவர்களை சந்திக்கும் இடமும் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளது .
பிரச்னைக்குக் காரணமான பேய்கள் கடைசிவரை செட் புராபர்ட்ட்டி போல நிற்காமல் பொறுப்பு எடுத்து எதையாவது செய்து பிரச்னையை தீர்க்க வித்தியாசமாக முயன்று இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும் .
பேய்கள் ஜாக்கிரதை … இருந்திருக்க வேண்டும் இன்னும் ஜாக்கிரதை .