கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்க,
‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடிக்க,
நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ள படம் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.
ஐ எஸ் ஒ என்றால் அகில உலக தர அமைப்பு ( internatinal standardization organization ) என்று பொருள் .
படம் எப்படி இருக்கு ? பேசலாம் .
முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவ ர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
தான் இளமையாக நவீனமாக நடந்துகொள்வதை மகன் (லிவிங்ஸ்டன்) விரும்பாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் ஒரு பாட்டி ( சச்சு) அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது தனது பேத்தி போல ( ஷில்பா மஞ்சுநாத்) மாறிவிடுகிறார்.
பேத்தியை காதலிக்கும் இளைஞன் (விவேக்) பேத்தி போல மாறி விட்ட பாட்டியிடம் சிக்கி குழம்புகிறான் .
ஒரு நிலையில் பேத்தி போல மாறிய பாட்டியின் உடல் பழைய நிலைக்கு மாற ஆரம்பிக்கிறது . இளம் பெண்ணாக நிறைய விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் பாட்டி அதிர்ச்சி ஆகிறார் .
அதே நேரம் கார்ப்பரேட் நிறுவன அதிகாரி ( சரவணன் சுப்பையா ) ஊரில் உள்ள ஆதரவற்ற பாட்டிகளை எல்லாம் இளம்பெண்ணாக மாற்றி வெளிநாட்டுக்கு அனுப்ப முயல , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
சின்ன பட்ஜெட்டில் ஒரு விஞ்ஞானக் கதைப் படம் .
ஷில்பாவுக்கு இரட்டை வேடம் . முயற்சி செய்து இருக்கிறார் . ஆனால் இன்னும் வித்தியாசம் காட்டி இருக்கலாம் . விவேக் சொன்னதை செய்து இருக்கிறார் .
நவ்ஷத்தின் ஒளிப்பதிவும் சார்லஸ் தனா இசையும் ஒகே
பாட்டி சிறுவயதில் அச்சு அசல் பேத்தி மாதிரியாகவா இருந்திருப்பார் ? அவர்கள் என்ன இரட்டையரா ? ஒரே நடிகை நடிப்பது ஓகே. ஆனால் தோற்றத்தில் நடை உடை பாவனையில் இன்னும் கொஞ்சம் தனித்தன்மை கொடுத்து இருக்கலாம் .
அடிப்படைக் கதை பாராட்டுக்குரியது . இன்னும் நல்ல திரைக்கதை , நல்ல படமாக்கல் இருந்திருக்கலாம்