இப்போதே பணக்காரனான ‘பிச்சைக்காரன்’

 

pichai 4

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க , சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க,  இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் பிச்சைக்காரன் . 

வரலாற்றுத் தன்மையுடன் கூடிய அகன்ற திரை வடிவ எழுத்துருவில் பிச்சைக்காரன் என்று எழுதி,  அதற்கு மேல் ஒரு மகுடம் சூட்டிய டைட்டில் சொல்கிறது …. எல்லாம் இருக்கும் ராஜ வாழ்க்கை வாழும் போதும் விரும்பி பிச்சைக்காரன் ஆகும் ஒருவனின் கதை இது என்று . 
இந்த ஒற்றை வரியை எழுதும்போது ஞாபகம் வருவது கௌதம சித்தார்த்தன் என்கிற புத்தரின் வாழ்க்கைதான். (சொல்ல முடியாது சம்சாரா திபெத்திய படத்தில் புத்தரின் இன்னொரு வடிவத்தைக்  காட்டிய மாதிரி இந்தப் படத்திலும் ஏதாவது அற்புதமான் பிரதிபலிப்பு இருக்கலாம் . விஜய் ஆண்டனி , சசி ரெண்டு பேரும் என்ன, லேசுப்பட்ட ஆளுகளா?)
ரிலீஸ் ஆகிற பல தமிழ் சினிமாக்கள் குறி வைப்பது வெள்ளி சனி ஞாயிறுவைதான். ஆனால் விஜய் ஆண்டனிக்கான ஒப்பனிங்கே புதன்கிழமை வரை போகும் .  அதோடு சசியும் சேரும்போது … இந்தப் படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட ஒன்று என்று நமக்கே புரியும்போது விநியோகஸ்தர்களுக்கு புரியாதா ?
கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர் . கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார் . 
pichai 5
இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அரிதான இப்படி ஒரு நிகழ்வுக்கு பிறகுதான் பாடல் முன்னோட்ட வெளியீட்டையே ஏற்பாடு செய்தது , பாத்திமா (மற்றும்) விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனம் . 
பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை இயக்குனர் முருகதாஸ் வெளியிட திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் பெற்றுக் கொண்டார்கள். ஆக்கப் பூர்வமான பழைய பாணியில்,  நிறைய விநியோகஸ்தர்களும் மேடையை அலங்கரித்து இருந்தார்கள் . 
படத்தின் முன்னோட்டம் கமர்ஷியலாக இருக்கும் அதே நேரம் அழகியல் கவிதையாக , பொருள் பொதிந்து இருந்தது . ”பால் போடறவன் பால்காரன் . பேப்பர் போடறவன் பேப்பர்காரன். அப்போ பிச்சை போடறவன்தானே பிச்சைக்காரன் .அப்போ நம்மளை ஏன் பிச்சைக்காரன்னு சொல்றாங்க ?” என்ற கேள்வியில் ஏகடியம் எகிறுகிறது 
விஜய் ஆண்டனியின் உருவத் தோற்றம் மெருகேறி இருக்கிறது. நடிப்பும் என்பது,  மருத்துவமனையில் மனம் வலிக்க நொறுங்கிச் சரியும் ஷாட்டில் தெரிகிறது . அறிமுக ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருந்தது . 
டூயட் பாடும் போதும் பிச்சை எடுக்கிற கான்சப்ட் அபாரம் . 
பாடல்கள் மிகுந்த ஈர்ப்புடன் இருக்கின்றன. நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஜீவா சங்கர்
pichai 2
” இதுவரை விஜய் ஆண்டனியின் இசையில் கமர்ஷியல் தன்மை அதிகமாக இருக்கும் . ஆனால் இந்தப் படத்தில் கமர்ஷியல் தன்மை , பாடலுக்கான இனிமை இவற்றோடு ஒரு ஆத்மார்த்த உணர்வும் வருகிறது ” என்று குருப்பிட்டது உண்மை .
குறிப்பாக நெஞ்சோரத்தில்… பாட்டு நெஞ்சின் மையத்தில் உட்காருகிறது .ஆனால் பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 
கே ஆர் பிலிம்ஸ் சரவணன் பேசும்போது ” இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம் . எல்லோரும் ‘என்னடா இது…. முதன் முதலா பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கற?’ன்னு கேட்டா ங்க . ஆனா வியாபாரம் ரொம்ப சிறப்பா நடந்து இருக்கு . இந்தப் படம் பலரையும் பணக்காரனா ஆக்கும் ” என்றார் 
லைக்கா நிறுவனத்தின் சார்பில் பேசியவர் ” இந்தப் படத்தை வாங்க எண்ணி , விஜய் ஆண்டனியிடம் ஒரு முறை பேசினேன் . வாங்க முடிவு செய்து விட்டு அவரை பார்க்கப் போனால் , ”சார் படம் பிசினஸ் ஆயிடுச்சி ” என்றார் . ‘அடடா ! வட போச்சே’ என்று வருத்தப்பட்டேன். இல்லை என்றால் கத்தி படத்தை அடுத்து லைக்கா நிறுவனத்தின் வெற்றிப் படமாக இது வந்திருக்கும்” என்றார் 
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பாளர் டி.சிவா ” விஜய் ஆண்டனியின் தன்னம்பிக்கையும் அவர் தன் மனைவி பாத்திமா மீது வைத்த பெண்  நம்பிக்கையும் அவரது வெற்றிக்குக் காரணம் .
pichai 6
பாத்திமா மிகச் சிறந்த தயாரிப்பாளர் . சொன்ன சம்பளத்தை சரியாக கொடுக்கும் பழக்கம் உள்ள நிறுவனம் இது  , அவர்கள் மீது இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில்  சிறு புகாரும் கிடையாது . விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகச் சிறந்த பே மாஸ்டர்ஸ் ” என்றார் . 
இயக்குனர் ஸ்டான்லி பேசும்போது ” படத்துக்கு சசி பிச்சைக்காரன் என்று பெயர்  வைத்தபோது எல்லோரும் என்னிடம் ‘ நீங்க சசியின் நெருங்கிய நண்பர்தானே . முதல்ல பேரை மாத்தச் சொல்லுங்க’ என்றார்கள் . ஆனால் சசி தயங்காமல் இதே பெயரில் தொடர்ந்தார்.” என்றார் .
முருகதாஸ் தன் பேச்சில் ” ஸ்டான்லிகிட்ட அப்படி பேரை மாத்தச் சொன்னது  நான்தான்.  ஏன்னா சசி கண்டிப்பா ஜெயிக்கணும் என்பது என் ஆசை . சசியின் முதல் படமான சொல்லாமலே வந்த போது சசியின் பெயரை உச்சரிக்காத நாக்குகளே இல்லை .
 எனக்கு முதல்ல படம் இயக்கும் வாய்ப்பு வந்தபோது என்னிடம் சசி ‘ படம் டைரக்ட் பண்ணப் போறீங்க. வேற வேலை பார்க்க முடியாது . பணம் எப்போ வரும்னு தெரியாது . அதனால் பணம் வேணும்னா என் கிட்ட தயங்காம கேளுங்க . யோசிக்காதீங்க ‘ என்றார் .
அந்த நொடி நான் பிச்சைக்காரனாகத்தான் இருந்தேன். ஆனால் சசியின் மனசு (இந்த பட விளம்பரத்தில் பிச்சைக்காரன் என்ற பேருக்கு மேல் உள்ள ) அந்த கிரீடம் போல இருந்தது . அப்படிப்பட்ட அவர் ஜெயிக்கணும் . 
pichai 3
ஒருவேளை இந்தப் பெயர் அதற்கு கொஞ்சம் கூட இடையூறா இருக்கக் கூடாதுன்னுதான் பேரை மாத்தச் சொன்னேன் . அடுத்து ஒரு நிகழ்ச்சியில் என்னை சந்தித்த சசி பெயரை மாத்திடறேன்னு சொன்னார் . ஆனா  இப்போ அதே பெயரோடு படத்தை பிரம்மாதமாக கொண்டு  வந்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார் . 
இயக்குனர் சசி ” படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு யாரை வரவழைக்கலாம் என்று விவாதித்த போது , கே ஆர் பிலிம்ஸ் சரவணன் என்னிடம் ‘முருகதாஸ் வந்தால் நன்றாக இருக்கும் சார்’ என்று கேட்டார் . சட்டென்று போனில் தொடர்பு கொண்டேன் .பேசினேன் . வர சம்மதித்தார் . சரவணன் கேட்டதை உடனே கொடுத்த மகிழ்வில் போனை ஸ்டைலாக தூக்கிப்போட்டேன் . என்னை அந்த அந்த இடத்தில் வைத்து இருக்கும் முருகதாசுக்கு நன்றி .
நான் விஜய் ஆண்டனியின் படங்களை பற்றி அவரிடம் பேசும்போது அவரது திறமைகளை பாராட்டும்போது எல்லாம் அதைப் பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ”நாம எப்போ சார் சேர்ந்து படம் பண்ணப் போறோம்?” என்றுதான் கேட்பார்.
நான் வேறு எந்தக் கதை சொல்லி அதை அவர் ஒகே பண்ணி இருந்தாலும் அவருக்கு நான் நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் . காரணம் அவர் ஒரு தயாரிப்பாளர் . நான் ஒரு இயக்குனர் . ரெண்டு பெரும் அவங்க வேலையை ஒழுங்கா பாக்கப் போறோம் . அவ்வளவுதான் . 
pichai 1
ஆனா இந்தப் பிச்சைக்காரன் கதையை ஒகே செய்ததற்காக நான் விஜய் ஆண்டனிக்கு நன்றி சொல்லணும் . இது வேறு எந்த ஹீரோவும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் . ஆனால் இதில் உள்ள கமர்ஷியல் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு அதை ஒகே செய்யும் தெளிவு விஜய் ஆண்டனிக்கு இருந்தது . அதற்காக நன்றி .
படத்தின் பெயர் குறித்த எல்லோரின் கருத்துகளும் என் நன்மைக்காகவே சொல்லப்பட்டன . ஆனால் இப்போ படத்தைப் பார்த்த பிறகு சொல்கிறேன் . இந்தப் படத்துக்கு பிச்சைகாரன் என்ற பெயரை விட பொருத்தமான பெயரே இல்லை ” என்றார் . 
நிறைவாக — மனம் நிறைவாக — பேசிய விஜய் ஆண்டனி “எல்லோருக்கும் நன்றி . இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அண்ணாமலை சொன்ன மாதிரி உலகத்துல எல்லோருமே ஒரு விதத்தில் பிச்சைக்காரங்கதான் . அதுல மாற்றமே இல்ல .
என் தாய் தந்தை போட்ட பிச்சைதான் இந்த வாழ்க்கை . என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை , எனக்காக அவங்க உழைக்கிற உழைப்பு, அவங்களுக்கு துணையாவும் எனக்கும் உழைக்கற பாத்திமாவின் தங்கை சாண்ட்ரா அவங்க அம்மா, எனது எடிட்டர் உள்ளிட்ட நண்பர்கள்….
இப்படி பல பேர் எனக்காகவே உழைக்கறாங்க. ஒரு விஜய் ஆண்டனிதான் வெளிய தெரியும் . ஆனா பின்னால இவங்க எல்லாரும் இருக்காங்க. 
சினிமா எனக்கு நிறைய பிச்சை போட்டு இருக்கு .  ரசிகர்கள் , நண்பர்கள் , நலம் விரும்பிகள் இவங்க காட்டற அன்பும் எனக்கு கிடைச்சு இருக்கு . என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான்,  டிஷ்யூம் படத்துல ! 
இப்படி எல்லாரும் எனக்கு போட்ட பிச்சைதான் இந்த வாழ்க்கை . 
இந்த பிச்சைக்காரன் மாதிரி ஒரு படத்தை இனிமே என்னால பண்ண முடியாது . அவ்ளோ பிரம்மாதமா இந்தப் படம் வந்திருக்கு . அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்றார் . 
கோடீஸ்வர மனசு ! 
https://www.youtube.com/watch?v=m2gaBEJxoxY     ( பிச்சைக்காரன் முன்னோட்டம்)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →