இந்த பிச்சைக்காரன் தரத்தில் உச்சக்காரனா இல்லை மிச்ச சொச்சக்காரனா ? பார்க்கலாம் .
இளம் வயதிலேயே கணவனை இழந்த நிலையில், தனது ஒரே மகனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து , புவனேஸ்வரி காட்டன் மில்ஸ் என்ற மிகப் பெரிய தொழிற்சாலையையும் நடத்தி,
தொழிலாளர்களையும் அன்போடு கட்டிக் காக்கும் ஓர் அன்பான முதலாளியம்மா (தீபா வின் ) .
அயல்நாட்டில் இருந்து படிப்பு முடித்து விட்டு வந்திறங்கும் , ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி போன்ற தனது மகன் அருள் செல்வகுமார் (விஜய் ஆண்டனி) வசம் கம்பெனியின் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைகிறார் அவர்.
ஓய்வெடுக்கத் துவங்கும் நிலையில் , தொழிற்சாலையில் ஒரு சக்கரத்தில் சேலைத் தலைப்பு சிக்கி , இயந்திரத்தின் மீது விழுந்து தலையில் பலத்த அடி பட்டு கோமா நிலைக்கும் போகிறார் அம்மா !
இருக்கும் பணத்தை எல்லாம் கொட்டி ஆறு மாதம் அல்லோபதி மருத்தவம் அப்புறம் கேரளத்து இயற்கை மருத்துவம் எல்லாம் பார்த்தும் அம்மாவிடம் சிறு அசைவும் இல்லை .
தனக்காகவே முழு வாழ்வையும் அர்ப்பணித்த அம்மாவின் இந்த நிலை பார்த்து நொறுங்கிப் போகிறான் அருள் .
அம்மா பிறந்த கிராமத்தில் அம்மாவை இருக்க வைத்தால் பலன் இருக்கலாம் என்று கேரளத்து மருத்துவரே கூற, அதன்படி கிராமத்தில் வைத்தும் பலன் இல்லை .
இந்த நிலையில் அருளுக்கு வர இருந்த ஓர் ஆபத்தில் இருந்து , முன்கூட்டியே எச்சரித்து அவனைக் காப்பாற்றும் ஒரு சாமியார் , ” நீ யார் என்பதை யாருக்கும் சொல்லாமல் ,
உனது ஆள் பலம் , பண பலம் , செல்வம் , அந்தஸ்து , செல்வாக்கு , அடையாளம் எதையும் பயன்படுத்தாமல், ஒரு மண்டலம் — அதாவது 48 நாட்கள் , உன்னை யாரும் அறியாத பகுதியில் , பிச்சை எடுத்து சாப்பிட்டு ,
முழுக்க முழுக்க ஒரு பிச்சைகாரனாகவே வாழ்ந்து முடித்தால்…. உன் அம்மா பிழைப்பாள்” என்கிறார் .
ஒரு பரம்பரைப் பணக்கார வீட்டில் பிறந்த அருளுக்கு அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை . எனினும் அம்மாவுக்காக சம்மதிக்கிறான் .
நண்பனும் உதவியாளனுமான ராஜேசிடம் (பக்ஸ் என்கிற பகவதி பெருமாள்) ஆலைப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு கிளம்புகிறான் .
இந்த நிலையில் உதட்டில் பாசம் காட்டிக் கொண்டு , உள்ளத்தில் வஞ்சகம் வளர்க்கும் அவனது சொந்த பெரியப்பா (முத்துராமன் ) அருளையும் அவன் அம்மாவையும் ஏமாற்றி,
அவர்களது தொழிற்சாலையை அடிமாட்டு விலைக்கு வாங்க சூழ்ச்சி செய்கிறார் .
இது அறியாமல் பிச்சைகாரர்களின் உலகத்துக்குள் நுழையும் அருள் , அங்கே பிச்சைக்காரர்களின் அவல நிலையை , அந்த விளிம்புநிலை மனிதர்களுக்கு சமூக விரோதிகளால் நடக்கும் விபரீதங்களை எதிர்க்கிறான் .
விளைவாக ஒரு பெரிய சமூக விரோதக் கூட்டத்தின் எதிர்ப்பை சம்பாதிக்கிறான் .
இன்னொரு பக்கம் , இவனுக்கு அம்மாவால் திருமணத்துக்குப் பார்க்கப்பட்டிருந்த பெண்ணான மகிழினியை (சாதனா டைட்டஸ்), ஒரு பிஸ்ஸா கடி ஓனராக சந்திக்கிறான் .
தான் யார் என்பதையும் தனது இப்போதைய நிலை பற்றியும் ‘சொல்லாமலே’- யே, பழகுகிறான் . மகிழினி அருளை காதலிக்கவே ஆரம்பிக்கிறாள்.
உழைத்துப் பிழைக்கும் இயல்புடைய அவள் , ஒரு நிலையில் அருள் ஒரு பிச்சைக்காரன் என்பதை அறிந்து விலகிப் போகிறாள் . ஒரு பெண்ணைக் காப்பாற்றிய ‘குற்றத்துக்காக,
‘ சமூக விரோத கும்பல் ஒன்று அருளை கொள்ள முயல்கிறது . அருளின் வேண்டுதல் அறிந்த பெரியப்பா , அவனைக் கொன்று அதன் மூலம் சொத்துக்களை ஒரு பைசா செலவில்லாமல் அபகரிக்க முயல்கிறார் .
இவ்வளவு சிக்கல்களுக்கு இடையில் அருளால் உயிரோடு இருக்க முடிந்ததா ? இல்லையா? முடிந்தது எனில் தனது வேண்டுதல் விரதத்தை முழுமையாக முடிக்க முடிந்ததா ?இல்லையா ?
முடித்தான் எனில் அம்மா பிழைத்தார்களா இல்லையா ? என்பதே இந்தப் படம்
— என்று வார்த்தைகளில் சொல்லி விளக்க முடிகிற சாதாரண படம் இல்லை இது .
பார்த்து சிலிர்க்க வேண்டிய அற்புத அனுபவம் .
இயல்பான நிகழ்வுகள், உறவுகள் , உணர்வுகள் , இவற்றில் இருந்து ஆழ்ந்து நோக்கி, ‘மாத்தி யோசி .. அல்ல அல்ல; தலைகீழாக யோசி’ பாணியில்…ஒரு வித்தியாசமான ஆனால் ஏற்றுக் கொள்கிற கதையை உருவாக்கி ,
மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் தருக்கிய கதைப்போக்கில் பல சிறப்பான நிகழ்வுகளை அமைத்து அவற்றை மிக இயல்பாகவும் நெகிழ்வுத் தன்மையோடும் இணைத்து பிணைத்து செலுத்தி ,
தனது வழக்கமான சிறப்பான மேக்கிங் மூலம் ஓர் அற்புதமான படத்தைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சசி .
கூடவே கிண்டலும் கேலியும் துள்ளலும் எள்ளலுமாக வசனத்திலும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் சசி . குறிப்பாக ,
முதல் படத்தில் சாதாரணமாகத் தோன்றும் நடிகனை பின்னர் பேரழகனாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் மன நிலையையும் ,
ஒருவனை போகப் போக பழகிய பிச்சைக்காரனாக பிச்சை போடுபவர்கள் ஏற்றுக் கொள்வதையும் ஒப்புமை செய்யும் வசனம்,(ஒரு காட்சியில் இதே பாணியில் ரிப்போர்ட்டர்களையும் லேசாகக் குத்துகிறார் சசி )….
கே . பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் படத்தின் எவர் கிரீன் கிளைமாக்ஸ் வசனத்தை பீர் மற்றும் பிராந்தியோடு ஒப்புமை செய்து பேசும் வசனம் ..
இப்படி படம் முழுக்க வசனங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படும் நகைசுவைப் பட்டசுகளாக ஒரு பக்கம் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் நெகிழவும் வைக்கின்றன .
பிச்சை என்ற ஒற்றை வார்த்தையையே உச்சரிக்கவே தயங்கும் ஒரு பிறவிச் செல்வந்தனை படிப்படியாக அழுக்காக்கி ,
கிழித்து அடித்து நிஜ பிச்சைக்கரனாக ஆக்கும் வகையில் துவங்கும் மேக்கிங் நேர்த்தி கடைசி காட்சி வரை அட்சரம் பிசகாமல் தொடர்கிறது.
லஞ்ச ஊழலை ஒழிக்க ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டை ஒழிப்பதுதான் ஒரே வழி என்பதை ஒரு பிச்சைக்கரனைன் பார்வையில் இருந்து சொல்லும் இயக்குனர் சசியின் பார்வை அபாரம .
பிச்சைக்காரர்களின் உலகத்துக்குள் மூழ்கி மூழ்கி முத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறார் சசி .
விஜய் ஆண்டனி …..! வியப்பூட்டும் விஸ்வரூபம் !
அவரது மென்மையான தன்மையான தண்மையான குரலுக்கு மிகப் பொருத்தமான பாத்திரப் படைப்பு . செல்வந்தனாக கம்பீர நடை நடப்பது , பிச்சைக்காரனாக பவ்ய நடை நடப்பது என்று நடையில் துவங்கி,
பேச்சில் பாவனையில் பார்வையில் என்று ஒவ்வொரு விசயத்திலும் அவ்வளவு சிறப்பாக செய்து இருக்கிறார் .
ஒவ்வொரு இடத்திலும் தான் ஒரு பிச்சைக்காரன் என்பதை அவர் ரொம்ப அடக்கமாகவே சொன்னலும்,
எதிரில் இருந்து பார்க்கும்போது அதில் தெரியும் ஒரு வித ஊமைக் குசும்பால் ஏற்படும் கலாட்டா ஒவ்வொன்றும் கலகல ரகளை .
இதுவரை படங்களில் கேரக்டரை முழுமையாக உள்வாங்கி அடக்கமாக நடிப்பது என்பதே அவருக்கு வழக்கமாக இருந்தது .
ஆனால் இதில் பல படிகள் மேலே எழும்பி உயர்ந்து உணர்சிகரமான நடிப்பால் அசத்தி இருக்கிறார் . விரதத்தை தொடர்ந்து அம்மாவைக் காப்பற்றுவதா இல்லை விரதத்தைக் கைவிட்டு இன்னொரு உயிரைக் காப்பாற்றுவதா
என்று தவிக்கும் காட்சிகளில் , இதயத்தை உடலுக்கு வெளியே துடிக்க வைக்கிறார் , விஜய் ஆண்டனி. பிரமாதம் .
அது மட்டுமல்ல , இதுவரை அவரது படங்களில் சண்டைக் காட்சிகள் என்பது ஒரு கடந்து போகிற நிகழ்வாக மட்டுமே இருக்கும் .
ஆனால் இதில் பொறி பறக்க வைக்கும் சண்டைக் காட்சிகளின் மூலம் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாகவும் வியாபித்து நிற்கிறார் .
இறுதிக் காட்சிகளில் அம்மா முன்பு உட்கார்ந்து அவர் பேசும் காட்சிகளில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தன்னை அறியாமல் கலங்கிப் போகிறார்கள் .
நடிகர் விஜய் ஆண்டனி இப்படி என்றால் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இன்னொரு பக்கம் ….!
நெஞ்சோரத்தில் பாட்டின் மூலம் இதயத்தின் இனிமையான பகுதிக்குள் அறியாமல் நுழைகிறார் . அறியும்போது ஆனந்தப் பட வைக்கிறார். பின்னணி இசையில் நெகிழ்வான காட்சிகளுக்கு கனம் சேர்க்கும் அதே நேரம் ,
பட்டையைக் கிளப்பும் வசன நகைச்சுவைக் காட்சிகளை தனது காமடியான பின்னனி இசையால் மேலும் தூக்கி நிறுத்துகிறார் . ஒரு காட்சியில் இசைக் கருவிகலையே சிரிக்க வைத்திருக்கிறார் பாருங்கள் . செம செம !
கதாநாயகிகளின் பாத்திரப் படைப்பில் சசி காட்டும் தனித் தன்மை இதிலும் தொடர்கிறது .சசி படங்களில் வரும் சிறப்பான யதார்த்தமான கதாநாயகியாக சாதனா டைட்டஸ் சிறப்பாக நடித்து இருக்கிறார் .
சட்டையர் பிச்சைக்காரனாக பட்டையைக் கிளப்பும் இயக்குனர் மூர்த்தி, அம்மாவாக நடித்திருக்கும் தீபா வின் , உட்பட அனைவருமே நடிக்காமல் இயல்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் .
பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு , அருளின் மாறும் ஒவ்வொரு உலகத்துக்கும் நம்மை உறுத்தாமல் கொண்டு போய் உட்கார வைக்கிறது. இயக்கத்துக்கு உற்ற துணையாக துலங்குகிறது . உணர்வுகளை துலக்குகிறது .
சற்றே மோதினாலும் கிளையே முறிந்து விடும் முல்லைக் கொடி போன்ற திரைக்கதையை கொஞ்சம் கூட பாதிக்காமல் சுவாரஸ்யப் பந்தலில் தொடர்ந்து படர விடுகிறது வீரா செந்தில் ராஜின் கவனமான படத் தொகுப்பு .
எதைக் கொடுத்தலாலும் உறவின் உரிமையாக ஏற்றுக் கொள்ளாமல் பிச்சையாக கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று உறுதியாக அருள் இருக்க,
அவனது ஏந்திய கையில் முகம் வைத்து தன்னையே மகிழினி பிச்சையாகப் போட்டுக் கொள்ளும் அந்த மழைக் காட்சி….
விஜய் ஆண்டனி , சசி , சாதனா டைட்டஸ், பிரசன்னா குமார் , வீரா செந்தில் ராஜ்… எல்லோருமே பிரம்மாதப்படுத்தி இருக்கும் உன்னதம் . THE SCENE !
அது சரி … செல்ஃபி எடுக்க நூறு ரூபாய் வாங்குவது பிச்சையில் சேருமா இயக்குனரே ?
தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விட வாய்ப்பு உண்டு என்பது கூட தெரியாமல் அருள் திருவன்னமலில் கிரிவல காலத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பானா ?
இப்படி ஓரிரு கேள்விகள் வந்தாலும் கூட,
மனம் நெகிழ வைக்கும் பாச உணர்வு , வயிறு குலுங்க வைக்கும் சமூகக் கிண்டல் நகைச்சுவை …இவற்றை அழகாக இணைக்கும் கவிதைப் பூர்வமான மேக்கிங்…. இவற்றின் மூலம் ,
மரத்துக் கிடக்கும் மனங்களே பொட்டல் வனங்களாக வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் , உணர்வுகளின் உன்னதம் சொல்லும் ரசனைச் சோலையாக வந்துள்ளது பிச்சைக்காரன்
அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் . அதுவும் பிள்ளைகளோடு இந்தப் படத்துக்கு போவது, கடைசிக் காலத்தில் பெற்றோருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் .
பிச்சைக்காரன் … தரத்தில் செல்வந்தன் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————-
சசி, விஜய் ஆண்டனி, சாதனா டைட்டஸ், பிரசன்னா குமார் , வீரா செந்தில் ராஜ், மூர்த்தி