இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க, மிஷ்கினின் இயக்கத்தில் நாகா, பிரயாகா , ராதாரவி நடிப்பில் வந்திருக்கும் படம் பிசாசு.
என்ன விதத்தில் ரசிகர்களை ஆட்டிப் படைக்கிறது இந்தப் பிசாசு? பார்க்கலாம்?
காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு இசைக் கலைஞன் (நாகா), தனது அம்மாவிடம் இருந்து போன் வரும் நிலையில் மொபைல் போனை எடுத்துப் பேச, அடுத்த சில நொடிகளில் ஓர் இளம் பெண்ணை (பிரயாகா) யாரோ ஒரு கார்க்காரன் அடித்து வீழ்த்திவிட்டுப் போயிருப்பதை பார்க்கிறான். பெண்ணை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட, அங்கே இவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அடுத்த நொடி உயிர் துறக்கிறாள் அந்தப் பெண் .
அடுத்த நாள் முதல் அவன் தங்கி இருக்கும் வீட்டில் பேயாக நடமாடுகிறாள் . வீட்டில் அவனால் பீர் குடிக்க முடியவில்லை. ஓப்பனர் காணாமல் போகிறது . அல்லது பீர் பாட்டில்கள் உடைக்கப்படுகின்றன. அவன் பயப்படுகிறான். பேய் ஓட்ட வரும் ஒரு காஸ்ட்லியான பெண் பேயோட்டியை துரத்தித் துரத்தி அடிக்கிறது அந்தப் பேய்.
ஊரில் இருந்து அவனது அம்மா வர, அம்மாவுக்கும் பேயால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அவன் பயப்பட, அவன் அம்மாவுக்கு பாத் ரூமில் அடிபட்டு படுகாயம் ஏற்படுகிறது .
கொந்தளிக்கும் நாயகன், பெண்ணின் தந்தையை கண்டு பிடித்து ”சாகும் தருவாயில் இருந்த உன் பெண்ணை நான் காப்பாற்றியது குற்றமா?. உன் பொண்ணு பேயா என் வீட்ல இருந்துகிட்டு உயிரை வாங்கறா. அவளை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்வதற்காகப் போக, அங்கே அவளது தந்தை (ராதாரவி) , பெண்ணின் உடலை புதைத்து சமாதி கட்டி இருப்பது தெரிகிறது.
பெண்ணின் உடலை புதைத்ததால்தான் அவள் பேயாக இப்படி இருக்கிறாள் . அந்த உடலை எரித்து விட்டால் பிரச்னை இல்லை ” என்று இசைஞனுக்கு நண்பர்கள் சொல்ல, சமாதியை அவன் உடைக்க முயல அப்புறம் என்ன ஆச்சு என்பதே … இந்தப் பிசாசு.
ரோட்டில் விபத்தில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை ஒரு நல்லமனதுள்ள இசைஞன் காரில் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்க அவள் செத்துப் போகிறாள் என்கிற, நாம பலமுறை பார்த்த காட்சியில்தான் படம் துவங்குகிறது .
ஆனால் மிஷ்கின் அதை படமாக்கி இருக்கும் விதம்… அடடா ! அதை மிடாஸ் டச் என்று சொல்லலாம் . அல்லது மிஷ்கின் டச் என்றும் சொல்லலாம்.
படம் முழுக்கவே இந்த இதயம் கீறும் படமாக்கல் முறை அழுத்தமாக இருக்கிறது. அருமை .
பேய்க்குப் பயப்படும் நாயகன் , மாநகர சுரங்கப் பாதையில் பாடிப் பிழைக்கும் கண் தெரியாத பிச்சைக்காரர்களுடன் போய்ப் படுத்துக் கொண்டு நேரம் கழிக்கிறான். இந்தக் காட்சி , பிழைப்புக்காக பாடிப் பிச்சை எடுத்தாலும் உண்மையாகவே இசையை சுவாசிக்கும் அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மிஷ்கின் கொடுக்கும் கவுரவமாகவே இருக்கிறது.
கருத்துப்பூர்வமான களம் . சபாஷ் !
பேய்ப்படங்கள் போன்ற அப்நார்மல் படங்களில் கேமரா கோணங்களை எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம் என்ற ஒரு வசதி உண்டு. அதை வைத்துக் கொண்டு விதம் விதமான ஷாட்களை யோசித்துப் பார்க்க முடியாத கோணங்கள் மற்றும் நகர்வுகளில் மிஷ்கின் கொடுத்து இருக்கிறார் .
அதற்கேற்ப இருளும் ஒளிக்கசிவுமாக — ஒளியும் இருள் திணிப்புமாக — வண்ணங்களும் வெறுமையாக மிக சிறப்பான ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி ராய்.
மிக அற்புதமாக பின்னணி இசை அமைத்து உருக வைக்க வேண்டிய இடங்களில் உருகவும் மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டியும் படத்துக்கு யானை பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேல்லி. (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் வயலின் காதலராக மாறிவிட்டார் போலிருக்கிறது. இந்தப் படத்திலும் அந்த பாதிப்பு உணர்வு வருகிறது.
ஜெயஸ்ரீயின் ஆர்ட் டைரக்ஷன் தபஸ் நாயக்கின் ஆடியோ கிராபி பிரேம்குமார் மற்றும் ஜெய்கரின் சவுண்டு எபெக்ட் மூன்றும் சிறப்பு,
பாலாஜி மற்றும் பிரசாத்தின் சிரத்தையான மேக்கப்பில் மிக வித்தியாசமான பேயை பார்க்க முடிகிறது.
திகில் , செண்டிமெண்ட் விசயங்களை மட்டுமல்ல காமெடி காட்சிகளை கூட சைலண்டாக நிதானமாக சொல்லி புன்னகைக்க வைத்து பிறகு நினைத்துப் பார்க்கும்போதும் சிரிக்க வைக்கிறார் மிஷ்கின் . உதாரணம்… நாயகன் பீர் குடிக்க முயலும்போது அதை உடைத்துப் போடுகிறது பேய். வீட்டுக்குள் பேய் இருப்பதை அம்மாவுக்கு நம்பவைக்க, பீர் பாட்டிலை வைக்க, அது உடையாமல் இருக்க, ஓங்கி அறையும் அம்மா “பீர் குடிக்கிறியா? இரு அப்பாகிட்ட சொல்றேன்” என்று சொல்லும் காட்சி .
அவ்வப்போது நாயகனிடம் பணம் கேட்கும் கருத்து பார்ட்டி , பக்கத்து வீட்டு பெண்மணி, இன்னொரு வீட்டில் மனைவியை அடிக்கும் முரட்டுக் கணவன் என்று நடிக நடிகையர் தேர்வுகள் அபாரம் .
பேய் ஓட்ட வரும் பெண்மணி கேரக்டரில் நடித்து இருப்பவர் அசத்துகிறார். . கையை சேர்த்து முகத்தை கோணி சேட்டை பண்ணும்போது பின்னனி இசையின் உதவியால் அவர் பங்குக்கு மிரட்டி விட்டுப் போகிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் பெண்மணி கம்பீரப் பொருத்தம் .
ஒரு இடைவேளைக்கு பிறகு நாயகியின் தந்தையாக ஒரு கனமான கேரக்டரில் சிறந்த நடிப்பால் கலங்க வைத்து இருக்கிறார் ராதாரவி.
இது போன்ற படங்களில் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கதாபாத்திரம் பெரிதும் உதவி செய்யும். அந்த உதவியையும் அழகாக வாங்கி இருக்கிறார் மிஷ்கின்.
கதாநாயகி பிரயாகா இரண்டே காட்சிகளில் அழகிய பெண்ணாகவும் ஆறேழு காட்சிகளில் பத்துக் காட்சிகளில் பேயாகவும் வருகிறார் . ஆனால் படம் முழுக்க அவர் நிறைந்து வழிகிற உணர்வை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் .
ஹீரோ நாகாவுக்கு முகத்தில் எக்ஸ்பிரஷன் சரியாக வரவில்லையோ என்னவோ , முழு முகத்தையும் முடியால் மூடி ஒரு கண்ணால் மட்டும் பார்த்தபடி நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் . அழும்போது கூட ஒரு கண்ணில்தான் கண்ணீர் வருகிறது . ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது .
பொதுவாக நடிப்பை வெளிப்படுத்துவதற்கு முகம்தான் முக்கியக் களம் என்பதற்கு மாற்றாக உடல் மொழிகளை அதிகம் பயன்படுத்தி அசத்துவது மிஷ்கினின் பாணி. இந்தப் படத்திலும் அதில் பிரம்மாண்டமாக ஜெயித்து இருக்கிறார் மிஷ்கின் .
மனிதர்களில் பேய்கள் இருக்கும்போது பிசாசுகளில் ஏன் தெய்வங்கள் இருக்கக் கூடாது என்ற மிஷ்கினின் சிந்தனை நம்மை ஆட்டிப் படைக்கிறது .
மொத்ததில் பிசாசு …. தேவதை !
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————— —————
மிஷ்கின், அரோல் கோரெல்லி, ரவி ராய், பாலாஜி , பிரசாத், தபஸ் நாயக் , பிரேம்குமார், ஜெய்கர்