டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்க, பிரபு தேவா, வரலக்ஷ்மி சரத் குமார், ஆழியா, ஜான் கொக்கென் , கவுரவத் தோற்றத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் சன்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .
விபத்தில் மனைவியையும் இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்து சிறுமியான மகளோடு (ஆழியா) வாழும் கதிரவனுக்கு (பிரபுதேவா) காப்புறுதி நிவாரணப் பணம் வருகிறது .
அதை வைத்து மகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க அவர் திட்டமிட, மகளோ அப்பாவுக்கு செயற்கைக் கால் வாங்க வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறாள் . காலும் வந்து விட , மகளுக்கு உயிராபத்து நோய் ஒன்று இருப்பதும் அவளைக் காக்க லட்சக் கணக்கில் பணம் தேவை என்ற நிலையும் வருகிறது .
பண விசயத்தில் சிலர் அவரை ஏமாற்ற எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை .
அந்த சூழலில் ஜெயிலில் இருக்கும் அப்பா( பிரகாஷ் ராஜ்) ஒரு பிரபல தொழில் அதிபரின் (வரலக்ஷ்மி சரத் குமார்) மகளைக் கடத்தினால் பணம் கிடைக்கும் . அதை வைத்து மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்டலாம் என்று கூற ,
நண்பனோடு ( ஜெகன்) சேர்ந்து குழந்தையை கடத்தத் திட்டமிடுகிறார் கதிரவன் .
கடத்தல் சமயத்தில் குழந்தையை வேறொரு நபர் கடத்த , கடத்தல் முயற்சியில் கதிரவனும் சிக்க , நடந்தது என்ன என்பதே பொய்க்கால் குதிரை.
படத்தின் துவக்கத்தில் அட்டகாசமான ஒற்றைக்கால் நடனப் பாட்டில் முத்திரை பதிக்கிறார் பிரபுதேவா . உணர்ச்சிகரமாக நடித்தும் இருக்கிறார். சிறப்பான நடிப்பு , மற்றும் தோற்றத்தில் மனம் கவர்ந்து விடுகிறார் ஆழியா.
கால் இழந்த தந்தை இவ்வளவு பாசமான அறிவான அழகான குழந்தை இவர்கள் தொடர்பான படமாகவே படம் போகும் என்ற நம்பிக்கையை ஆழியாவின் நடிப்பு ஏற்படுத்த , ஆனால் கதை மாறிப் போய் அப்புறம் ஆழியா கிட்டத்தட்ட கூட்டத்தில் ஒருத்தர் ஆகி விடுகிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் ஓகே.
இமானின் இசையில் பாடல்கள் இனிமை. பல்லுவின் ஒளிப்பதிவும் சிறப்பு. தன் கஷ்டத்தை தீர்க்க இன்னொருத்தர் குழந்தையை கடத்துவதை ஹீரோ பாத்திரமே செய்வது உறுத்துகிறது .
எனினும் ” கடத்தப்பட்ட உங்க குழந்தையை நான் கண்டு பிடித்துக் கொண்டு வர்றேன் . என் மகளின் மருத்துவ செலவை நீங்க பாத்துக்குங்க ” என்று கதிரவன் சொல்ல, தொழிலதிபரும் ஏற்கும் காட்சி உறுத்தலைக் குறைக்கிறது .
உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் என்ற என்ற விழிப்புணர்வு விசயத்துக்குப் பாராட்டலாம்.இரண்டாம் பகுதியில் அதுவும் கிளைமாக்ஸ் பகுதியில் அடுத்தடுத்து டுவிஸ்ட்களாகப் போட்டுத் தள்ளி ரிவிட் அடிக்கிறார்கள் . அதையும் ஏதோ ரயிலுக்குப் போகிற அவசரத்தில் பின்னணிக் குரலில் அந்த டுவிஸ்ட்களை இந்தா இந்தா என்று அள்ளி விடுகிறார்கள்.
பொய்க்கால் குதிரை … ஆட்டம் இருக்கிறது