கதை திரைக்கதை வசனம் எழுதி ராகௌ மாதேஸ் இயக்கி இருக்கும் படம் போக்கிரி மன்னன்.
ரசிகர்களுக்கு இவன் போக்கிரியா இல்லை மன்னனா? பார்க்கலாம் .
விஜய்யின் ரசிகர் மன்ற ஆளாக இருக்கும் கிராமத்து இளைஞனுக்கு ( மாஸ்டர் ஸ்ரீதர்) அம்மா , அப்பா , ஒரு தங்கை , சில நண்பர்கள் மற்றும் டாஸ்மாக் கடை ஆகியவையே துணை .
நண்பர்களோடு சரக்கடித்து பொழுதைக் கழிப்பதை முக்கிய வேலையாகக் கொண்டு செயல்படும் அவனுக்கு ஓர் இளம் பெண்ணோடு காதல் ஏற்படுகிறது . துபாயில் சம்பாதித்துக் கொண்டு வந்து கவுன்சிலர் ஆகும் ஆசையில் சுற்றும் ஒரு நபரின் ( சிங்கம் புலி ) , பதிவி ஆசையைப் பயன்படுத்தி ஏமாற்றி காசு பிடுங்கி, காதலிக்கு செலவு செய்கிறான் அந்த இளைஞன் . அப்புறம் இருக்கவே இருக்கவே இருக்கிறது சரக்கடிக்கும் வேலை.
அதே நேரம் தங்கைக்கு திருமணம் முடிவாகிறது . திருமணத்துக்கு முதல் நாள் மது அருந்திய மாப்பிள்ளை ரத்தம் கக்கி இறந்து போகிறான் . தங்கையின் திருமணம் நின்று போகிறது .
அரசு மதுபானக் கடை ஆட்களை கையில் போட்டுக் கொள்ளும் ஒரு போலி மது வியாபாரி, அதன் மூலம் தனது போலி மதுவுக்கு அரசு மது பாட்டிலில் அரசு மது போல லேபிள் ஒட்டி விற்பனை செய்வது தெரிய வருகிறது .
அந்த போலி மது வியாபாரியை நாயகன் என்ன செய்தான் என்பதே , இந்த போக்கிரி மன்னன் .
ஹீரோவாக ஆகி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் பாடல்களுக்கான நடன அசைவுகளில் கவர்கிறார் . சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் நடிப்பும் ஒகே .
கதாநாயகி ஸ்பூர்த்தி துறுதுறுப்பாக இருக்கிறார் .
கதாநாயகி திட்டும் போதெல்லாம் அதற்காக வருத்தப்படாமல் அதையும் ரசித்து மேலும் மேலும் திட்ட சொல்லும் நாயகனின் குணாதிசயம் .. ரசனைக்குரியது.
கவுன்சிலர் கனவு காணும் சிங்கம் புலி சம்மந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவை இருக்கிறது .
இந்திரவர்மனின் இசை இனிமையாக இருக்கிறது . பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுகிறது . அந்த காதல் மெலடி பாடல் மிக அருமை .
நாடே மதுவுக்கு எதிராகப் போகும் நிலையில் தமிழ் சினிமாவில் மட்டும் ஹீரோ , காமெடியன், ஹீரோயின் , வில்லன் , எல்லோருமே டாஸ்மாக்கிலேயே காலம் கடத்துவது போல பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மதுவுக்கு எதிராகப் பேசுவது இந்தப் படத்தின் பெரும்பலம் .
அதுவும் கடைசி காட்சியில் ஹீரோ அவனது நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ”யாரும் மது அருந்த வேண்டாம்” என்று கோரிக்கை வைப்பது போன்ற கிளைமாக்ஸ் பாராட்டுக்குரியது .
‘கள்ளச் சாராயம் குடித்தால்தான் சாவு . அரசு மதுக் கடை சரக்குகள் ஒன்றும் பெரிய ஆபத்து இல்லை’ என்பது பலரின் சமாதானம் . ஆனால் இன்று டாஸ்மாக் கடைகளிலேயே பல இடங்களில் தரமற்ற ஆபத்தான சரக்குகள் புழங்குவதை குடிமகன்கள் பலரின் கூற்றில் இருந்து உணர முடியும் .
அந்த உண்மையின் அடிப்படையில் கதை அமைத்து அரசு மதுபானக் கடை சாராயமும் ஆபத்தானதுதான் என்று சொல்வதன் மூலம் , மதுவிலக்குக்கு வேறு மாதிரி ஆதரவு தருகிறது என்பது, இந்த போக்கிரி மன்னன் படத்தின் சிறப்பு .