டி இமான் இசை அமைக்க, படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஞ்சநேயலு ராம் கோபால் வர்மாவுடன் பல படங்களில் பணியாற்றியவர்.
படத்தில் இடம் பெரும் அத்து விட்டா அத்து விட்டா என்ற ஒற்றைப் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகர் பாடல்களை வெளியிட டி.ராஜேந்தர் பெற்றுக் கொண்டார் .
வரவேற்புரையாற்றிய பி டி செல்வகுமார் ” என்னை உருவாக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர் அப்பாவும் விஜய் சாரும் தான் . புலி படத்தின் போது பணச் சிக்கலில் நான் சிக்கிக் கொள்ள ,
ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்து உதவினார் எஸ் ஏ சி சார். அதே போல பட ரிலீஸ் அன்று ஒரு பிரச்னை வந்தபோது ரெண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துப் பத்திரத்தை தூக்கிப் போட்டு,
” இதை வச்சு படத்தை கொண்டு வாங்க”ன்னு சொன்னவர் டி ஆர் சார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க இந்த ரெண்டு பேரும்தான் மிகவும் பொருத்தமானவர்கள் . .
எஸ் ஏ சி சார் படம் என்றால் தினசரி ஷூட்டிங் சரியான சமயத்துக்கு துவங்கும் . சரியாக நடக்கும் . நேரம் கொஞ்சம் கூட வீணாகாது .கே ஏற ரவிகுமார் , ஹரி போன்றவர்கள் அப்படிதான் .
அந்த வரிசையில் ராம் பிரகாஷ் ராயப்பாவும் வருகிறார் . இந்தப் படத்தை சொன்னதை விட குறைவான நாளில் ஆனால் தரத்தில் எந்த குறையும் இல்லாமல் எடுத்துக் கொடுத்தார் .
புலி படத்தின் போது ரெய்டில் சிக்கி நான் நொந்து இருந்த போது என்னைக் கூப்பிட்டு நம்பிக்கை கொடுத்து பலம் கொடுத்து கால்ஷீட்டும் கொடுத்தவர் ஜீவா . இவர்களுக்கு எல்லாம் என்றும் நன்றியோடு இருப்பேன் ” என்றார் .
“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் பார்த்த உடனே டைரக்டர் ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு போன் பண்ணி உங்க கூட படம் பண்ணனும் சார்னு சொன்னேன் . மூணு மாசம் கழிச்சு எனக்கு போன் பண்ணி ,
‘ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருக்கு . பண்றீங்களான்னு கேட்டார் . சந்தோஷமா ஒத்துக்கிட்டேன் . படம் ரொம்ப நல்லா வந்திருக்கு கண்டிப்பா வெற்றி பெறும்” என்றார் .
எல்லோருக்கும் நன்றி சொல்லி மிழற்றினார் ஹன்சிகா .
இசையமைப்பாளர் இமான் பேசும்போது ” இன்று வெளியாகும் அத்து விட்டா அத்து விட்டா பாடலை டி ஆர் சார் பாடி ஆடும்படி அமைக்கத்தான் திட்டமிட்டோம் .
ஆனால் சில சூழல்கள் காரணமாக அவரால் பாட முடியாமல் போனது . பின்னர் ராப் முறையில் பாடலை உருவாக்க முடிவு செய்தேன் . முறையான ராப் பாடகர்கள் வட இந்தியாவில்தான் இருக்கிறார்கள் .
எனவே நானே பாட முடிவு செய்தேன் . ராப் பாட குரல் கரகரப்பாக வேண்டும் . அப்படியே பாடினேன். பாடிய அன்று இரவு இருமினால் ரத்தம் வந்தது. வீட்டில் ரொம்ப பயந்து விட்டார்கள் .
அடுத்த மூன்று நாள் ஒழுங்காக பேச முடியவில்லை . பழைய குரல் வர நான்கு நாட்கள் ஆனது ” என்றார் .
ஜீவா தன் பேச்சில் ” இந்தக் கதையை கேட்க உட்கார்ந்த போது நான் ஒரு மாதிரியான மூடில்தான் இருந்தேன் . அப்புறம் வர சொல்லலாமா என்று கூட நினைத்தேன்.
ஆனால் அப்பாயின்ட்மென்ட் மிஸ் ஆவதை செல்வகுமார் விரும்ப மாட்டார் . எனவே கேட்க ஆரம்பித்தேன் . ஆனால் முதல் சீனில் இருந்தே சிரிக்க ஆரம்பித்து விட்டேன் .
பின்னாளில் சிபி , ஹன்சிகா ஆகியோரும் கூட அதே மாதிரி கதை கேட்க ஆரம்பித்த போது முதல் சீனில் இருந்தே சிரிக்க ஆரம்பித்து விட்டோம் என்று சொன்னார்கள் .
லவ் , காமெடி, மெசேஜ் எல்லாம் உள்ள படம் இது . படத்தைப் பற்றிப் பேச எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயம் இருக்கு . ஆனா எதை சொன்னாலும் கதை வெளிய வந்துடும் . அதனால் வெற்றி விழாவில் பேசறேன் ” என்றார் .
இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகர் பேசும்போது
” நானும் என் மகன் விஜய்யும்தான் தனது உயர்வுக்கு காரணம் பி டி செல்வகுமார் சொன்னார் . அப்படி இல்லை . நாங்கள் வழிதான் காட்டினோம் . அவர்தான் உழைத்து உயர்ந்தார் .
உண்மையில் விஜய்க்குக் கூட நான் வழிக்தான் காட்டினேன் . அவர் தன் சொந்த திறமை மற்றும் உழைப்பால்தான் உயர்ந்தார்” என்றார் .
படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா ” நான் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்னு சிபிராஜ் கிட்ட சொன்ன போது , உங்க படத்துல என்ன கேரக்டர் என்றாலும் நடிக்க தயார் சார் ‘னு சொன்னார் .
அவர் என் மேல வச்ச நம்பிக்கையைப் பார்த்து அதற்கு பங்கம் இல்லாமல் நடந்துக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்படியே நடந்து இருக்கேன் . இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய உயரத்துக்குப் போவார் .
படத்துக்கு ஜீவா , ஹன்சிகா கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . செல்வகுமார் ஓர் அற்புதமான தயாரிப்பாளர் . கேட்டதை கேட்ட நேரத்தில் கொடுப்பார். படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும் படமா இருக்கும் ” என்றார்
பாடலை வெளியிட்டு விட்டு டி.ராஜேந்தர் பேசும் போது.” நான் ‘புலி’ படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன். காரணம் எனக்கு வந்த ஓர் ஆதங்கம்.
அந்த விழாவில் நான் புலி புலி என்று அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிக்களில் விமர்சித்தார்கள். அந்த படத்தை வாங்கிய டிவியே என்னை கிண்டல் செய்தார்கள் .
அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான்.
நான் அமைச்சர் பதவிக்கு இணையான சிறு சேமிப்புத் துறை தலைவர் பதவியை ஈழத்தமிழர்களுக்காக பதவியை உதறியவன். புலிப் பேச்சை பலரும் விமர்சித்ததும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
யாரை கிண்டல் செய்ய வில்லை? கடவுளையே கிண்டல் செய்ய வில்லையா?’ நான் ஒன்றுமே இல்லை.
வாலு’ படத்துக்கு பிரச்சினை வந்த போது உதவியது விஜய் மட்டும்தான் அவர் செல்வகுமாரை தூதராக அனுப்பி உதவினார்.அப்போது உதவிய ஒரே இதயம் அவர் மட்டும் தான்.
‘புலி’ படப் பிரச்சினையில் ‘உடுக்கை இழந்தவன் கை போல’ நட்புக்காக உதவினேன். நட்புக்கு உதவுவது தவறா? இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம்.
‘புலி’ வெளியீட்டுக்காக நான் போராடினேன். சண்டை போட்டேன்.
‘புலி’ வெளிவர நான் உதவினேன் என்று செல்வகுமாரை விட சிபுதமீன்ஸ் சொன்னதில் மகிழ்ச்சி. ஏனென்றால் சினிமாவில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.
இன்று அடுக்கு மொழியில் பேச வரவில்லை.இன்று நல்ல தமிழை கேட்க ஆளில்லை. அன்று நான்’இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் ,இது மேற்கில் தோன்றும் உதயம். இது நதியில்லாத ஓடம் ‘
— என்று எழுதினேன். அன்று தமிழை ரசித்தார்கள். அன்று எல்லோருக்கும் தமிழ் தெரிந்தது.
இன்று ‘உடுக்கை இழந்தவன் கை போல’ என்று வள்ளுவர் சொன்னதைக் கூட தெரியாதவன் இருக்கிறான். நான் கதை, திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள்,இசை ,எடிட்டிங் டைரக்ஷன் எல்லாம் செய்தவன்.
இன்று ஒரு பீப் பாடலால் ஏகப்பட்ட பிரச்சினைகள்.ஒரு தந்தையாக எல்லாவற்றையும் மீறி வந்து கொண்டிருக்கிறேன்.இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம்
அதனால்தான் இன்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மற்றவர்கள் யாரும் என்னை மாதிரி சினிமாவில் இருந்து விடாதீர்கள்.கஷ்டபடுவீர்கள்.
இப்படத்தில் நடித்துள்ள ஜீவா ,சிபிராஜ் இருவருமே நல்ல பிள்ளைகள். காரணம் அவர்கள் அப்பாக்களை எனக்குப் பிடிக்கும்.இந்த ஹன்சிகா நல்ல நடிகை.
எனக்காக ‘வாலு’ படத்தில் ஒரு பாடலுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் .”என்று கூறியவர் படக்குழுவினரை வாழ்த்தினார்.