பேன்யன் மூவீஸ் சார்பில் எஸ் ஏ பரந்தாமன் தயாரிக்க, இர்ஃபான், சிங்கம்புலி, அர்ச்சனா, அருந்ததி நாயர், சம்பத் ரம் ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ரமேஷ் ரங்கசாமி இயக்கி இருக்கும் படம் பொங்கி எழு மனோகரா.
படம் பார்க்க செல்ல ரசிகர் கூட்டம் எழுமா? பார்க்கலாம் .
அம்மாவை சந்தேகப்பட்டு அடித்து விரட்டி விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் கோபக்கார குடிகார அப்பாவின் அடி உதை மிரட்டல்களால், சிறு வயது முதலே அம்மாவைப் பார்க்காமல் — பார்க்க வரும் அம்மாவையும் அப்பாவுக்கு பயந்து பார்க்காமல் தவிர்த்துவிட்டு — வாழ்பவன் மனோகரன் (இர்ஃபான்).
செத்துப் போன தனது தந்தையின் ஆசைப்படி அவர் எழுதிக் கொடுத்து விட்டுப் போன நாடகத்தை எப்படியாவது அரங்கேற்றி விட முயன்று, ஒவ்வொரு முறையில் ஏதாவது காரணங்களால் நாடகம் பாதியிலேயே நின்று போனாலும் தொடர்ந்து முயலும் மணி (சிங்கம் புலி ) , மனோகரனின் நகைச்சுவைத் தோழன்.
மனோகரனுக்கு தேன் மொழியுடன் (அர்ச்சனா) வரும் காதல், அவளது பணத்தாசையால் கருகிப் போக, பள்ளித் தோழி ஆனந்தியுடன் (அருந்ததி நாயர்) நம்பிக்கையான காதலும் இருக்கிறது .
அப்பாவின் கொடுமைகளுக்காக பயந்து வாழும் மனோகரன் ஒரு நிலையில் பொங்கி எழுந்து அவரை அடக்கி விட்டு , அம்மாவைப் பார்க்கப் போன போது என்ன நடந்தது ? மணியின் நாடக லட்சியம் நிறைவேறியதா ? என்பதே இந்தப் படம் .
எளிய நாடகக் கலைஞர்களின் பின்னணியில் கதை சொல்லும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் . அது தொடர்பான காட்சிகளும் மனசுக்கு நெருக்கமாக உட்காருகிறது. நாயகன் மற்றும் அவனது தந்தையின் பால் வியாபாரப் பின்னணியும் வெகு யதார்த்தம்.
அம்மாவைத் தேடி மனோகரன் போகும் பகுதிகளில் இருந்து கிளைமாக்ஸ் வரை படம் மிக சிறப்பாக இருக்கிறது. பல சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு இயல்பான கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்து இருப்பது அருமை.
இயக்குனரே எழுதி இருக்கும் “நான் மழையில் நனைஞ்சா தல துவட்ட ஒரு முந்தானை இல்லை “ பாட்டு வரிகளாலும் கண்ணனின் இசையாலும் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது . அதே போல ‘’மானு வேட்டையும் ஆடுவாரு மயிலு வேட்டையும் ஆடுவாரு’’ பாடலில் பாடகிகளின் அந்த துள்ளல் குரலும் மெட்டும் நடனமும்glorify செய்யப்பட்ட ஒளிப்பதிவும் எதிர்பாராத இனிய விருந்து .
ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் விடிகாலைக் காட்சிகள் நன்றாக வந்துள்ளன .
இர்ஃபானும் சிங்கம் புலியும் சேர்ந்து காமெடிக் காட்சிகளில் சில பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறார்கள். இஃர்பான் உற்சாகமாக நடித்து இருக்கிறார்.( டப்பிங் பேசும்போது சுடுதண்ணி குடிச்சுகிட்டு பேசுங்க தம்பி ). கடைசிக் காட்சிகளில் கஷ்டப்பட்டிருக்கிறார் , உடலளவில்!
கோபக்கார அப்பாவாக வரும் சம்பத் ராம் மிரட்டுகிறார். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் . கேரக்டரை இன்னும் கொஞ்சம் இயல்பாக அமைத்திருக்கலாம்.
அர்ச்சனா , அருந்ததி இருவரும் கிடைத்த வேலையை ஒழுங்காக செய்து இருக்கிறார்கள்.
1980 களில் நடந்த கதையாக சொல்லப்படுகிறது என்று டைட்டில் போட்டு தப்பித்தாலும், காட்சிகள் சொல்லப்படும் பழைய பாணி அலுப்பூட்டுகிறது. படமாக்கலில் அதற்குரிய சிரத்தை படத்தில் இல்லை .
சினிமா என்பது காட்சி ஊடகம் . வசனம் உட்பட அதில் வரும் ஒலிகள் அனைத்தும் மிகப் பொருத்தமாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் இந்தப் படத்தில் கேப் விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . பிலிம் சுருளில் ஒரு ஃபிரேமுக்கும் அடுத்த ஃபிரேமுக்கும் இடைய கறுப்புப் பட்டை போல இடைவெளி இருக்குமே , அதன் மேல் கூட கேப் விடாமல் பேசித் தள்ளுகிறார்கள் .
பொங்கி எழு மனோகரா… சங்கிலிகள் அறுபடவில்லை