
ரமேஷ் ரங்கசாமியின் வாழ்வில் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதையாம் இது . டிரைலரில் ஹீரோவின் அப்பா ஹீரோவை புரட்டி புரட்டி அடிக்கிறார் .
பொதுவாக படத்தின் கிளைமாக்சை யாரும் எடுத்த உடன் படம் பிடிக்க மாட்டார்கள் . ஆனால் இந்தப் படத்தில் எடுத்த எடுப்பிலேயே கிளைமாக்சை படம் பிடிக்க , அதில் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆன யூனிட் ஆட்கள் , அதன் பிறகு நாம் ஒரு நல்ல படத்தில் பணியாற்றுகிறோம் என்று உற்சாகமாக பணியாற்றினார்களாம் .

படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் நான்கு பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள் . அவற்றில் இயக்குநரே எழுதிய “நான் மலையில் நனைஞ்சு வந்தா தலை துவட்ட ஒரு முந்தானை இல்லை ” என்று துவங்கும், தாய்ப்பாசத்தை உணர்த்தும் ஒரு பாடல் ஈர்ப்பாக இருந்தது . கிராமத்து காமெடி படம் என்பதும் ஹீரோ ஒரே நேரத்தில் ரெண்டு பெண்களை டாவடிக்கிறார் என்பதும் புரிந்தது.
“கடைசி பத்து நிமிடம் வரை காமெடி . கடைசி பத்து நிமிடம் நெகிழ்ச்சி . குடும்பத்தோடு பார்க்க முடிகிற படம் இது ” என்றார் தயாரிப்பாளர் பரந்தாமன் .
“அண்ணாமலையில் ரஜினி பால்காரனாக நடித்து புகழ் பெற்றார் . ரஜினிக்கு அடுத்து பால்காரக் கதாநாயகனாக நடித்திருப்பது இவர்தான் . இவரும் ரஜினி போல வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்று அபிஷேகம் செய்தார் கவிஞர் அண்ணாமலை .
பிரிட்டோ பேசும்போது “விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் விழாவில் நான் சொன்னேன் , ‘ விரைவில் விஜய் தமிழ் சினிமாவின் மாபெரும் சக்தியாக வருவார்’ என்று . அதற்கான வீடியோ பதிவு இன்னும் என்னிடம் இருக்கிறது . அதே போல இப்போது சொல்கிறேன். இர்பான் ஒரு பெரிய இடத்துக்கு வருவார் ” என்றார் .

சென்னை வந்தது … படம் முயன்றது .. ஊருக்குப் போய் கல்யாணம் செய்தது .. சென்னைக்கு மீண்டும் மனைவியோடு வந்து சின்ன அறையில் கஷ்டப்பட்டது…. எஸ் ஏ சந்திர சேகரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்தது ..(“அவரு என்னை புரட்டிப் புரட்டி அடிச்சு இருக்காரு ‘) ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் மூலம் டைரக்டர் ஆக வாய்ப்புக் கிடைத்தது … பின்னர் அது முடியாமல் போனது (” சன் டிவி- ராதிகா இருவருக்குமான சண்டையால் நின்னு போச்சு “) கர்ப்பவாதியான மனைவியை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டது (” ரேடான் மூலம் டைரக்டர் ஆகப் போறேன் என்ற நம்பிக்கையில் கர்ப்பம் உண்டாயிருச்சு “) பின்னர் சினேகா பிரிட்டோவுக்கு அசோசியேட் ஆன பிறகு பாங்காங் ஷூட்டிங்காக முதன் முதலில் விமானத்தில் போனது …
— என்று படு விரிவாக பேசிய இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி ” இந்தப் படத்துல ‘உள்ள உள்ள சரக்கு போகுது ‘ன்னு ஒரு பாட்டு வரும் . நானும் எங்க டைரக்டர் எஸ் ஏ சந்திர சேகர் சாரும் பாங்காக்ல ஒரு கிளப்ல உட்காந்து சரக்கு அடிக்கும்போது எனக்கு தோனுச்சு . உடனே நாலு லைனை எழுதி காட்டினேன். அவரு படிச்சுப் பார்த்துட்டு உன் படத்துக்கு வச்சுக்கோன்னு சொல்லிட்டாரு . வச்சுகிட்டேன் ” என்றார் .
அசால்ட்டு !