அனிமேஷன் படமாகும் ‘பொன்னியின் செல்வன்’

IMG_4312

வெள்ளித் திரையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் , இயக்குனர் திலகம் கே எஸ் கோபால கிருஷ்ணன், உலக நாயகன் கமல்ஹாசன் , இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் முயன்று முடியாமல் போன விஷயம் அது.

பிறகு சின்னத்திரையில் அதே விஷயத்தை கே எஸ் கோபால கிருஷ்ணன் , மர்மதேசம் நாகா ஆகியோர் முயன்றார்கள் . நடக்கவில்லை . ஊமை விழிகள் அரவிந்தராஜ் முயன்றார். நடக்கவில்லை.

விர்ச்சுவல் ஸ்டுடயோ நிறுவனம் ஒன்று முயன்றது . அப்புறம் அதுவும் கை விட்டு விட்டது .

இவர்கள் எல்லாம்  முயன்று முடியாமல் போன அந்த விஷயம் …

அமரர் கல்கி எழுதிய – வரலாற்று உண்மைகள் நிறைந்த- காலத்தை வென்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை திரைக்குக் கொண்டு வரும் முயற்சிதான்.

இந்த நிலையில்,  வளமான தமிழகம் என்ற நிறுவனத்துடன் இணைந்து, 5 எலிமெண்ட்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சரவணராஜா,  பொன்னியின் செல்வன் நாவலை 2D அனிமேஷன் படமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் .எம். கார்த்திகேயன் இயக்குகிறார். பி.லெனின் படத்தொகுப்பு செய்கிறார்.

 அனிமேஷன் படங்களின் அசத்தல் தன்மை யோடும் அசல் வரலாற்றுக் கதையின் ஓட்டம் மாறாமலும் 120 நிமிடங்கள் கொண்ட முழுநீள  2D திரைப்படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன் . ஆறு மாதப் பணிகள் முடிந்து விட்டன . இன்னும் இரண்டரை வருடம் தயாரிப்பு வேலைகள் நடந்து 2017 இறுதியில் திரைக்கு வருமாம் இந்தப் படம் .

IMG_4410

ஆறுமாதப் பணிகளில் என்ன செய்திருக்கிறோம்  என்று காட்டுவதற்காக நடந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில்,  படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ். பெற்றுக் கொண்டார்.. உடன் சிறப்பு விருந்தினர்களாக கல்யாண மாலை மோகன் மற்றும் கார்ட்டூனிஸ்ட் – பத்திரிக்கையாளர் மதன்.

அழகான வண்ணமயமான முன்னோட்டத்தில் வந்தியத் தேவன்  வாள் சண்டை போடுகிறார். குந்தவை , வானதி வருகிறார்கள் . கண்ணையும் கருத்தையும் கவர்கிறது முன்னோட்டம்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சரவணராஜா ” இங்கே வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் நான் அழைத்த போது,  ‘குறிப்பாக எங்களை அழைப்பதற்காக காரணம் என்ன?’ என்று கேட்டனர். ‘எல்லாருக்குமே உரிய தகுதியும் தொடர்பும் இருப்பதால்தான் அழைத்து இருக்கிறேன் என்ற காரணத்தை நான் கூறியதும் மகிழ்ச்சியுடன் வர ஒப்புக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் திரைப்படம்,அனிமேஷன், வரலாறு என்கிற வகையில் இவ்விழாவுடன் தொடர்பு உடையவர்கள்தான்.  இத்திரைப்படம் டிஸ்னி ,Pixar நிறுவனத் தயாரிப்புகளுக்கு இணையாக சுமார் 20 கோடி தயாரிப்புச்  செலவில் உருவாகிறது.

IMG_4363

அனிமேஷன்  படக்குழுவில் 150 பேர் பணிபுரிகிறார்கள் ‘பொன்னியின் செல்வன்’  அனிமேஷன்   படம் திரைப்படத்துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்

 இதன் தரம் பற்றிய பலருக்கும் சந்தேகங்கள் வரலாம். வரும்.  அதற்கு பதில் அளிப்பது போல தரத்தைக் காட்ட அவ்வப்போது  இன்னும் 2,.3 முன்னோட்டத்தை வெளியிடவுள்ளோம்.”என்றார்.

கல்யாண மாலை மோகன் பேசும் போது ” பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்ககிறோம் என்று சொன்னால் ‘இது  பழைய கதையாச்சே என்பார்கள். நமது பழைய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிப் புரிய வைப்பது  நம் கடமையல்லவா?

IMG_4383

இம் முயற்சியின் மூலம் பொன்னியின் செல்லவனை அடுத்த தலைமுறை சமூகத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள். இதில் இலக்கையும் தாண்டி வெற்றிபெற வாழ்த்துகிறேன். “என்றார்.

 இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தனது பேச்சில்  ” முன்னோட்டம் மிக அருமையாக இருக்கிறது. லைட்டிங் அருமை. குதிரை போவதை லோ ஆங்கிளில் காட்டும்படியான ஷாட்கள் அருமை . இந்தத் தரம் படத்திலும் தொடர வேண்டும் .

பொன்னியின் செல்வனை திரைக்குக் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. எம் ஜி ஆரே முயன்ற விஷயம் அது. இந்த  அனிமேஷன் முயற்சி வரலாற்றில் முக்கிய நிகழ்வு. நானும் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனிமேஷன் என்று ஈடுபட்டு பைத்தியமாகத் திரிந்தவன்தான்.
 
சோழர்கால வரலாறு மிகப் பெரியது. பேராசிரியர் அ.சா. ஞானசம்பந்தன் ஒரு தகவலைக் கூறினார் ஆச்சரியப்பட்டேன். சோழர்களின் கப்பல்படை பெரியது. இப்போதாவது திசைகாட்ட கருவி உள்ளது. அப்போது திசையை அறிய என்ன செய்வது ? அவர்கள் திசை அறிய  தேவாங்கை பயன்படுத்தினார்களாம்.

IMG_4393

(தேவாங்கு  இரவில் இரை தேடும் ஒரு சிறு விலங்கு. இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும்  உள்ள மழைக் காடுகளின் மரங்களிடையே வாழ்கின்றன.  7 முதல் 10 அங்குல  நீளமும் 85கிராம் முதல் 350 கிராம்  எடையுமே உள்ள சிறு விலங்கு.  பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும்)

தேவாங்கு எப்போதும் மேற்கு நோக்கியே பார்க்குமாம். பிறந்த குட்டியும்கூட மேற்கு நோக்கியே பார்க்குமாம் அதை வளர்த்து கப்பலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன ஒரு விஞ்ஞான நுணுக்கம் பாருங்கள்.

அப்படிப்பட்ட  நம் தமிழர்களின் முக்கிய அடையாளமான சோழர்களின் பெருமையை சொல்லும் பொன்னியின் செல்வன் நாவல் 2D படமாக உருவாகும் இந்த முயற்சியில்,  என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன்.”என்றார்.

பிரபல கார்ட்டூனிஸ்டும் எழுத்தாளருமான மதன் பேசும்போது ” படம் எடுப்பதே சவால். ஒழுங்கான அனிமேஷன் படம் எடுப்பது அதை விட பெரிய சவால். அதுவும் பொன்னியின் செல்வனை அனிமேஷன் படமாக பிரமாண்டமாக எடுப்பது அதைவிட பெரிய சவால். இது எல்லாமே மிகப்பெரிய விஷயம்.

அதனால்தான்  இதைத் தயாரிக்கும் சரவணராஜா எனக்கு வந்தியத்தேவனைப்போலவே பெரிய வீரனாகத் தெரிகிறார்.

இந்த பொன்னியின் செல்வன் 2D பட முயற்சி காலத்தின் கட்டாயம். எவரெஸ்ட்டில் ஏறிய எட்மண்ட் ஹிலாரியிடம் ‘எவரெஸ்டில் ஏறியது ஏன்/’ என்று கேட்டபோது  ‘அப்படி ஒரு சிகரம் இருந்தது. அதனால் ஏறினேன்’ என்றாராம்.  நம்மகிட்டயும் பொன்னியின் செல்வன் என்ற எவரெஸ்ட் இருக்கு. யாராவது ஏறனும் இல்லியா ? 

இந்தப் படத்தின் மூலம் இனி பொன்னியின் செல்வன் நாவலும் சாகாவரம் பெறும். படத்தைப் பார்ப்பவர்கள் அடுத்து முழுமையான அனுபவத்துக்காக நாவலையும் வாங்கிப் படிப்பார்கள்.

IMG_4394

சுமார் 2500 பக்கங்கள் கொண்ட இக்கதையை 10 க்கும் மேற்பட்ட தடவைகள்  படித்தவர்களே பல ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே தான்தான் பொன்னியின் செல்வனுக்கு அத்தாரிடி என்பது போல் பேசுவார்கள். அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டி வரும்.

முயன்று அனிமேஷனில் வந்தியத் தேவனுக்கு ஒரு உருவம் கொடுத்து இருக்கிறீர்கள்.. ‘ தாடைக்கு மேலே உள்ள தாடி ‘ எண்பது நுணுக்கமான விசயங்களில் இருந்து ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் இருந்து ரியாக்ஷன்  வரும் . அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

இப்படி சின்ன விஷயம் மட்டுமல்ல… இதில் வரும் ஆழ்வார்க்கடியான் பாத்திரம் நெற்றியில் போட்டுள்ள  நாமம் வடகலையா? தென்கலையா? என்கிற சர்ச்சை கூட உண்டாகலாம்.  அதனால் தமிழகத்தில் ஒரு கலவரமே கூட  நடக்கலாம்.

 ஏற்கெனவே காஞ்சிபுரம் கோவில் யானைக்கு நாமம் போடும்போது வடகலை நாமம் போடுவதா ? தென்கலை நாமம் போடுவதா? என்பது  சர்ச்சையாகி உச்சநீதி மன்றம் வரை போய் முடிவு செய்து கொண்டு வந்தார்கள் . அப்படி இருக்க,  இந்த பட விசயத்தில் என்னென்ன விவகாரம் வருமோ ?

இந்த பட முயற்சி , தஞ்சைப் பெரிய கோவில் கட்டியதைப் போல பெரிய வேலை. சரியாகக் கட்டி முடிக்க வேண்டும். “என்று கூறி வாழ்த்தினார்.

இறுதியாகப் பேசிய ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

IMG_4401

” பொன்னியின் செல்வன் கதையின்  முதல் அத்தியாயமே ஆடி18-ல்ஆடிப்பெருக்கு அன்றுதான்    தொடங்கும். அந்தக் காலத்தில் ஆடி மாதம் என்பது மங்களகரமான மாதமாகத்தான் இருந்தது.

பின்னர்தான் ஆடி மாதம் பீடை மாதம் என்றானது. சமஸ்கிருதத்தில் அதை  ஜேஸ்டா மாதம் என்று சொன்னார்கள்  8ஆம் நூற்றாண்டு வரை   மங்கல மாதமாகவே கருதப்பட்ட ஆடி மாதம் 9ஆம், 10ஆம் நூற்றாண்டில் பீடை மாதம் என்று மாற்றப்பட்டது.

பெருத்த வயிறும் அகட்டிய கால்களோடும் ஒரு கர்ப்பணிப் பெண்ணின் கோலத்தில் இருந்த– ஜேஸ்டாதேவி என்று வணங்கப்பட்ட – வழிபாட்டுத் தெய்வம் கோவில் கருவறையில் இருந்து வெளிப்படுத்தப் பட்டது. அவளது இளைய சகோதரியான லட்சுமி வழிபடப் படுவது துவங்கியது

சோழர் சாம்ராஜ்யம் பிரமாண்டமானது. 846முதல் 1279வரை என்று,  தொடர்ந்து 433 ஆண்டுகள் ஆண்ட ஒரே வம்சம் உலகத்திலேயே சோழ வம்சம்தான். (உண்மையில் இது பிற்காலச் சோழர்களின் காலம்தான் . கரிகால் சோழன் முதலிய முற்காலச் சோழர்களின் காலத்தையும் சேர்த்தால் , கால அளவு இன்னும் நீளும் இல்லையா ராஜேந்திரன் சார் ?)

உலகில் தமிழ்நாட்டை காட்சிப்படுத்த சோழர் காலத்தைக் காட்டலாம். பழமை ,நிர்வாகம், கலை, வீரம் ஆட்சி, கட்டடக் கலை, இலக்கியம் எல்லாமும் நிறைந்தது சோழர் காலம்.  தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது பற்றிய கல்வெட்டில் ‘இஃது யாம் எழுப்பிய கற்றளி” (நான் எழுப்பிய கோவில் என்று பொருள்)’ என்கிறான் ராஜராஜன். காரணம் வருங்கால மக்கள் பற்றி அவனுக்கு இருந்த அறிவுதான்.
 IMG_4374

ராஜராஜனால் கட்டப்பட்ட  கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் பற்றி   பல இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ராஜராஜன் சரியான நிர்வாகி. ராஜராஜன் வரலாற்று அறிவு நிறைந்தவன். எனவேதான் எல்லாவற்றையும் சரியாகப் பதிவு செய்து இருக்கிறான். இது தொடர்பாக ஏராளமான செப்பேடுகள் உள்ளன.

ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளன. ராஜ ராஜ சோழன் மகனான பேரரரசன் ராஜேந்திர சோழன் காலத்து  கரந்தை செப்பேடுகள் 56 ,திருவாலங்காடு செப்பேடுகள் சுமார் நூறு ,திருச்செங்கோடு செப்பேடுகள் 8 என பல உண்மைப் பதிவுகள் உள்ளன.

அந்த வரலாற்று உண்மைகளை படித்து அவற்றை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வனை அழகாகப் படைத்தார், கல்கி .

‘கதையில் வரும் ஆழ்வார்க்கடியான் இட்டுள்ள நாமம் வடகலையா? தென்கலையா?’ என மதன் கேள்வி எழுப்பினார். என்னைக் கேட்டால் தென்கலையே போடலாம் என்பேன். ஏனென்றால் ஆழ்வார்க்கடியானின் குருவான அனிருத்தப் பிரம்மராயர் திருச்சி அருகில உள்ள அன்பில் என்ற ஊரைச்  சேர்ந்தவர்.

அநிருத்தப் பிரம்மராயரின்  தாயார் தங்கத்தட்டில் வைக்கும் உணவைத்தான் ஸ்ரீரங்கத்துப் பெருமாள் சாப்பிடுவாராம் .

பெருமாளுக்கு உணவு படைக்கப்பட்டது அறிந்த பிறகே அந்த அம்மையார் உணவு உண்பாராம் . அனிருத்த பிரம்மராயர் தென்கலை. எனவே அவரது சீடன் ஆழ்வார்க்கடியானும் தென்கலையாகத்தான்  இருக்க முடியும்

IMG_4386இங்கே இயக்குனர் ஜனநாதன் வந்துள்ளார். அவர் வந்தது மிகவும் பொருத்தமே .ஏனென்றால் ராஜராஜனின் 15 பட்டப் பெயர்களில் ஜனநாதனும் ஒன்று.

மதுரை சோழவந்தான் அருகே ஜனகை மாரியம்மன் கோவில் உள்ளது.  ஜனநாத மங்கலம் என்ற சொல்தான் ஜனகை என்று ஆனது.

குமுளி எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும் ராஜராஜ சோழன்  கட்டியதுதான் .

இப்போது அது கேரளா எல்லைக்குள் போய்விட்டதால்  வருடம் ஒரு முறை அங்கு நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு  ஏதோ பாகிஸ்தான் எல்லைக்குள் போவது  போலத்தான்  தமிழர்கள் பதற்றத்துடன் போய் வழிபட வேண்டியிருக்கிறது. மலையாளிகள் 1 லிட்டர் ,2 லிட்டர் தண்ணீர் பாட்டில் கூட கொண்டு போக முடியாதபடி கெடுபிடிகள் செய்கிறார்கள்.

போரில் தோற்றவர்களைக் கேவலப் படுத்துவது அன்றைய புராணத்தில் வரும் கேரள மன்னன் பரசுராமனின்  பழக்கம் . அன்றைய புராண பரசுராமன் முதல் இன்றைய நிஜ  மலையாளிகள் வரை மற்றவர்களைக் கேவலப்படுத்துவது  அவர்களின் குணமாகத் தொடர்கிறது.” என்றார் .

பொன்னியின் செல்வன் 2D படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவே இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தால்…

 படம் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் ? வாழ்த்துக்கள் .

எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் ? கவனம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →