ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டைன்மென்ட் சார்பில் ராணி, ஷர்மிளா தேவி, வனிதா, புகழேந்தி ஆகியோர் தயாரிக்க, சந்தோஷ் சரவணன், விதுஷ், மனிஷா, மீனா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, மனோபாலா, நெல்லை சிவா, போண்டா மணி நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஞான ஆரோக்கிய ராஜா இயக்கி இருக்கும் படம்.
கிராமத்தில் அத்தை மகன் மீது முறைப்பொண்ணுக்கு சிறு வயது முதலே காதல். ஆனால் பள்ளியில் படிக்கும்போது, அவன் வேறொரு பெண்ணை காதலிக்கிறான். அதே நேரம் அவனை இன்னொரு ஒரு பெண் காதலிக்கிறாள்.
உடன் படிக்கும் மாணவி ஒருத்தியின் மைனர் வயதுத் திருமணத்தை இவர்கள் நிறுத்த முயல, பெண்ணின் அம்மா, ” ஏன் படிக்கிற காலத்துல லவ்வுன்னு எவன் கூடவாவது இழுத்துட்டுப் போகவா?” என்று கேட்க, அவன் காதலிக்கும் பெண் அந்த அம்மாவிடம் , ” நாங்கள் காதலிக்கப் பள்ளிக்கு வர வில்லை. படித்து முன்னேறுவோம் ” என்று சொல்ல, அவன் காதல் முறிகிறது . அவனைக் காதலிக்கும் பெண்ணும் தனது மனதை மாற்றிக் கொள்கிறாள்.
பல வருடங்களுக்குப் பிறகு அவனைத் திருமணம் செய்து கொள்ள முறைப்பெண் விரும்ப, பெற்றோரும் விரும்ப, அவன் மறுக்க, அப்போதுதான் அவனுக்கு இடையில் வந்த இன்னொரு காதல் அவர்களுக்குத் தெரிகிறது.
எப்போதும் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அவன் காதலிக்க, அவளிடம் அவன் பேச, அவளும் யாரும் இல்லாத போது வீட்டுக்குள் வரச் சொல்கிறாள். உள்ளே போனால் அவள் சக்கர நாற்காலியில் வருகிறாள். அதிர்ந்து போகும் அவன் , ஊனமுற்ற பெண்ணைக் காதலிக்க முடியாது என்று கிளம்ப , சட்டென்று அவள் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நிற்கிறாள் .”உடல் பார்த்துக் காதலிக்கும் உங்களிடம் இருந்தது காதலா /” என்று அவள் கேட்க , அவன் கூனிக் குறுகிப் போகிறான் .
இந்த நிலையில் ஒரு நாள் சாலையில் வண்டியில் வரும் அவளை இவன் அழைக்க , அவன் கவனம் தவற, விபத்தில் சிக்கி நிஜமாகவே கால் ஊனம் ஆகிறாள். அவளை திருமணம் செய்து கொள்ள இவன் முடிவு செய்கிறான்.
இதை அறிந்த மாமன், தன் பெண்ணை இவன் மணக்க மறுக்கும் கோபத்தில் அடித்து விரட்டி விடுகிறான் .
கால் ஊனமுற்ற காதலியை மணந்து எங்கோ ஓர் இடத்தில் கூலி வேலை செய்து பிழைக்கும் அவர்கள் வறுமை, மற்றும் அவமானம் தாளாமல் தற்கொலை முடிவு எடுக்க,
நடந்தது என்ன என்பதே படம்
எடுத்த உடன் சிறு வயதுக் காதல், அடுத்து பள்ளிப் பருவக் காதல் , அப்புறம் ஒரு காதல் , என்று பல கதைகள் வருவது தப்பில்லை. ஆனால் ஒன்றுக்கு ஒன்று இணைப்பு சரியாக இல்லாததால், படத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த கேரக்டர்கள் அப்புறம் வராமலே போவதால் , வேறு வேறு படங்களின் கலவையை பார்க்கிறோமோ என்ற உணர்வு வருகிறது .
இது தவிர வாத்தியார் ( மனோபாலா) – வாத்தியாரினி (தேவதர்ஷினி) காதல் பிளாஷ்பேக் மற்ற ஒரு படத்தின் பகுதி போல இருக்கிறது .
மிக தைரியமாக மனோபாலாவை அதே தோற்றத்தில் பள்ளி மாணவனாக நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.
கடைசி காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்ட டிராமா .
ஒயினில் ஊற வைத்த பன் மாதிரி இருக்கும் கதாநாயகி, சாப்பாடு கூட இல்லாமல் வறுமையில் கஷ்டப்படுகிறார் என்பது நம்பும்படி இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும் …
ஜஸ்ட் யாரோ ஒருவருக்கு நடக்கும் சம்பவத்தால் மூன்று பேரின் காதல் மலராமலே கருகுவது….
கதாநாயகி ஊனமுற்றவராக நடிப்பது, அதற்கான நியாயமான காரணம் , அவர் உண்மையிலேயே ஊனமுற்றவராவது அடுத்து வரும் சில திருப்பங்கள்
இவை அட என்று ஆச்சரியப்படும் படியாகவும் பாரட்டும்படியும் இருக்கின்றன.
ஜோவின் ஒளிப்பதிவும் அரவிந்த் ஸ்ரீராம் ஈஸ்வர் ஆனந்தின் இசையும் பரவாயில்லை ரகம்.
பெரிய பெரிய ஹீரோக்களே டாஸ்மாக் பாட்டில் நடித்து ரசிகர்களை மேலும் மேலும் மதுக் கடைக்கு அனுப்பும் சமூக சேவையை செய்யும் போது, இந்த சின்ன படத்தில் ஹீரோ மது புகைப் பழக்கத்திற்கு எதிராகப் பேசுவது போற்றுதலுக்கு உரிய விஷயம்.
எதிர்ப்பார்ப்பு இல்லாத இடத்தில் கிடைக்கும் ஆச்சர்யங்கள் சந்தோசம் தரும் அல்லவா? அப்படி எதிர்பார்ப்பு இன்றிப் போனால் படமாக்கல் உள்ளிட்ட பல குறைகளையும் மீறி சுவாரஸ்யமாக இருக்கும் இந்தப் படம்