‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம், சுமார் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கும்படியான சிறுகதைகளை எழுதி அவற்றுக்கு சிம்கார்டு சிறுகதைகள் என்று பெயரும் வைத்து,
‘பூனை மீசை’ என்கிற பெயரில் சிறுகதை தொகுப்பு நூலாக உருவாக்க , அதன் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட்டார். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சுப்பிரமணிய சிவா ஒவ்வொரு கதையையும் விமர்சனம் செய்து விரிவாகப் பேசியதோடு
“பூனை மீசை என்ற பெயருக்குப் பொருத்தமாக, இவர்கள் மீசை விறைத்துப் பார்க்கும் பூனையின் படத்தை, அட்டையில் போட்டுள்ளனர் .
ஆனால் ஆண்களுக்கு முதன் முதலில் மீசை முளைப்பதை உணரும் தருணம் என்பது மறக்க முடியாத அனுபவம் . அதை பூனை மீசை என்று சொல்வார்கள்.
அந்த வகையில் , ஸ்ரீராம் தன்னை முதன் முதலாக சிறுகதை எழுத்தாளராக உணர்ந்து உருவாக்கி இருக்கும் இந்த நூலுக்கு பூனை மீசை என்ற பெயர் மிகவும் பொருத்தம் ” என்றது, அசத்தல் சிந்தனை .
பாஸ்கர் சக்தி பேசும்போது ” இவர் கதையின் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி உள்ளார் .
ஆனால் பல சிறப்பான கதைகளை டீட்டெயில் செய்யாமல் எழுதி இருப்பது என்பது அந்த கதைக்கான துரோகம் போலவே இருக்கிறது . அடுத்து இவர் எழுதும்போது டீட்டெயில் செய்து எழுத வேண்டும் ” என்றார்
நடிகை உமா பத்மநாபன்
” வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் . படிப்பது கொடுக்கும் இனிய உணர்வு அளவில்லாதது. இப்போது அந்த பழக்கமே இல்லாமல் போவது நமக்கெல்லாம் பெரிய இழப்பு .
இந்த நிலையில் யாராவது ஒருவர் எழுதுகிறார் என்றால் அவரை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது . எனவே நான் இங்கே ஒரு வாசகியாக அவரை வாழ்த்த வந்தேன் ” என்றது சிறப்பு .
நீண்ட நெடிய அனுபவம் மிக்க பத்திரிக்கையாளரான மக்கள் குரல் ராம்ஜி பேசும்போது ” எஸ் பி முத்துராமன் இயக்கிய முதல் படத்துக்கு விமர்சனம் எழுதியவன் நான் . இது நாள் வரை என் பணி தொடர்கிறது .
இங்கே அமர்ந்திருக்கும் பாக்யராஜின் சினிமாத் திறமை மீது புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை எல்லாம் நேரில் பார்த்து வியந்தவன் நான் .
இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதி இருக்கும் ஸ்ரீராம் மிகச் சிறந்த திறமைசாலி . நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு அற்புதமான கதைகளாக எழுதி இருக்கிறார் .
அவர் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிகள் பெறுவார் என்பது உறுதி” என்று மனமார வாழ்த்தினார்.
பேராசிரியர் நடிகர் வி.எம். ரவிராஜ், நடிகர் லொள்ளுசபா ஜீவா,டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் வாழ்த்திய பிறகு சிறப்புரையாற்றிய இயக்குனர் கே.பாக்யராஜ், மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
அவர் பேசும் போது ,
“இந்த ஸ்ரீராம் ‘டூ’ படத்தை முதலில் இயக்கினார். அடுத்த படம் ‘மாப்பிள்ளை விநாயகர்’ வெளிவரத் தாமதம் ஆனது. ஆனாலும் சோர்ந்து சும்மா இருக்காமல்,
இருக்கிற இடைவெளியில் ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த நூலை எழுதியிருக்கிறார். அவருக்கு நம்பிக்கை வைத்து ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும் ஸ்ரீராமின் பெற்றோரைப் பாராட்டுகிறேன்.
பொதுவாக சினிமாவுக்கு வருகிறோம் என்றால் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்’ ‘சினிமாவுக்குப் போக வேண்டாம் உருப்படுற வழியைப் பாரு’ என்றுதான் சொல்வார்கள்.
சினிமா என்பது ஒரு வழிப்பாதை; வந்தால் திரும்ப முடியாது. எங்கள் ஊரில் ஒருவர் சுருள் முடியோடு அலைவார். ஊரில் எல்லாரும் ,அவரை ,ஜெமினி ஜெமினி என்று கிண்டல் செய்வார்கள்.
அவர் ஒருமுறை சென்னை வந்து நடிக்க வாய்ப்புக்கு அலைந்து தோல்வியடைந்து திரும்பியதுதான் காரணம்.
நான் சில ஆண்டுகள் இங்கு அலைந்து விட்டு ஊரில் போய் சில மாதம் தங்கினால் என்னை எல்லாரும் விக்கிரமாதித்தன் வந்துட்டாருப்பா என்று கேலி பேசுவார்கள்.
விக்கிரமாதித்தன் என்றால் நாடாறு மாதம் காடாறு மாதம் என்று இருப்பவனாம் .இப்படி நிறைய கேலி பேசி வேதனைப் படுத்துவார்கள், அது பெரிய கொடுமை.
ஸ்ரீராமுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைத்து இருக்கிறது .அவர் கொடுத்து வைத்தவர்.
என்னை சினிமாவுக்கு அனுப்ப அம்மாவைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை,யாரும் என்னை நம்ப வில்லை. என்னை எங்கள் ஒர்க் ஷாப்பில் போட்டு விடலாம் என்று,
என் அண்ணன், சித்தப்பா, மாமா என எல்லா உறவினரும் பாடாய்ப் படுத்தினார்கள்..
பெரிய ஜோதிடர் ஒருவர் பிரபலமாக இருந்தார். ‘அவரிடம் ஜோதிடம் பார்ப்போம் அவர் ஒகே சொன்னால் நீ சினிமாவுக்கு போகலாம்’ என்றார்கள்.
வந்தவர் ‘இவருக்கு சினிமா சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தமான தொழில் என்றால் ஜெயிப்பார்’ என்றார். இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை.
வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் மட்டும் “சினிமாவும் இரும்புதாம்மா , கேமரா, டிராலி, டிராக் எல்லாமே இரும்புதாம்மா வாழ்க்கை என்பது ஒரு முறை.
அதை நினைக்கிற மாதிரி வாழ்ந்து விட்டுப் போகிறேன் ” என்று அம்மாவைச் சமாதானப்படுத்தி விட்டு விடியற்காலையில் 3.30 க்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்னை வந்தேன்.
அம்மா மட்டும்தான் என்னை நம்பி ஆசீர்வதித்து அனுப்பினார்.
அதேபோல் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் சுதாகரை மொட்டையடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலம் வருவது போல காட்சி வரும். அப்போது கழுதையை இழுத்துச் செல்கிற மாதிரி டைரக்டர் என்னை நடிக்க வைத்தார்.
படம் வெளியான போது. எங்க ஊரில் நான் கழுதையை இழுத்துச் செல்கிற மாதிரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. என் அம்மாவைப் பார்த்து ‘உன் மகன் கழுதையை பிடிக்கவா மெட்ராஸ் போனான்? ‘என்று,
எல்லாரும் கேலி பேசியிருக்கிறார்கள். அம்மா என்னிடம் கேட்டார். ‘ஏப்பா நீ அந்த சுதாகர் வேஷத்துல நடிச்சிருக்கலாமே’என்று அதுக்கு மூக்கு முழி நல்லா இருக்கணும் நல்ல நிறம் வேணும்மா என்றேன்.
உன்னையும் அதுமாதிரி ஒருநாள் ஹீரோவா உங்க டைரக்டரே நடிக்க வைப்பாருப்பா’ என்றார். அதுபோலவே ‘புதியவார்ப்புகள்’ படத்தில் நடிக்க வைத்தார். நான் எவ்வளவோ தயங்கியும் நடிக்க வைத்தார்.
ஊரே நம்பா விட்டாலும் என்னை என் அம்மா நம்பினார். அதுபோல ஸ்ரீராமுக்குப் பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருக்கிறது.இவர் இனி ‘டூ’ ஸ்ரீராம் என்கிற பெயரை மாற்றி,
ஜெய் ஸ்ரீராம் என்று வைத்துக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கு ‘டூ’ விடக் கூடாது பழம் விட வேண்டும். ” என்று வாழ்த்தினார்.
ஏற்புரையாற்றிய இயக்குனர் ஸ்ரீராம் ” மாப்பிள்ளை விநாயகர் படம் விரைவில் வரும் . இடையில் இரண்டு படங்களுக்கு வசனம எழுதி உள்ளேன் . அடுத்து படம்தான் .
மீண்டும் கதைகள் எழுதுவேனா தெரியவில்லை . அப்படி எழுதினால் பாஸ்கர் சக்தி சொன்ன அறிவுரையை கவனத்தில் கொள்வேன்.
எல்லாருக்கும் சினிமா கோடம்பாக்கம் என்றால் எனக்கு ஒரு ஸ்டாப் தள்ளி நுங்கம்பாக்கம்தான். எனது சினிமா என்பது அங்கு இருக்கும் பாக்யராஜ் சாரை வைத்துதான் . அவர் வந்து வாழ்த்தியது பெரும்பேறு .
மற்ற அனைவருக்கும் நன்றிகள் ” என்றார் .
நடிகர் ஸ்ரீதர் மிக சிறப்பான வார்த்தைகளால் நிகழ்ச்சியை மிக அழகாகத் தொகுத்து வழங்கினார்