டி சீரிஸ், கெட் அவே பிக்சர்ஸ், ரோக்ஸ் மீடியா சார்பில், பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்ஸ் ஆகியோர் தயாரிக்க, அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி ஜே பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரொசாரியோ நடிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கி இருக்கும் படம்.
சிறு வயது பள்ளியில் சீனியர் ஜூனியர் நண்பர்களாக இருந்த இருவரில், ஜூனியரை அழைத்து வரச் சொல்லி சீனியரிடம் சக சீனியர் நண்பர்கள் சொல்ல,
என்னவென்று புரியாமல் சீனியர் அழைத்துப் போக, அங்கே ஜூனியர் மாணவனை மற்ற சீனியர்கள் ரேக்கிங் என்ற பெயரில் கொடுமை செய்ய, அதைத்தடுக்க முயலாமல் சீனியர் விழிக்க, ஜூனியர் நண்பன் சீனியர் மேல் பகையாகிறான் .
வளர்ந்து கல்லூரி வந்த பின்னும் அந்த ஜூனியர் இளைஞனுக்கு ( காளிதாஸ் ஜெயராம் ) சீனியர் மேல் (அர்ஜுன் தாஸ்) உள்ள வன்மம் குறையவில்லை,
மாணவர்களுக்காக போராடும் ஒரு மாணவன் செத்துப் போன நிலையில் அவன் தங்கை (சஞ்சனா) சீனியரின் குழுவில் இருக்கிறாள் . தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு மாணவி (டி ஜே பானு) மீது சீனியருக்கு காதல் .
ஆனால் அவனைச் சுற்றி உள்ள பெண்கள் எல்லாரையும் வீழ்த்த நினைக்கிறான் ஜூனியர் . சீனியரின் தங்கையை காதல் வலையில் வீழ்த்துகிறான்
முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் குடும்பத்தால் நடத்தப்படும் அந்தக் கல்லூரியில் அவரது மகளும் (அம்ருதா சீனிவாசன்) படிக்கிறாள் . அவளுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் ஓரினக் காதல் .
ஒரு பிரச்னை காரணமாக அந்த இன்னொரு பெண்ணை கல்லூரி டிரஸ்டி அரசியல்வாதியின் ஆட்கள் கொடுமை செய்ய, அவளுக்கு தாழ்த்தப்பட்டோர் பிரச்னைக்காக போராடும் பெண் உதவ , பிரச்னை பெரிதாகிறது .
காதலனை மாற்றிய ஒரு ஒரு பெண்ணை , முன்னால் காதலன் கொடுமை செய்ய, அவனுக்கு ஜூனியர் சப்போர்ட் செய்ய , ஜூனியரின் காதலி ஜூனியரோடு முரண் பட, புதிய காதலனை முன்னால் காதலன் அடிக்க, அடி வாங்கிய புதிய காதலன் சீனியரின் உதவியை நாட ,
அதுவரை ஜூனியர் சீண்டியும் சண்டை வேண்டாம் என்று ஒதுங்கிப் போன சீனியர் பொறுமை இழக்க, இருவருக்கும் நடக்கும் போர் இரு தாப்புக்கும் நடக்கும் போராக மாறி , கல்லூரிக் கலவரம் ஆக, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்.
பிஜாய் நம்பியாரின் படமாக்கல் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருக்கிறது . ஷாட்கள், பிரேம்கள், நடிப்போரின் பொசிஷன்கள் யாவும் தரமோ தரம் .
சஞ்சித், துருவ், கவுரவ் மற்றும் பலரின் இசை, ஜிம்ஷி காலித், ப்ரெஸ்லி ஆஸ்கர் டிஸௌசா ஆகியோரின் ஒளிப்பதிவு, ப்ரியன்க் பிரேம் குமாரின் படத் தொகுப்பு ஆகியவை டெக்னிக்கலாக சிறப்பு
மணி மொழியன் ராமதுரையின் கலை இயக்கம் படத்துக்கு வேறொரு இமேஜ் தருகிறது. டான் வின்சென்டின் ஒலி வடிவமைப்பும் நேர்த்தி .
சில ரசிக்க வைக்கும் வசனங்கள் உண்டு
அர்ஜுன் தாஸ் அமர்த்தலாக நடிக்க, காளிதாஸ் பட்டாசாக வெடிக்க, இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் .
பிறந்தது முதலே டயட்டில் இருப்பது போன்ற உடல்வாகு, வித்தியாசமான உடல் மொழிகள், தோற்றம், வடிவமைப்பு , குரல்கள் கொண்ட பெண்களாக படத்தில் வரும் நடிகைகள் இருக்கிறார்கள் . அது வித்தியாசமாக இருக்கிறது. பைக்கில் வேகமாகப் போகும்போது ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது . சீரோ சைசில் இருந்தால் கூடப் பரவாயில்லை, எல்லோரும் மைனஸ் சைசில் இருக்கிறார்கள் . ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் பார்த்தால் ஊட்டச் சத்துக் குறைபாட்டுக்கான பயனாளிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள்
படத்தின்காட்சி அமைப்புகள் நம்மை வேறு உலகத்துக்குக் கொண்டு போகின்றன
திரைக்கதைதான் படம் பார்ப்பவரை புரட்டிப் புரட்டி அடிக்கிறது . ஏகப்பட்ட விசயங்களை திணித்து எதையும் ஒழுங்காக சொல்லாமல், சீனியர் ஜூனியர் சண்டைக்கான காரணம் அழுத்தமாக இல்லாமல், ஓவர் பில்டப் கொடுத்து உடம்புக்கு ஆகாத கிளைமாக்சில் முடித்து
”வீட்டுக்குப் போகணும்… அம்மா தேடும்….” என்று படம் பார்ப்பவரை கதற விடுகிறார்கள் .
படத்தின் பெயர்தான் பெயர்தான் போர் . ஆனால் படம் என்னவோ ஒரு தேங்காய் மூடிக்கான தள்ளுமுள்ளுதான் .