சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் எல்லாம் அதை ஒரு வேலையாக மதிக்காமல் ஐ டி துறைக்கு போய் மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கும் வேளையில்…….
“ஒவ்வொரு ஊருக்கும் லேண்ட் மார்க்கா இருக்கிற பில்டிங்கை எல்லாம் ஒரு சிவில் எஞ்சினியர்தான் கட்டி இருப்பான் ” என்ற கர்வத்தோடு அந்த வேலையை நேசித்து , ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதவிப் பொறியாளனாக பணியாற்றும் இளைஞன் , (ஹரீஷ் கல்யாண் ) அங்கே நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட அதற்காகக் பாராட்ட வேண்டிய முதலாளியே (ஆடுகளம் நரேன்) பிராக்டிக்கல் என்ற பெயரில் அவனை கண்டிக்கிறார் . கோபப்பட்டு வேலையை விட்டு விட்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க முயல்கிறான் அந்தப் பொறியாளன் .
கடன் வாங்கியவர்கள் பணம் தராவிட்டால் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டுப் பெண்களை சூறையாடும் குணமும் பலமும் கொண்ட ஒரு கொடூரமான கந்து வட்டி தாதாவிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வேலையை செய்தபடி, அடியாளாக இருக்கும் ‘கொஞ்சூண்டு நல்ல ‘ நண்பன் ஒருவன் , தாதா ஜெயிலுக்கும் போன சமயத்தில் அவனது பணத்தை எடுத்து பொறியாளனுக்கு கொடுக்கிறான் . அந்த நண்பனின் ஒண்ணுவிட்ட தங்கைக்கும் (ஹாசிகா) ஹீரோவுக்கும் காதல்.
தாதா ஜெயிலில் இருந்து வருவதற்குள், இடம் வாங்கி அப்பார்ட்மென்ட் கட்டி விற்று, பணம் சம்பாதித்து தாதா கணக்கில் இருந்து எடுத்த பணத்தை ரகசியமாக செட்டில் செய்து விடுவதுதான் பிளான் . அதன்படி தாதாவின் பணத்தில் அபார்ட்மென்ட் கட்ட ஒரு இடம் வாங்க , அந்த இடத்தை அதற்கு முன்பே பலபேருக்கு விற்று இருக்க, பணம் பறிபோகிறது .
இந்நிலையில் ஜெயிலுக்கு போன தாதா ரிலீஸ் ஆக, பணத்துக்கு கணக்கு காட்டாவிட்டால் நண்பனின் கதி அதோகதியாகி விடும். இழந்த பணம் ஹீரோவுக்கு கிடைத்ததா? இல்லையா ? நண்பனை தாதா என்ன செய்தான் ? ஹீரோவின் காதலி மற்றும் சகோதரியை என்ன செய்ய முயன்றான் ? எல்லா பிரச்னைகளிலும் இருந்து ஹீரோ தப்பித்தானா ? இல்லையா /என்பதே பொறியாளன்.
பொறியாளன் என்ற நல்ல தமிழ்ப் பெயருக்காக முதலில் பாராட்டுகள் ! ஹரீஷ் கல்யாண் நன்றாக நடித்து இருக்கிறார் . நண்பனாக வருபவரின் தோற்றம் , உடல் மொழிகள் , குரல் யாவும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அற்புதமாக பொருந்துகிறது.
மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற ‘வானெங்கும் வைர விண்மீன்கள் விழியிமை மூட…’ பாட்டின் மெட்டில் லேசான மாற்றம் செய்து, இந்தப் படத்தில் வந்திருக்கும் ஒரு பாடல் இனிமையாக இருக்கிறது.
வீடு மனை நிலம் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை படம் பார்ப்போருக்கு ‘தம்மாத்துண்டு ‘ ஏற்படுத்துவது மட்டுமே இந்தப் படத்தின் பிளஸ் பாயின்ட் .
தான் பணியாற்றும் நிறுவனத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கூட சரி செய்ய முயன்றும், அதற்காக முதலாளி பாராட்டாமல் கண்டிக்கிறாரே என்பதற்காக வேலையை விட்டு நிற்கும் யோக்கிய சிகாமணி ஹீரோ, தாதாவின் பண ரோட்டேஷனை திருட்டுத்தனமாக பயன்படுத்தி இடம் வாங்க ஒத்துக் கொள்கிறான் என்று சொல்லும்போதே அந்த கேரக்டர் மேல் உள்ள ஈர்ப்பு போய் விடுகிறது.
விளைவு? அவன் ஏமாறும்போது யாரும் பதட்டம் எல்லாம் வரவில்லை .
“கரிகாலன் கட்டிய கல்லணை மாதிரி …பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை மாதிரி ஓர் அணை கட்டணும்” என்று ஆரம்பத்தில் ஹீரோ பேசும்போது வித்தியாசமாக எதோ சொல்லப் போகிறார்கள் என்று ஒரு எண்ணம் ஏற்படுகிறது . பின்னால் அப்படி எதுவும் படத்தில் தேடினாலும் கிடைக்கலயே.
ஏதாவது ஒரு பொது விஷயம் அது தொடர்பான கட்டிடம் அதில் வரும் பிரச்னைகள் என்று கதை பண்ணி இருந்தால் படத்துக்கு, பொது ஜன ஆர்வம் கிடைத்து இருக்கும். மிஸ் பண்ணிட்டாங்க.
படத்தில் நட்பு , காதல் , குடும்ப உறவு செண்டிமெண்ட் , ஆக்சன், ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ் அநியாயங்கள் எல்லாம் இருக்கிறது . ஆனால் எதையும் அழுத்தமாக ஆழமாக உணர்வு பூர்வமாக சொல்லாமல் மேம்போக்காக சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள் .எனவே ஒரு வெற்றிகரமான சினிமாவுக்காக எந்த ஈர்ப்பும் இல்லாமல் டெலி பிலிம் பார்த்த உணர்வையே தருகிறது படம் .
உண்மையில் வெங்கட் ராம் கேரக்டரை நன்றாக வடிவமைத்து இருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும் . ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளில் வசனங்கள் சும்மா அணுகுண்டுகளாக வெடிக்க வேண்டாமா? அடப் போங்க பாஸ் !
ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோவுக்கு வரும் பிரச்னயை அவனே தீர்ப்பதாக சொல்லும் கிளைமாக்ஸ்தான் திருப்தி தரும் . அப்படி இருக்க , திடீரென்று யாரோ சிலர் வந்து பிரச்னையை முடித்து வைக்க, ஹீரோ மர்மமாக வேடிக்கை பார்க்கும் கிளைமாக்சில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ?
பொறியாளன் … டிஸ்கன்டின்யூட் (discontinued)