நிமோ புரடக்ஷன்ஸ் சார்பில் பாலு வெளியிட, ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் எஸ். பரமராஜ் தயாரிக்க, முரளி ராம் , ரக்ஷா, ஜி.எம்.குமார், அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில், மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கி இருக்கும் புதிய படம் தொப்பி .
ஒரு மலைப்பாங்கான கிராமத்தின் பூர்வகுடி மக்களுக்கும் காவல் நிலையம் என்ற பெயரில் இருக்கும் அராஜகக் கொட்டடிக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை மையமாக கொண்டு நெட்டிவிட்டியோடு உருவாக்கி இருக்கும் படம் இது .
கதாநாயகனாக நடித்திருக்கும் முரளி ராம் அடிப்படையில் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார் . கமல்ஹாசனை வைத்து மீண்டும் கோகிலா , மகராசன் போன்ற படங்களை இயக்கிய ஜி என் ரங்கராஜனின் (இவரது மகன்தான் ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி என் ஆர் குமாரவேலன் ) அண்ணனின் மகள் வயிற்றுப் பேரன் இவர் . படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மைனா , கும்கி , சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான சுகுமார் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ், ஜி என் ரங்கராஜன் , அவரது நண்பர் எஸ் பி முத்துராமன் , இன்றைய தலைமுறை இயக்குனர்கள் சீனு ராமசாமி, எழில், இவர்களுடன் நடிகர்கள் விமல், விஜய் சேதுபதி, மன்சூர் அலிகான், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, தயாரிப்பாளர்கள் டி..சிவா, தேனப்பன், கதிரேசன் என்று மேடை நிறைந்து வழிந்தது .
“திறமையும் உழைப்பும் இருந்தால் வெற்றி பெறலாம் ” என்பதை பதினாறு வயதினிலே காலத்து அனுபவங்களோடு ஒப்பிட்டு கே. பாக்யராஜ் பேசிவிட்டுப் போக,
அடுத்தடுத்து பொதுவில் எல்லோரும் படத்தையும் நடிகர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் பாராட்ட , சீனு ராமசாமி பேசும்போது “நாம எடுத்துக்கிட்டு இருக்கற படத்தோட சாங்ஸ் ஹிட் ஆகிருச்சான்னு தெரிஞ்சிக்கறது ஈசி. ஆடியோ ரிலீஸ் ஆனபி றகு சமகால இயக்குனர்கள் யாரும் நமக்கு போனே பண்ண மாட்டாங்க . பேசவே மாட்டாங்க. அப்படின்னா ன்னா அவங்க எல்லாம் நம்ம மேல கோபமா இருக்காங்கன்னு அர்த்தம் . அதாவது நம்ம படத்து பாட்டி ஹிட் ஆனதால அவங்க கோவமா இருக்காங்கன்னு அர்த்தம் ” என்று ரசிக்கும்படி பேசினார்.
மன்சூர் உள்ளிட்ட சிலரும் இப்படியே பேசினாலும் பிரச்னை ‘பவர்’ ஆன் ஆனது, பவர் ஸ்டார் பேச ஆரம்பித்த போதுதான் .
” ஒரு படத்துக்கு நடிக்கணும்னு சொல்லி கூட்டிட்டு போறாங்க . நம்பி போறோம் . கசக்கி புழிஞ்சு வேலை வாங்கறாங்க . கடைசில செக் கொடுத்து ஏமாத்துறாங்க ” என்றவர், அதை நிஜமான வருத்தத்தோடு கூறி “அப்படி செய்யும் நபர்கள் மீது தயாரிப்பாளர் சங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறி இருந்தால், அது தப்பாகப் போயிருக்காது .
மாறாக எள்ளலும் ஏகத்தாளமுமாக பேசிய பவர் ஸ்டார் ” இப்படியெல்லாம் படம் எடுக்கலன்னு யாரு அழுதா ? நானெல்லாம் எவ்வளவோ செக் கொடுத்து சுத்தல்ல விட்டவன் . எனக்கே செக் கொடுத்து ஏமாத்துறாங்க … இனிமே படம் எடுக்க வர்றவங்க தயாரிப்பாளர் யாரா இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்துல வந்து ரெண்டு கோடி ரூபாய் டெபாசிட் கட்டினாத்தான் அவங்கள படம் எடுக்க விடணும். எந்த அடிப்படையில் இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் படம் எடுக்க முடியுது ? இப்பவும் ஏமாத்தணும்னு நானா நினைச்சா ஒரு நிமிஷத்துல ஒரு கோடி ரூபாய் பாத்துருவேன். நான் இப்பதான் நேர்மையா உழைச்சு பொழைக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன் . மறுபடியும் என்னை கெடுத்துட்டுதான் விடுவாங்க போல இருக்கு ” என்று …. ரொம்ப ஓவராகவே பேசினார் .
ரெட் , மாயாவி போன்ற படங்களை இயக்கியவரும் நடிகருமான சிங்கம் புலி , மிகுந்த புத்திசாலித்தனத்தோடு, அதிக தயாரிப்பாளர்கள் இருக்கும் அந்த மேடையின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக பவர் ஸ்டாரை கடுமையாக கண்டித்துப் பேசினார்
” நடிகன் எங்க கஷ்டப்படுறோம்?புரடியூசர்கள் படுற கஷ்டத்துக்கு முன்னால அது ரொம்ப சாதாரணம் . எத்தன புரடியூசர் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிச்சு பேட்டா கூட கொடுக்காம கஷ்டப்படுறாங்க தெரியுமா ? அந்தப் பணத்துக்காக அவங்க எங்க எல்லாம் அலையறாங்க தெரியுமா? முதல் நாள் அவங்க கையில் போட்டிருக்கும் பிரேஸ்லெட் அடுத்து நாள் காணாமப் போய், பேட்டா தர பணமா திரும்ப வரும் தெரியுமா? நம்பிக்கை வச்சு உழைக்கணும் . திறமைய காட்டணும். தயாரிபாளர தப்பா பேசக் கூடாது ” என்றார் .
அட, அதோடாவது பவர் ஸ்டார் விட்டிருக்கலாம் . மீண்டும் போய் மைக்கை பிடித்து “அவங்கதானே வீடு தேடி வந்து நடிக்க அழைச்சுட்டு போறாங்க . நாங்களா நடிக்க வரோம் வரோம்னு சொன்னோம். கெஞ்சி அழைச்சுட்டு போறவங்க காடு ஒழுங்கா தரணும் இல்லியா ? ” என்று ஏழரையை பதினைந்தாக மாற்றிக் கொள்ள ,
அடுத்து பேசிய சிவா ” நாங்கள் பேச வேண்டியதை பேசிய சிங்கம் புலிக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி” என்று கூறிவிட்டு தொடர்ந்து “பணம் போட்டு விட்டு தெருவுக்கு வரும் தயாரிப்பாளர் எத்தனை பேரு தெரியுமா? நடிகர்களை உருவாக்கி விட்டு ஓட்டாண்டியான தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா ? “என்று ஆரமபித்து பவர் ஸ்டாரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு “பவர் ஸ்டாருக்கு இதுவே கடைசி மேடையாக இருக்கட்டும்” என்று கூறி ஒரு சின்ன அமைதிக்கு பிறகு ” … இப்படி பேசுவதற்கான கடைசி மேடையாக…” என்று கூறிவிட்டுப் போனார் .
அடுத்து பேசிய தயாரிப்பாளர் கதிரேசனும் தயாரிப்பாளரை குறை சொல்வது தவறு என்று கூறி பவர் ஸ்டாருக்கு கண்டனத்தை தெரிவித்தார் .
தொடர்ந்து பேசிய தேனப்பன் ” ரெண்டு கோடி ரூபாய் டெபாசிட் கட்டினால்தான் படம் எடுக்க விடணும்னு பவர் ஸ்டார் சொல்றாரு . பவர் ஸ்டார் நல்லா நடிக்கத் தெரியும்னு சர்டிபிகேட் வாங்கிட்டுதான் நடிக்க வந்தாரா ? அப்படி ஒரு ரூல்ஸ் இருந்தா அவரு நடிகர் ஆகி இருப்பாரா?.” என்று ஒரு சூப்பர் கேள்வி கேட்டதோடு, “கமல், அஜித் , விஜய் , விக்ரம்னு எந்த பெரிய ஹீரோவும் தனது முதல் படத் தயாரிப்பாளருக்கு பின்னாளில் படம் கொடுத்தது இல்லை . ஆனால் அதை எல்லாம் பெரிதாக எண்ணாமல் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள் ” என்றார் .
வெடித்து சிதறப்போவது போன்ற இறுக்கமான முகத்துடன் சிவந்து கன்றிப் போய் கடைசி வரை உட்கார்ந்திருந்தார் பவர் ஸ்டார்.
(தயாரிப்பளர்களை பவர் ஸ்டார் கீழ்மையாக பேசியது தொழில் குற்றம் என்றால், இதையே சாக்காக வைத்து தனது தவறுகளை எல்லாம் நியயப்படுத்தும்படியான அவரது பேச்சு ஒரு சமுதாயக் குற்றம் !)
சரி, எப்படி இருக்கிறது தொப்பி?
முன்னோட்டத்தை பார்க்கும்போதே படத்தில் எதிர்பார்ப்பு நிறைந்த கதை இருப்பது புரிகிறது .
பாடல் காட்சிகளில் சுகுமாரின் மந்திரக் கேமரா விருந்து படைக்கிறது . நாயகனும் நாயகியும் இளமைத் துள்ளலோடும் கிராமியத் தன்மையோடும் நடித்து இருக்கிறார்கள். மிளகாய் கடித்து விட்டு கொடுக்கப்படும் இதழ் முத்தம் ஒன்று பாடல் காட்சியில் ரசிக்க வைக்கிறது .