பெயரைக் கேட்டு விட்டு கற்பனைக் குதிரைக்கு கொள்ளு போட்டு வளர்த்து பறக்க விடுவதற்கு முன்பு….. அடுத்த வாக்கியத்தை படித்து விடுங்கள் . இது கதாநாயகன் கதாநாயகி இல்லாத படமாம் . தவிர படத்தில் காதல் காட்சிகளும் இல்லையாம்.
“பெற்றோர்களுக்கு மதிப்பளிக்காத ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதையும் ஆள் பலம் பண பலத்தால் ஆடும் செல்வந்தர்களின் வாழ்க்கை இறுதியில் என்ன ஆகும் என்பதையும் சொல்லும் படம் இது ” என்கிறார் இயக்குனர் எம் ஏ விஜயகுமார்.
படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஐந்து பாடல்களை உருவாக்கி இருக்கிறார்கள் . இவற்றில் “தப்பு செய்தவன் தப்புவதில்லை ஆண்டவன் கட்டளை . இது எவனுக்கும் எட்டலை ” என்ற தத்துவப் பாட்டும் இருக்கிறது . ஒரு அதிரடி கும்மாங் குத்து(வ)ப் பாட்டும் இருக்கிறது.
படத்தின் ஆடியோ விழாவில் எம் ஜிஆர் , டி ஆர் சுந்தரம் , ஏ வி எம் , பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் , ஸ்ரீதர், ஆகியோரின் புகைப்படங்களை போட்டு ‘இந்த மாபெரும் இயக்குனர்களின் பாதம் தொட்டு எங்கள் முதல் படைப்பை அளிக்கிறோம்’ என்ற வாசகங்களுடன் கூடிய பேனர் வைத்து இருந்தார் இயக்குனர்.
“டிஜிட்டல் யுகம் வந்த பிறகு யார் வேண்டுமானலும் உடனே நடிகராக முடிகிறது இயக்குனர் ஆக முடிகிறது .பணக்கார அப்பாக்கள் பையனுக்கு ஆசையாக கார் வாங்கிக் கொடுத்த காலம் போய் பையனின் ஆசைக்காக அவனை ஹீரோவாக போட்டு படம் தயாரிக்க வந்து விட்டார்கள் . இதனால் தரமும் குறைவது வருத்தமான விஷயம்”என்றார் பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத் தலைவர் விஜய முரளி .
படத்தில் நடிக்காத நிலையிலும் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் “வீடு வரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை ரசிகர்கள் என்பதே இனி என் வாழ்க்கை ” என்று ஒரு போடு போட, அரங்கமே அலறியது .