பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் பாகத் பாசில், திலீஷ் போத்தன், ஸ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரிக்க,
நஸ்லென் கே. கஃபூர் , மமிதா பைஜூ , அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்ஷி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் நடிப்பில்
கிரண் ஜோஷியுடன் சேர்ந்து எழுதி கிரிஷ் ஏ டி இயக்கி இருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம் .
பிரேமம் என்ற மலையாளச் சொல்லுக்கு காதல், ஆசை, ஈர்ப்பு , என்று பொருள் . கதை ஹைதராபாத்தில் நடப்பதால் பிரேமலு.
தமிழ்நாடு சேலம் பழநியப்பன் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மலையாள இளைஞன் சச்சின் சந்தோஷ் (நஸ்லென் கே. கஃபூர்) உடன் படிக்கும் மலையாளப் பெண்ணிடம் காதலைச் சொல்ல, அவளோ “வேறொரு ஆளுடன் எனக்கு எல்லாமும் முடிந்து விட்டது” என்று சொல்ல, அவனுக்கு குமட்டுகிறது.
மேல் படிப்புகாக லண்டன் போக முயல , அவனது விசா மறுக்கப்படுகிறது . அடுத்து அப்ளை செய்ய ஆறு மாதம் ஆகும் என்பதால் அதுவரை அப்பாவின் பேக்கரியில் அவன் வேலை செய்ய, ஆர்டர் எடுத்துக் கொண்டு போன இடத்தில் அவனது பழைய நண்பன் அமல் டேவிசை (சங்கீத் பிரதாப்) சந்திக்கிறான் .
தன்னோடு ஹைதராபாத் வந்து GATE தேர்வுக்கு அப்ளை செய்ய நண்பன் சொல்ல, மனம் போன போக்கில் அதற்கும் சம்மதித்து செல்லும் சச்சின், அங்கு உள்ள ஒரு ஐ டி கம்பெனியில் பணிபுரியும் ரீனு ராய் என்ற இளம்பெண்ணை ( மமிதா பைஜூ) சந்திக்கிறான். ரீனுவின் சீனியரான ஆதிக்கு அவள் மீது ஒரு கண் .
அதே ஐ டி கம்பெனியில் பணிபுரியும் ஒருத்தியின் கல்யாணத்துக்காக ஐ டி நிறுவன ஆட்கள் ஆந்திரா கிராமப்புறம் ஒன்றுக்குப் போக, கல்யாண மாப்பிள்ளை அமல் டேவிசின் நண்பன் என்பதால் அமலும் சச்சினும் அதே கல்யாணத்துக்குப் போக, ரீனுவை சச்சினுக்குப் பிடிக்க , அவன் காதலிக்க ஆரம்பிக்க,
அவளது சீனியர் ஆதி அவளை கரெக்ட் செய்ய முயல, அவளை காதலிக்கும் சச்சினை அந்த சீனியர் கேவலமாகப் பார்த்து, கிண்டலாக நடத்த,
சச்சினுக்கும் சீனியருக்கும் போட்டி வர, சச்சினுக்கு நண்பன் அமல் டேவிஸ் உதவ , சச்சினுக்கும் ரீனுவுக்கும் பல விசயங்களில் பொருத்தம் இல்லாத நிலையில்
குழப்பமும் அவ நம்பிக்கையும் இருந்தாலும் நல்லவனான சச்சினின் காதல் என்ன ஆனது என்பதுதான் படம்
எண்பது தொண்ணூறுகளில் எல்லா தமிழ் ஹீரோக்களும் நடித்து பல முறை ஓடிய படங்களின் அதே கதை மட்டுமல்ல திரைக்கதை கூட. அதாவது சட்டை அல்ல… உடலே தமிழ்ப் படம்தான்
உங்களிடம் சரணாகதியாக இருக்கும் ஒரு நண்பன், வேலையாள் , அல்லது நேசிக்கும் நபரை, நீங்கள் தொடர்ந்து புறக்கணித்தால் அல்லது அலட்சியம் செய்தால் , ஒரு நிலையில் அந்த நபர் மனம் வெறுத்து நொந்து தோல்வியை ஒத்துக் கொண்டு விலகும்போது, அதுவரை தள்ளி வைத்த உங்கள் மனதை அது பாதிக்கும். முற்றிலும் மாறான புதிய முடிவை உங்கள் மனம் எடுக்கும்
– என்ற சைக்காலஜியில் அப்படி பல தமிழ்ப் படங்கள் முன்பு வெற்றிகரமாக ஓடி இருக்க, அதே பாணியில் அப்படியே சற்றும் மாற்றம் இல்லாமல் உருவாகி இருக்கிறது பிரேமலு.
இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ற களம் அதற்கேற்ற வசனங்கள் என்று எழுதி இருக்கிறார்கள் .
குறிப்பாக படத்தின் பல காட்சிகளும் வசனங்களும் கூட சாதாரணமானவைதான். முக்கியமாக கிளைமாக்ஸ் சமயத்தில் ரோட்டில் கார்களில் நடக்கும் சண்டைக் காட்சிகள் அசல் அமெச்சூர் டிராமா . ஆனால் ஆரம்பம் முதலே ரசிகனை அந்த மூடுக்கு தயார்படுத்தி ரசிக்க வைக்கும் வகையில் டெக்னிக்கல் பிரில்லியன்ஸ் காட்டி இருக்கிறார்கள் கிரண் ஜோஷி, கிரிஷ் ஏ டி இருவரும் . அருமை
சேலத்தில் நடபதாக சில காட்சிகள், கொஞ்சம் தமிழ் வசனம் , நாயகனின் நண்பன் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகன் இப்படி தமிழ் ரசிகர்களைக் கவரும் அதே நேரம் கதை ஹைதராபாத்தில் நடப்பதாக வைத்து அந்த நேட்டிவிடியும் கொடுத்த வகையில் கிட்டத்தட்ட தென்னிந்தியப் படமாகி விட்டது இது.
துளித் துளியாய் விழும் மழை ஒரு குடத்தை நிரப்பி கணம் ஆக்குவது போல சின்னச் சின்ன காட்சிகளை அழகாக ஆக்கப்பூர்வமாக கோர்த்து , கடைசியில் கனம் காட்டிவிடுகிறார்கள் .
தெலுங்குப் படங்களில் கூட ஹைதராபாத் இவ்வளவு அழகாகக் காட்டப்படவில்லை என்று பாரட்டப்ப்படும்படியான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார் அஜ்மல் சபு.
விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை உணர்வுகளுக்கு கனம் சேர்க்கிறது . ஏகப்பட்ட வசனங்கள், சின்னச் சின்ன காட்சிகள் கொண்ட படத்தை அழகாகத் தொகுத்துத் தருகிறது ஆகாஷ் ஜோசப் வர்கீசின் படத் தொகுப்பு .
தொழில் நுட்பம் இப்படி என்றால் நடிக நடிகையர் தேர்வு அபாரம் . அழகான நாயகி மமிதா, எளிமையான அப்பாவி நாயகனாக நஸ்லென் , யதார்த்த நண்பனாக சங்கீத் பிரதாப் , சற்றே நாடகத்தனமான எலைட் சீனியராக ஷ்யாம் மோகன், என்று நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் சிறப்பு .
நாயகியின் தோழிகளைக் கூட ஜஸ்ட் கவர்ச்சிக்கு கலருக்கும் பயன்படுத்தாமல் தனித்தனி குணாதிசயங்களோடு பயன்படுத்தி இருக்கிறார்கள் . இயல்பாக இயல்பாக அகிலாவும் வாண்டர் லஸ்ட் தோழியாக நிஹாரிகாவும் சிறப்பு.
மிக முக்கியமாக கதையின் தன்மைக்கு ஏற்ப நாம் சாலைகளில் பார்க்கும் இயல்பான இளைஞன்தான் ஹீரோ . அவனுடைய அப்பாவித்தனம் தான் ஸ்கிரிப்டை அப்படி பலமாக ஆக்குகிறது . முக்கியமாக அந்தப் பையனிடம் ஜிம் பாடி இல்லை
ஆனால் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் பையன், ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைக்கிறான் . நடிப்புப் பயிற்சி தேவை இல்லை. உடல் பயிற்சி போதும் என்று ஆகி விட்டது இங்கே .
இங்கேதான் பிச்சைக்கார ஹீரோ கூட சிக்ஸ் பேக் வைத்து இருப்பான் அதனால்தான் இங்கே ஒரு நடிகன் மொளைச்சு மூணு இலை விடுவதற்குள் கதா ஆ ஆ ஆ நாயகன் ஆகி விடுகிறான் . ஒரு நல்ல கதைக்கு ஏற்ற கதை நாயகர்கள் இங்கே கிடைப்பது இல்லை .
இதே பிரேமலு படத்தை நேரடியாக தமிழில் எடுத்து இருந்தால் , கையிலும் காலிலும் கருணைக் கிழங்கை கட்டிக் கொண்டு நிற்கும் ஒருவன்தான் இங்கே ஹீரோவாக இருந்திருப்பான். கிளைமாக்ஸ் சவசவத்து இருக்கும் .
ஒன்று புரிகிறது . தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை திரும்புகிறது . அதாவது முந்தைய காலத்துக்குப் போகிறது . சின்ன படமோ பெரிய படமோ அதைப் புரிந்து, அந்த எண்பது தொண்ணூறுகளின் பாணியை அடிப்படையாக வைத்து, நவீன பூச்சு கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு அதற்கு நவீன பாணியில் மேக்கிங் கொடுக்கும் படங்களுக்கு இனி தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்
அதைத்தான் செய்து அசத்தி இருக்கிறது பிரேமலு