அதர்வாவை மன்னித்த பிரியா ஆனந்த்

priya anand
audio launch
ஆடியோ வெளியீடு

நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெய்ன் போவதை பார்த்திருக்கலாம் . ஒரு டிரைலர் போவதை பார்க்க முடியுமா ?

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க அதர்வா, பிரியா ஆனந்த் , நடிப்பில் அறிமுக இயக்குனரான யுவராஜ் போஸ் இயக்கும் இரும்புக் குதிரை படத்தின் டிரெய்லர் அப்படிதான் இருந்தது.

சட்டென்று குனிந்து பார்த்தால் காலுக்குக் கீழ் தரை ஓடுவது போல ஒரு பிரம்மை. அந்த அளவுக்கு விதவிதமான சூப்பர் பைக்குகள் டிரைலரிலும் பாடல்களிலும் பறக்கின்றன. படத்தில் இடம்பெறும் பல சூப்பர் பைக் காட்சிகளை இத்தாலியில் படம் பிடித்து இருக்கிறார்கள்.

தவிர, நடிகர்கள் விசயத்தில் இன்னும் இரண்டு பிரம்மாண்டங்களும் படத்தில் இருக்கு .

ஒன்று … ஏழாம் அறிவு  படத்தில் டாங் லீயாக நடித்து,  படம் பார்த்தவர்களின் ‘டங்’கை எல்லாம் ஸ்’லீ’ப்பாக வைத்த,  ஜானி டிரை ங்யூயென்தான் இந்தப் படத்திலும் வில்லன் . டிரைலரில் ஒரு ஷாட்டில் டேபிளில் இருந்து பாய்ந்து அடுத்தடுத்து நான்கு பேரை உதைத்து விட்டு தரையில் லேண்ட் ஆகிறார்.

அதே போல , இந்தியாவின் முதல் முதல் பைக் ரேஸ்  வீராங்கனையும் தேசிய பைக் ரேஸ் பெண் சாம்பியனுமான அலிஷா அப்துல்லா இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

adharva and lakshmi rai
பிரம்மாண்ட ராய்

உங்களுக்கு சம்மதம் என்றால் அடுத்து வரும் தகவலும் ஒரு பிரம்மாண்டம்தான் . ராய் லட்சுமி ஆகிவிட்ட லட்சுமிராய் !

இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் அவரும் இருக்கிறார். ராய் லட்சுமி என்ன திருப்புகழ் திருமுறை காவடி சிந்துகள் ஆண்டாள் திருப்பாவையா பாடுவார்? குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ்தான். (ஆனால் அந்த தொப்புள்தான் இடமிருந்து வலமாக கிழிக்கப்பட்டு ஆறிய காயத்தின் தழும்பு போலவே இருக்கு)

சூரியன் எப் எம் இல் பாடல் வெளியீட்டை நடத்தி விட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்த படக்குழுவினரில் ஒருவரான நாயகி ப்ரியா ஆனந்த்,   நிகழ்ச்சியில் மூன்றாவதாக பேசி விட்டு உடனே கிளம்பி ஓடியதைப் பார்த்தால் அம்மணி இன்னும் பைக்கில் இருந்து இறங்கவில்லையோ என்றே தோணியது .

கிளம்புவதற்கு முன்பாக “எங்களை வச்சு ரொம்ப செலவு பண்ணி பெரிய படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி . இத்தாலியில் நிறைய காட்சிகள் எடுத்தார்கள் . பைக்ல உட்காந்துட்டு போகவே பயமா இருந்தது . அதர்வா வேற என்னை ரொம்பவே பலமுறை பயமுறுத்தினார் . சரி அதெல்லாம் இங்க பேச வேணாம்னு விடறேன் ” என்று பெருந்தன்மையாக மன்னிப்ப்பது போல பேசினார் பிரியா ஆனந்த் . (வேற ஒண்ணும் இல்லியே?)

“பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச வளைவுல சொல்லிப் போக வந்த உன் சொக்கும் காதல ..” போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வரிகளை கொண்ட பாடல் உட்பட—நான்கு பாடல்களை எழுதிய தாமரை “பாடல் பதிவுக்கு என்னை கூப்பிடச் சொல்லி சொன்னேன்….. என்று ஒரு சைலன்ட் கேப் விட்டு  இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷை ஒரு சீரியஸ் பார்வை பார்த்தார் .அப்புறம் சமாளித்து , “ஒலிப்பதிவில்கவிஞர்கள்  இருந்தா பாடலின் தரம் உயரும் ” என்றார் . ஒருவேளை முழுசும் தேஞ்ச வளைவு கிடைக்குமோ என்னவோ !

ரஜினி நடித்த தாய்வீடு படத்தில் பப்பி லஹரி இசையில் வரும்” உன்னை அழைத்தது கண்..”பாடலின் ஆரம்ப இசையை இந்த இரும்புக் குதிரை படத்தின் ஒரு பாட்டில்  நுழைத்து இழுத்திருக்கும்  ஜிவி பிரகாஷ்,  தன் பேச்சில் ” இந்தப் படத்துல டப் ஸ்டெப், ஹிப் ஹாஃப் பாணியில் வித்தியாசமான இசை அமைச்சு இருக்கேன். டிரைலருக்கு நான் போட்டு இருக்கற இசையை மற்ற பல இசையமைப்பாளர்களே பாராட்டினாங்க.” என்று கூறிவிட்டு , தாமரைக்கு ஒரு ‘பொது’ நன்றி சொல்லி விட்டுப் போனார் .

press meet of irumbk kuthirai
இரும்புக் குதிரையின் குஷிக் குதிரைகள்

தாமரை தன் பேச்சில் “படத்தில் பைக் ரேஸ் சம்மந்தமான காட்சிகள் வருது . இப்போ சென்னையில பைக் ரேஸ் என்ற பெயரில் நடக்கிற அத்துமீறல் பெரிய பிரச்னையா இருக்கு . இந்த சமயத்துல நீங்க இந்தக் கதையோட வரீங்க. ஆனா கதை நடக்கிற இடம் பாண்டிச்சேரின்னு சொல்லி தப்பிச்சுட்டீங்க ” என்றும் கொளுத்திப் போட்டிருக்க,

ஆனால இதற்கு சற்றும் பதறாமல் பதில் சொன்ன இயக்குனர் யுவராஜ் போஸ் ” நிஜமான பைக் ரேசர் எப்போதும் விதிகளை மீற மாட்டான். ஹெல்மெட் போடாம வண்டி ஓட்ட மாட்டான். தவிர , ஒரு நாள் ஒரு முறை சாலையில் போக்குவரத்து விதியை மீறி வண்டி ஓட்டிய ஒருவனின் வாழ்வில் அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. எனவே இது விதி மீறலை ஊக்குவிக்கிற படம் அல்ல ” என்றார் பக்குவமாக .

இது இப்படி என்றால் அடேங்கப்பா போட வைக்கிறது அதர்வா சொல்லும் பைக் ரேஸ் தகவல்கள் .

“பொதுவா நம்ம ஊருல எல்லாம் சூப்பர் பைக்ல நாலு கியர்தான் இருக்கும். ஆனா இத்தாலியில இந்தப் படத்துக்காக நாங்க யூஸ் பண்ணின பைக்குகள்ல எட்டு கியர் இருந்தது. அஞ்சாவது கியரை போட்டாலே வண்டி 180 கிலோ மீட்டர் வேகத்தில பறக்க ஆரம்பிச்சுடும் . நான் அந்த பைக்குகளை ஓட்ட டிரெய்னிங் எடுத்துகிட்டேன். ஆனாலும் என்னால ஆறு கியர் வரைக்கும்தான் ஓட்ட முடிஞ்சது. எட்டாவது கியர்வரை போகவே இல்லை “என்றார் அதர்வா

எட்டாவது கியர் போகலைன்னா என்ன….

வெற்றி என்னும் எட்டுவதற்கு அரிய கியர் இந்தப் படத்துக்கு கிடைக்கட்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →