வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி , காஷ்மிரா பர்தேசி, தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன் , இளவரசு, அனிகா, மற்றும் பலர் நடிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஒரு மிகப் பெரிய கல்விக் குழுமத்தில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றும் நபருக்கும் ( ஹிப் ஹாப்) அங்கேயே டீச்சராக இருக்கும் ஒருத்திக்கும் ( காஷ்மிரா பர்தேசி) காதல்.
உடற்பயிற்சி ஆசிரியரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியின்( இளவரசு- வினோதினி) மகள் (அனிகா) கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கு எடுப்பாக உடை அணிந்து போக , அவளை சிலர் பாலியல் ரீதியாகச் சீண்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஏற்றுகின்றனர்.
அவள் வசிக்கும் தெருவே அவளை கேவலமாகப் பேச ( அதான் .. அதேதான் .. இருங்க இருங்க …. வர்றேன்) அவள் தற்கொலைக்கு முயல, அவளை உடற்பயிற்சி ஆசிரியர் காப்பாற்றுகிறார் . நம்பிக்கையூட்ட, அவளும் மனதில் மலர்கிறாள் . ஆனால் அடுத்த நாள் முகம் சிதறி செத்துக் கிடக்கிறாள் . தற்கொலை என்று போலீஸ் சொல்ல, வாய்ப்பில்லை என்பதை அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர் விசாரிக்க,
அந்தக் கல்விக் குழுமத்தின் தலைவர் (தியாகராஜன்) அவளை படுக்கைக்கு அழைத்த கதை தெரியவருகிறது .
அவரிடம் உடற்பயிற்சி ஆசிரியர் நியாயம் கேட்க , அவர் அழிச்சாட்டியம் செய்யவும் பேசவும் செய்ய, தனது நிறுவன முதலாளி என்றும் பாராமல் அவரை உடற்பயிற்சி ஆசிரியர் அடிக்க,
பிரச்னை பெரிதாகிறது . நாயகனை ஒரு வழி பண்ண கல்வி குழுமத் தலைவர் முயல , அவரின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க அவன் முயல நடந்தது என்ன என்பதே படம்.
ஒரு பெண் தனது ரசனைக்கு ஏற்றவாறு உடை அணிவது அவள் உரிமை ; அதை வைத்து அவளை தவறாகப் பேசவும் நடத்தவும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை சொன்னதற்காகப் பாரட்டலாம் .
எல்லாப் பெண்களும் ஏதாவது ஒரு நிலையில் ஆணாதிக்க ஆணவத்தின் பாலியல் சீண்டலை சற்றேனும் சந்தித்துக் கடந்துதான் வந்திருப்பார்கள். என்னதான் காலம் மாறினாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநியாயம் மாறவில்லை என்பதை சொன்ன காட்சியும் அருமை . இந்த காட்சிக்காகவும் இயக்குனரைப் பாராட்டலாம் .
படத்துக்கு மிக அட்டகாசமாக பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி,
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு,
அட்டகாசமான நடிப்பால் அசத்துகிறார் இளவரசு .
சட்டத்துறையில் மேட்டுக் குடியின் ஆணவத்தைக் காட்ட, மதுவந்தியைப் பிடித்துப் போட்டு நடிக்க வைத்ததும் குறும்பு
சரிதான்.. ஆனால் ஒரு பொறி உருண்டைக்காக பூமி உருண்டையையே சுமக்க முடியாது இல்லையா?
விரும்பி தவறிழைத்து அம்பலப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை தெருவில் உள்ளோர் கேவலமாகப் பேசுவது சகஜம். ஆனால் ரசனையாக உடை அணிந்து போன ஒரு பெண்ணை சிலர் பாலியல் சீண்டல் செய்து , அதை வீடியோ எடுத்து அம்பலப்படுத்துவார்களாம்.
அதற்காக ஏரியாவில் தெருவில் உள்ள பெரிசுகள், சிறுசுகள், பொடுசுகள், குஞ்சு , கொளவான் எல்லாம் அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது எல்லாம் கேவலமாகப் பேசுவார்களாம் . அப்படி ஒரு ஊரு எங்கப்பா இருக்கு. இருந்தா அந்த ஏரியாவையே கொளுத்திடலாம்
அல்லது இப்படி ஒரு காட்சியை எழுதி எடுத்து ஏற்று திரைக்கு கொண்டு வந்தவர்கள் எல்லாம் எந்த ஊரில் எந்த கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து இருக்கிறார்கள் . அல்லது எத்தனை வருஷம் உள்ள இருந்துட்டு வந்தார்கள் ?. நான் சென்ஸ் . அதுவும் அந்தக் காட்சிகளை எடுத்து இருக்கும் விதம் வேறு அரைவேக்காட்டுத்தனம் .
நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி முதல் படத்தில் கொடுத்த எக்ஸ்பிரஷன்களிலேயே ஃப்ரீஸ் ஆகி விட்டார், ஆனால் உற்சாகமாக!
பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி மாதிரி இருக்கிறார் காஷ்மீரா பர்தேசி . அவருக்கான உடை வடிவமைப்பு வேறு இன்னும் அவரை பரிதாபப்படுத்துகிறது . ஸ்கூல் டிராமா பிள்ளைகள் கூட இன்னும் சிறப்பாக நடித்து இருக்கும் .
அவரைக் கூட மன்னிக்கலாம் . உணர்ச்சிகரம் என்ற பெயரில் வினோதினி வைத்தியநாதன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நடிப்பைக் கொந்திக் குதறுகிறார் பாருங்கள், பத்து நிமிடம் அதைப் பார்க்க வைத்தால் ஞானிக்கும் B P வரும். இரும்பு போல் வலிமை கொண்டவனும் இதய நோயாளி ஆவான் .(ஏதும் சீக்ரெட் ‘டாஸ்க்’கா வினோ?)
இன்னும் ஜோசியக்காரர்கள் நடக்கப் போகும் விபரீதத்தை அடிக் குரலில் சொல்லும் காட்சிகள்.. அது அப்படியே நடப்பது எல்லாம் தாங்கல சாமிகளா.
காஷ்மிரா கதாபாத்திரத்தின் பணக்கார அதிரடி அப்பா பிரபல கிரிமினல் லாயர், அவர் வீட்டில் வைத்தே குற்றவாளிகளை அடிப்பார் போன்ற காட்சிகள் எல்லாம் இந்தப் படத்தில் என்ன சூஸ்பரிக்குத் தேவை என்றே தெரியவில்லை.
“பேரு வச்சீங்களே… கொஞ்சமாச்சும் சோறு வச்சீங்களாப்பா/” என்று கேட்கும் என்ற அளவுக்கு பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபு , கேரக்டர்கள் பல்லிளிக்கிறது .
தியாகராஜன் மட்டும் மயிரிழையில்…சரி வேண்டாம், நூலிழையில் தப்பிக்கிறார்.
பெண்ணின் உடை உரிமை , இன்னும் பெண்களால் தவிர்க்க முடியாத பாலியல் சீண்டல் சூழல் போன்றவற்றுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை குறைத்து விட்டு வழக்கமான கதை திரைக்கதைக்கு காட்சிகளை வாரி வாரி இறைத்து இருக்கிறார்கள். அதாவது ஒரு சாப்பாட்டில் ஊறுகாய் அளவுக்கே சோறும், சோறு அளவுக்கு ஊறுகாயும் இருந்து அந்த ஊறுகாயும் ருசிக்கவில்லை என்றால் எப்படி இருக்கும்?
தேவை இல்லாத காட்சிகளை இந்தப் படத்தில் இருந்து தூக்கினால் மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே இந்தப் படம் ஓடும்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எதிலும் சொல்ல வேண்டிய அடிப்படைக் கருத்துக்கான மெச்சூரிட்டி இல்லை.
இந்தப் படத்தை தயாரித்த ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன் அவர்களின் இதயதெய்வமான அமரர் எம் ஜி ஆர் பி டி மாஸ்டராக நடித்த ஆனந்த ஜோதி படத்தை ஒரு முறை போட்டுப் பார்த்து, பரிகாரம் செய்து கொள்வது நலம்.
மொத்தத்தில் பி டி சார்… ஆப்சென்ஸ் சார் .