புலன் விசாரணை 2 @ விமர்சனம்

pulan

அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க, பிரசாந்த், ஆர்.கே. ராதாரவி, பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், கார்த்திகா, பாருள் யாதவ், அஸ்வினி ஆகியோர் நடிக்க, புலன் விசாரணை படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆர்.கே செல்வமணியின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் புலன் விசாரணை-2

படம் எப்படி இருக்கிறது என்று விமர்சன விசாரணை செய்து பார்ப்போமா?

அரசு பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் குழு ஒன்று குழு மணாலிக்கு சுற்றுலா செல்லும்போது பேருந்து அதலபாதாளத்தில் உருண்டு வெடித்து சிதறுகிறது. பஸ்ஸில் இருந்த எல்லோரும் எரிந்து போகிறார்கள் . ஆனால் பஸ் உருள்வதற்கு முன்பு பஸ்ஸை தவற விட்ட ஒரு பெண் பொறியாளர், தான் உயிர் பிழைத்து விட்டதை நிறுவனத்தின் சேர்மேனுக்கு தெரிவிக்க, அவளை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது .

கொலைகாரர்களால் சுடப்பட்டு குற்றுயிராக்கப்படும் அந்த பெண்ணை டெல்லி போலீஸ் அதிகாரி சபாரத்தினம் (பிரசாந்த்) காப்பாற்றுகிறார் . மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது திட்டமிட்டு கொலை செய்கிறார்கள் .

எல்லோரும் சிக்கிய விபத்தில் ஒரு பெண்ணாவது தப்பினாளே என்று சந்தோஷப்படாமல் ஏன் இப்படி விடாமல் தீர்த்துக் கட்டினார்கள் என்று சந்தேகப்படும் சபாரத்தினம் , ஒரு நிலையில் அந்த விபத்தில் இறந்து போன அனைவரின் உடல்களையும் மறு போஸ்ட்மார்ட்டம் செய்ய , இறந்த பலரின் உடம்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்திருப்பது தெரிய வருகிறது .

பெட்ரோலியத்துறை சேர்மேன் (பிரமிட் நடராஜன் ) , அடுத்து ஒரு படு பயங்கர கொலைகாரன் (ஆனந்த ராஜ் ) என்று சபாரத்தினம் புலன் விசாரணை செய்துகொண்டே போக… அது கேத்தன் (ஆர்.கே) என்ற பிரபல கொடீஸ்வரரிடம் போய் நிற்கிறது .

வங்காள விரிகுடா கடலில் மாபெரும் பெட்ரோல் ஊற்று இருப்பதை அரசு பெட்ரோலியத்துறை அதிகாரிகள் கண்டு பிடிக்க , அதை அறிந்து கொண்ட கேத்தன் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி , அந்த திட்டத்தை அரசு கைவிடும் என்று அறிவிக்க வைக்கிறார் . பின்னர் அந்த இடத்தை தான் வாங்கி , தனியார் பெட்ரோலியக் கிணறு அமைத்து ஆயிரக்கணக்கான லட்சங் கோடிகள் சம்பாதிப்பது அவரது திட்டம் .

ஆனால் அதைக் கண்டு பிடித்த பொறியாளர்கள அதற்கு உடன்படாமல் , அரசு அந்த திட்டத்தை கைவிடக் கூடாது என்று சேர்மேனை வற்புறுத்த, சேர்மன் கேத்தனிடம் உதவி கேட்க, கேத்தன் கொலைகார தாதாவை வைத்து பஸ்ஸை உருட்டி தப்ப முயன்ற பொறியாளர்களை கொன்று பஸ்ஸை எரித்து இருப்பது புரிகிறது.

தான் சிக்கியதை உணர்ந்த கேத்தன் சேர்மேனையும் கொலைகார தாதாவையும் காறி உமிழ, கொதி நிலைக்கு போகும் கொலைகார தாதா, சபாரத்னத்தின் மனைவி , மகன் , மகள், அம்மா, அப்பா, மாமனார், மாமியார் , சித்தப்பா, மாமா , அக்கா, அக்கா பிள்ளைகள் என்று ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் சுட்டு சிதறடித்து கொன்று குவிக்க,

தான் மட்டும் உயிர் பிழைக்கும் சபா ரத்தினம் அடுத்து என்ன செய்தான் என்பதே இந்த புலன் விசாரணை 2 .

pulan-visaranai-2-

படத்தின் மிகப்பெரிய சிறப்பு, லியாகத் அலிகானின் வசனத்தோடு சேர்ந்து ஆர்.கே செல்வமணி தொட்டுக்காட்டும் சமூக அக்கறை விஷயங்கள்.

பாகிஸ்தானிலும் பங்களாதேசிலும் மற்றும் பக நம்மை விட ஏழை நாடுகளிலும் பெட்ரோல் லிட்டருக்கு 28 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கும் கிடைக்கும்போது இந்தியர்கள் மட்டும் ஏன் அதற்கு 64 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது … இங்கு மட்டும் பெட்ரோலுக்கு இறக்குமதி வரி , சுங்க வரி, கலால் வரி , கண்றாவி வரி என்று இத்தனை வரிகள் எதற்கு ? அந்த பணம் தனியார் முதலாளிகளின் சட்டைப் பைக்கு போவது ஏன் ?

நம்மை விட சிறிய தேசமான கியூபா , கரும்புச் சக்கையில் இருந்து எத்தனால் எடுத்து சுற்றுப் புறச் சூழலை கெடுக்காத பெட்ரோல் தயாரிப்பதோடு அதன் மூலம் விவசாயிகளுக்கும் நல்லது செய்யும் நிலையில் அதை விட பெரிய விவசாய தேசமான இந்தியாவில் எத்தனாலில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் திட்டத்துக்கு தடையாக உள்ள வேசி மகன்கள் யார் ….?

இந்த நாட்டில் அமைக்கப்படும் விசாரணக் கமிஷன்களின் பின்னால் உள்ள அயோக்கிய அரிசயல் என்ன?

பெரும் பணக்காரர்கள் கீரை வியாபாரம் வரை வந்து இந்த மண்ணின் மைந்தர்களான சிறு வியாபாரிகளை அழிக்கும் கொடுமையை எப்படி பொறுப்பது ?

குடியரசு என்று பேருக்கு சொல்லிக் கொண்டாலும் இந்த நாட்டை மறைமுகமாக பண முதலைகளே ஆண்டு கொண்டிருப்பதன் காரணம் என்ன?

–இது போன்ற பல கேள்விகளை படம் முழுக்க விதைத்து இருக்கிறார்கள். மனப்பூர்வமான பாராட்டுகள் !

விசாரணை அறையில் ரவுடியை போட்டு புரட்டி எடுக்கும் காட்சி நாம் பார்ப்பது சினிமா அல்ல என்ற உணர்வை அச்சு அசலாக ஏற்படுத்துகிறது .

இடைவேளையில் ஆனந்தராஜ் சபாரத்தினத்தின் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் காட்சி எடுக்கப்பட்ட விதத்தில் விதிர்விதிர்க்க வைக்கிறது.

மாலத் தீவில் முதன் முதலாக படம் பிடிக்கப்பட்ட தமிழ்ப்படம் என்று கூறப்படும் இந்தப் படத்தில் ஏர்—வாட்டர் டாக்சி என்ற பெயரில் பறக்கும் குட்டி விமானங்கள் அது தொடர்பான காட்சிகளும் கண்ணுக்கு விருந்து .

தனது பாணியில் பின்புல ஒளிவெள்ளத்தில் ஷாட்கள் வைத்து காட்சிகளை இயக்கி பிரம்மாண்டம் தந்து, புலன் விசாரணை முதல் பாகம் போலவே பரபரப்பாக விறுவிறுப்பாக படத்தைக் கொடுத்து இருக்கிறார் ஆர்.கே. செல்வமணி .

பெட்ரோலுக்கான சண்டை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லாமல் , ஒரு விபத்து, ஒரு கொலை , தோண்டினால் கொலை செய்யப்பட்ட பல பிணங்கள் என்று சஸ்பென்சாக திரைக்கதையை கொண்டு போய் ஒரு நிலையில் பெட்ரோல் பிரச்னயை ஒப்பன் செய்து அப்புறம் அதிரடி ஆக்ஷனுக்குள் இறங்கி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் .

வெகு ஜன மக்கள் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு , கமர்ஷியல் என்ற பெயரில் இரண்டு பாடல்களை படு கிளாமராக எடுத்து அதன் மூலம் இதை ஏ சர்டிபிகேட் படமாக சுருக்கிக் கொண்டது நியாயமா ?

புலன் விசாரணை — பலன் இருக்கட்டும் !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →