எஸ் கே டி பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்க, விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன்,பிரபு ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருக்கும் புலி .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழா ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது . ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா , வைரமுத்து , இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முதலியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் முக்கியமான சிறப்பு விருந்தினர்களாக விஜய்யை வைத்து வெற்றிப் படங்கள் கொடுத்த எழில், எஸ்.ஜே.சூர்யா , தரணி, பேரரசு , கே எஸ் ரவிகுமார் ஆகியோர் வந்து இருந்தார்கள் . இவர்களுடன் டி.ராஜேந்தர் !
சிம்பு நடிப்பில் உருவாகி, வெளியீட்டில் பல பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டு இருக்கும் வாலு படத்தின் வெளியீட்டுக்கு விஜய் உதவ முன்வந்திருக்கும் சூழலில் விஜய்யை மனதார வாழ்த்த வந்திருந்தார் டி.ஆர்.
நிகழ்ச்சி துவங்கியது ஏழு மணிக்கு என்றாலும் நாலரை மணி முதல் அரங்கின் வாசலில் நின்று , நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு சிறப்பு விருந்தினரையும் தனித்தனியாக வணங்கி வரவேற்று , பிரமுகர்களை அதிர்ந்து நெகிழ வைத்தார் விஜய் .
நிகழ்ச்சி நடந்த தினம் நண்பர்கள் தினம் மட்டுமல்லாது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளும் என்பதால் நிகழ்ச்சி இன்னும் ஸ்பெஷல் ஆனது .
படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றையும் மேடையில் ஒலிக்க , நடனக் குழுவினர் புலி படத்தின் தன்மைக்கு பொருத்தமான உடையில் நடனம் ஆடினார்கள் .
படத்துக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்ததோடு மட்டும் அல்லாமல் எழுதி ஆடி நடித்த ஒரு புரோமோ பாடல் திரையிடப்பட்டபோது விஜய் ஒன்ஸ்மோர் கேட்க மீண்டும் திரையிடப்பட்டது. அதன் பிறகு அதே பாடலை மேடையில் பாடி ஆடினார் தேவிஸ்ரீ பிரசாத். அப்போதும் ரசிகர்களுக்கு அலுக்கவில்லை அந்தப் பாடல்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்
” எனது மகனை பார்த்து ரொம்பப் பெருமைப்படுகிறேன் . எல்லோரும் அவரை வாழ்த்த வந்திருப்பது பெருமை . நான் அவருக்கு சினிமாவில் ஒரு அறிமுகம் மட்டுமே கொடுத்தேன் . ஆனால் விக்ரமன், எழில், பாசில், எஸ் ஜே சூர்யா , தரணி ,கே எஸ் ரவிகுமார் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள்தான் அவரை அடுத்த அடுத்த உயரங்களுக்கு கொண்டு போனார்கள். அவர்களுக்கும் அந்த படங்களை பணம் போட்டுத் தயாரித்த இயக்குனர்களுக்கும் நன்றி ” என்றார் .
“என் அப்பா அம்மாவை விட நான் மதிக்கும் நபர் விஜய் ” என்று பேரரசுவும் ,”கில்லி படம் பிரம்மாதாமாக வர காரணம் விஜய்தான் ” என்று தரணியும்
“விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம்தான் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது” என்று எஸ் ஜே சூர்யாவும பேசினார்கள் .
ஸ்ருதிஹாசன் பேசும்போது
“விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது வெகுநாள் ஆசை . அது நிறைவேறியதில் சந்தோசம். படத்தில் ஒரு பாடலை நானும் விஜய்யும் சேர்ந்து பாடி இருக்கிறோம். என்னை விட அவர் சிறப்பாக பாடி இருக்கிறார்” என்றார் .
“ரொம்ப வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் ” என்று ஆரம்பித்த ஸ்ரீதேவி
“படப்பிடிப்பில் விஜய் நடந்து கொள்ளும் விதம் , அவரது பணிவு , கனிவு எல்லாம் அவரை சிறந்த மனிதனாக காட்டுகிறது ” என்றார்
வைரமுத்து தன் பேச்சில் “இத்தனை வருட தமிழ்த் திரையுலக வரலாற்றில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமி அப்புறம் கமல்ஹாசன் இப்படி வெகு சில நடிகர்கள்தான் படத்தில் தாங்கள் நடிக்கும் எல்லா சூழலுக்குமான பாடல்களை தாங்களே பாடிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர்கள் . அந்த வரிசையில் விஜய்யும் வருவது அவரது சிறப்புகளில் ஒன்று ” என்றார் .
வழக்கம் போல தனது அடுக்குமொழித் தமிழால் அரங்கை உற்சாக ஊற்றாக்கிய டி.ராஜேந்தர்”நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நடிகன் வளர்ந்துவிட்ட பிறகு தன்னடக்கத்துடன் இருப்பது ரொம்ப கஷ்டம். விஜய் இருக்கிறார்.
எஸ்.ஏ.சி அவர்களும் நானும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது அவரை பார்ப்பது போன்றே நினைத்துக் கொள்வேன். அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல தந்தை, நல்ல இயக்குநர். தன்னுடைய மகன் விஜய்யை அவர் எப்படி படிப்படியாக உயர்த்தி கொண்டு வந்தாரோ அதை பார்த்து நான் பெருமைப்பட்டவன்.
ஏன் என்று கேட்டால் அவரை போலவே என் மகன் சிம்புவையும் நான் உருவாக்கி வருகிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
இயக்குனர் சிம்புதேவன் தன் பேச்சில்
“இந்தப் படம் விஜய் சார் படத்தில் இருக்கிற கமர்ஷியல் அம்சங்கள் எதையும் மிஸ் பண்ணாத படம் . அதே நேரம் இதுவரை பார்க்காத ஒரு புது விசயத்தையும் செய்து இருக்கிறோம் . படம் எல்லோருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும் ” என்றார் , அழுத்தமாக .
ஏற்புரை தந்த விஜய் படம் சம்மந்தப்பட்ட பலருக்கும் நன்றி கூறியதோடு “. “ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திர படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு… அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என்கிட்ட இந்த கதையை கொண்டு வந்தாரு, சந்தோஷமா பண்ணினோம்.
நாம உயிரோட இருக்குற வரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும், எனக்கு யாரையும் உண்மையா வெறுக்க தெரியுமே தவிர பொய்யாக நேசிக்க தெரியாது.
நான் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் என்னைப் பற்றி வந்த கிண்டல்கள் கேலிகள் எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல . அவற்றால் எல்லாம் நான் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்போது இங்கு வந்து நிற்க முடியாது . ஆனால் அவை எல்லாம் என்னை இன்னும் இன்னும் கடினமாக உழைக்க வைத்தது . கிண்டல் கேலிகளால் பாதிக்கப் படாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம்
ஆக , புலி ரெடி !