எஸ் கே டி ஸ்டுடியோஸ் சார்பில் ஷிபு கமல் தமீன் மற்றும் செல்வகுமார் தங்கசாமி தயாரிக்க, விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் , ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிப்பில் சிம்புதேவன் இயக்கி இருக்கும் படம் புலி .
பாய்ச்சல் எப்படி? பார்க்கலாம்.
மனிதர்கள் போலவே தோன்றினாலும் அதீத சக்தியும் பறக்கும் திறனும் நீலக் கண்களும், கோபத்தில் நீளும் கோரைப் பற்களும் கொண்ட வேதாள இனம் ஒன்று , மனித இனத்தையே பூண்டோடு அழிக்கப் பார்க்கிறது . அந்த வேதாள இன தேசத்தின் பிடியில் மனிதர்கள் வாழும் 56 கிராமங்களும் சிக்கி இருக்கின்றன .
அதில் ஒரு கிராமத்துத் தலைவர் (பிரபு) மனிதர்களை அந்த வேதாளங்களின் பிடியில் இருந்து மீட்க போராடி.. தோற்றுக் கொண்டிருக்கிறார்.
ஒருநாள் குழந்தை ஒன்று ஆற்றின் வழியே மிதந்து வருகிறது . அதை எடுத்து வளர்க்கிறார் . குழந்தை வளர்ந்து இளைஞன் மருதீரன் (விஜய்) ஆகிறது. அதே ஊரைச் சேர்ந்த பவழ மல்லியும் (ஸ்ருதிஹாசன்) மருதீரனும் காதலிக்கிறார்கள்.
வேதாள இனப் படை ஒரு நிலையில் பவழ மல்லியைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறது . மருதீரன் பவழ மல்லியை மீட்கக் கிளம்புகிறான் .
ஆமை முனிவர் , சித்திரக் குள்ளர்கள், பச்சைத் தவளை , பூடகமான சொல்லாடல் குறிப்புகள், ஒற்றைக்கண் அரக்கன் இப்படி பலர் மற்றும் பலவற்றின் உதவியோடு வேதாள நாட்டின் அரண்மனையைக் கண்டு பிடிக்கிறான் . வழியில் வேதாள இளவரசியை (ஹன்சிகா) கரும்புலியிடம் இருந்து காக்கிறான் .
அரண்மனையில் அதீத வேதாளத் திறமைகள் நிறைந்த அரசி (ஸ்ரீதேவி) , படைத் தலைவன் (சுதீப் ) இவர்களைப் பார்க்கிறான். அவர்களின் சந்தேகம் மற்றும் கோபத்துக்கும் ஆளாகிறான் .
உண்மையில் அரசி நல்லவர்தான் என்பதையும் படைத்தலைவன்தான் மந்திர தந்திர யந்திர வித்தைகள் மூலம் அரசியை, பெரும் சக்தி கொண்டு தவறான நபராக மாற்றி அனைத்துக் குற்றங்களையும் செய்ய வைக்கிறான் என்பதையும் மருதீரன் அறிகிறான் .
தவிர தான், புலி வேந்தன் (இன்னொரு விஜய்) என்ற ஒரு மக்கள் தலைவனின் மகன் என்பதையும் புலி வேந்தனையும் அவரது மனைவியையும் கொன்றது வேதாளப் படைத் தலைவன்தான் என்பதையும் மருதீரன் அறிகிறான்
இப்போது மருதீரன் முன்பு சில சவால்கள் உள்ளன. பவழ மல்லியை மீட்கவேண்டும் . அதற்கு அரசியை நல்லவராக்க வேண்டும். அதற்கு படைத் தலைவனை அழிக்க வேண்டும் . பழிக்குப் பழி வாங்கவும் வேண்டும் .
மருதீரன் என்ன செய்தான் என்பதே .. புலி .
மருதீரன் கேரக்டருக்கு நூறு சத வீத நியாயம் செய்து இருக்கிறார் விஜய். நடை உடை பாவனை , ஓடும் போது காட்டும் துள்ளல், அசத்தலான உடல் மொழிகள், சண்டைக் காட்சிகளில் சீறல் என்று பிரமிக்க வைக்கிறார் விஜய் .
கரிகால் சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற நிஜ அரசர்களின் வரலாற்றைப் படமாக ஆக்கினால் அதற்கு விஜய்யை விட பொருத்தமான நாயகன் வேறு யாரும் இருக்க முடியாது . புலித் தேவன் கதாபாத்திரத்திலும் நீண்ட கூந்தலுடன் வித்தியாசமான தோற்றத்தில் பிரம்மிக்க வைக்கிறார் .
புலி வேந்தன் என்ற பெயர் , குழந்தைகளைக் கொத்துக் கொத்தாகக் கொள்ளும் புலி வேந்தனின் எதிரிகளாக வேதாள இனம் .. அந்தக் காட்சியில் ‘குழந்தைகளை எல்லாம் கொன்னு என்னடா சாதிக்கப் போறீங்க ?’ என்ற வசனம் , இவற்றில் இன உணர்வோடு வெளிப்படுகிறார் இயக்குனர் சிம்புதேவன் . படம் முழுக்க அவரது ஃபிரேம்களும் அருமை . நெருப்பு வளையத்தில் விஜய் புகுந்து வரும் காட்சி திக் திக் திகீர் .
அழகுப் பதுமைகளாக ஸ்ருதியும் ஹன்சிகாவும் .
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் ஒகே . பின்னணி இசையில் சுரத்து கம்மி .
படத்தின் பெரும் பலம் நட்டி என்கிற நட்ராஜின் அற்புதமான ஒளிப்பதிவு . முத்துராஜின் உடைகள் வடிவமைப்பு மற்றும் கலை இயக்கம் இவையே உண்மையில் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் உடைகள் வடிவமைப்பும் பின்னிப் பிணைந்து மயக்குகின்றன .( நாயகிகளுக்கான மேக்கப் மட்டும் காலை வாருகிறது )
கணிப்பொறி வரைகலை பல இடங்களில் கொண்டாட வைக்கிறது . சில இடங்களில் மன்றாடி நிற்கிறது .
இப்படியாக , ஒளிப்பதிவு, கலை இயக்கம் , உடைகள் ஆகிய துறைகளை புலி உறுமல் உறும போதுமான களம் கொடுத்து விட்டு மௌனமாக வேடிக்கை பார்த்து நின்று விட்டதால்,
பலியாகி விட்டது இந்த புலியின் கதை திரைக்கதை வசன இயக்கம் !