எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை .
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா,
பிரபாகரன் -மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல் சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் குண்டுகளால் துளைத்து மண்ணில் சாய்ந்தது வரைக்குமான வாழ்க்கை , ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த்தின் எழுத்து இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, புலிப் பார்வை என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது என்பது தெரிந்த செய்திதான் .
(இது பற்றிய நமது முந்தைய கட்டுரையைப் படிக்க பார்க்கவும் http://nammatamilcinema.com/balachandran-life-story-in-pulipparvai/)
ஆனால் இந்தப் படம் உண்மையில் பாலச்சந்திரனை கேவலப்படுத்தி சிங்கள அரசு சொல்லும் கட்டுக்கதைகளுக்கு தமிழகம் கொடுக்கப் போகிற வஞ்சக சாட்சியாகவே இருக்கிறது என்று ஈழத் தமிழர்களும் இன உணர்வாளர்களும் கொந்தளிக்கின்றனர் என்பதுதான் எதிர்பாராத திருப்பம்.
நமது, நம்மதமிழ் சினிமா டாட்காமில் இந்த கட்டுரையை படித்த – யூ டியூபில் அதன் டிரைலரையும் பார்த்த தமிழகம் வாழ் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் முக நூல் மூலமாக நம்மை தொடர்பு கொண்டு தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.
“பாலச்சந்திரன் என்ற பால் மணம் மாறாத பாலகன் இனவெறி காரணமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டான் என்பதால்தான் அவனது மரணம் உலகத்தையே கண்ணீர் விட வைத்தது. ஆனால் இந்தப் படத்தில் பாலச்சந்திரன் விடுதலைப் புலிகளின் இராணுவ உடையை அணிந்து கொண்டு இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. நிஜத்தில் பாலச்சந்திரன் ராணுவ சீருடையில் இருந்தது போல ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியுமா ?” என்பது உணர்வாளர்களின் முதல் கேள்வி .
“ஒரு போலீஸ்காரர் மகன் சிறுவயதில் சந்தோஷத்துக்காக போலீஸ்காரர் போல உடை அணிவது இல்லையா ? அப்படி திரைக்கதையின் அழகுக்காக பாலச்சந்திரனை அந்த உடையில் சித்தரித்து இருக்கலாமே..” என்று நான் கேட்க , அதற்கு அவர்கள் “தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் படத்தின் டிரைலரில் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போல ஒரு நொடி கூட வரவில்லையே” என்றார்கள் .
“எல்லாவற்றையும் டிரைலரில் போட முடியாது அல்லவா? படத்தில் இருக்கலாமே?” என்றேன் நான்.
“சரி….உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ராணுவ சீருடையில் காட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அவன் கையில் துப்பாக்கியுடன் களமாடுவது போல புகைப்படம் இருக்கிறதே .அதற்கு என்ன அர்த்தம்? அவனுக்கு தலைவர் பிரபாகரன் ஆயுதப் பயிற்சி கொடுப்பது போன்ற காட்சிகளும் பாலச்சந்திரன் இயந்திரத் துப்பாக்கியை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குவது போலவும் காட்சிகள் இருக்கிறதே . அதற்கு என்ன அர்த்தம் ?
அவனும் விடுதலைப்போராட்ட வீரன் அதாவது போராளி அதாவது தீவிரவாதி! எந்த வயதுள்ளவர்களாக இருந்தாலும் களமாடுபவர்கள் போர்க்களத்தில் கொல்லப்படுவது சகஜம்தான். எனவே பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் இனத் துவேஷமோ , அநியாயமோ அக்கிரமமோ எதுவும் இல்லை என்ற சிங்கள அரசின் வாதத்துக்கு வலு சேர்க்கும் அயோக்கியத்தனம்தானே இது ?” என்கிறார்கள் அவர்கள்.
“முழுப் படத்தையும் பார்க்காமல் இப்படி முடிவு செய்வது சரியா ? “என்றால் ” ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் . படம் எப்படி இருக்கும் என்பதுதான் டிரைலரிலும் புகைப்படங்களிலும் தெரிகிறதே ” என்கிறார்கள்
தொடர்ந்து பேசும்போது “பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று ஒரு பொய்யை சொல்லி வருகிறது இலங்கை அரசு. பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானபோது “பாலச்சந்திரன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை. அவன் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளி” என்று சுப்பிரமணிசாமியிடம் இருந்து அபாண்டமான பொய் அறிக்கை வந்தது. அதை நியாயப்படுத்துவது போல இந்தப் படத்தில் காட்சிகள் இருக்கின்றன.
இந்தப் படம் வெளி வந்தால், ‘பார்த்தீர்களா ? கைது செய்யப்பட புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால்தான் நாங்கள் சுட்டுக் கொன்றோம் என்பது இப்போதாவது புரிகிறதா?”என்று இந்தப் படத்தை வைத்தே இலங்கை அரசு தாங்கள் செய்த பஞ்சமா பாதகத்தை நியாயப்படுத்திக் கொள்ளும். அதற்குதான் இந்தப் படம் எடுக்க்கப்படுகிறதா?” என்று கேட்டபோது நம்மிடம் பதில் இல்லை.
மேற்கொண்டு அவர்கள் சொல்லும் சில விசயங்கள்தான் பகீர் ரகம்
“இந்தப் படத்தின் சில காட்சிகள் இலங்கை அரசின் உதவியோடு இலங்கையிலேயே படமாக்கப்பட்டதாக ஒரு செய்தி வருகிறது . இந்த கதையை இலங்கை தூதரகத்தில் கொடுத்து ஆலோசனை பெற்றதாகவும் முழுக் கதையையும் சென்சார் போர்டிடம் முன்பே காட்டி ஒப்புதல் பெற்றது கூட அவர்களின் வழிகாட்டுதல்படிதான் என்றும் செய்திகள் வருகின்றன.” என்கிறார்கள் உறுதியோடு
இந்த குற்றச் சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல என்றால் ..உண்மையிலேயே பாலச்சந்திரன் என்ற கள்ளங்கபடில்லாத சிறுவன் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டதை உலகுக்கு மனிதாபிமானத்தோடு சொல்வதுதான் புலிப் பார்வை படத்தின் நோக்கம் என்றால் …
அதை தெளிவாக விளக்க வேண்டிய கடமை படக் குழுவுக்கு இருக்கிறது .
காரணம்.. துரோகங்கள் தொடர்ந்து வெல்வதில்லை !